பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு மான் மழு ஏந்தும் அம் கையன், நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து உலவினான், அடி உள்க, நல்குமே.
குறைவு இல் ஆர் மதி சூடி, ஆடல் வண்டு அறையும் மா மலர்க்கொன்றை சென்னி சேர் இறைவன், இந்திரநீலப்பர்ப்பதத்து உறைவினான்தனை ஓதி உய்ம்மினே!
என் பொன்! என் மணி! என்ன ஏத்துவார் நம்பன், நால்மறை பாடு நாவினான், இன்பன், இந்திரநீலப்பர்ப்பதத்து அன்பன், பாதமே அடைந்து வாழ்மினே!
நாசம் ஆம், வினை; நன்மைதான் வரும்; தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம் ஈசன், இந்திரநீலப்பர்ப்பதம் கூசி வாழ்த்துதும், குணம் அது ஆகவே.
மருவு மான்மடமாது ஒர்பாகம் ஆய்ப் பரவுவார் வினை தீர்த்த பண்பினான், இரவன், இந்திரநீலப்பர்ப்பதத்து அருவி சூடிடும் அடிகள் வண்ணமே!
வெண்நிலாமதி சூடும் வேணியன், எண்ணிலார் மதில் எய்த வில்லினன், அண்ணல், இந்திரநீலப்பர்ப்பதத்து உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே.
கொடி கொள் ஏற்றினர், கூற்று உதைத்தவர், பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர், அடிகள், இந்திரநீலப்பர்ப்பதம் உடைய வாணர், உகந்த கொள்கையே!
எடுத்த வல் அரக்கன் கரம்புயம் அடர்த்தது ஓர் விரலான், அவனை ஆட் படுத்தன், இந்திரநீலப்பர்ப்பதம் முடித்தலம் உற, முயலும், இன்பமே!
பூவினானொடு மாலும் போற்றுஉறும் தேவன் இந்திர நீலப்பர்ப்பதம் பாவியாது எழுவாரைத் தம் வினை கோவியா வரும்; கொல்லும், கூற்றமே.
கட்டர்குண்டு அமண், தேரர், சீர் இலர், விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம், எள் தனை நினையாதது என்கொலோ, சிட்டுஅதுஆய் உறை ஆதி சீர்களே?
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான், இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து அந்தம் இலியை ஏத்து ஞானசம் பந்தன் பாடல் கொண்டு ஓதி வாழ்மினே!