பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே.
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார் சீலமே சொலீர், காலன் வீடவே!
ஆலநீழலார், ஆலவாயிலார், காலகாலனார் பால் அது ஆமினே!
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய் பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்மினே!
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் பாடியே, மனம் நாடி, வாழ்மினே!
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை எண்ணியே தொழ, திண்ணம் இன்பமே.
அம் பொன்-ஆலவாய் நம்பனார் கழல் நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் உரைக்கும் உள்ளத்தார்க்கு, இரக்கம் உண்மையே.
அருவன், ஆலவாய் மருவினான்தனை இருவர் ஏத்த, நின்று உருவம் ஓங்குமே.
“ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த் தேர் அமண் செற்ற வீரன்” என்பரே.
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன், முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே.