பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருநெல்வெண்ணெய் - திருமுக்கால்
வ.எண் பாடல்
1

நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும்,
நெல்வெணெய் மேவிய நீரே;
நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும்
சொல் வணம் இடுவது சொல்லே.

2

நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய்க்
கச்சு இள அரவு அசைத்தீரே;
கச்சு இள அரவு அசைத்தீர்! உமைக் காண்பவர்
அச்சமொடு அருவினை இலரே.

3

நிரை விரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரை விரி கோவணத்தீரே;
அரை விரி கோவணத்தீர்! உமை அலர்கொடு
உரை விரிப்போர் உயர்ந்தோரே.

4

நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர் மல்கி உறைய வல்லீரே;
ஊர் மல்கி உறைய வல்லீர்! உமை உள்குதல்
பார் மல்கு புகழவர் பண்பே!

5

நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே!
ஆடு இளம் பாப்பு அசைத்தீர்! உமை அன்பொடு
பாடு உளம் உடையவர் பண்பே!

6

நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய
பெற்றி கொள் பிறை நுதலீரே;
பெற்றி கொள் பிறைநுதலீர்! உமைப் பேணுதல்
கற்று அறிவோர்கள் தம் கடனே

7

நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய
கறை அணி மிடறு உடையீரே;
கறை அணி மிடறு உடையீர்! உமைக் காண்பவர்
உறைவதும் உம் அடிக்கீழே.

8

நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று
அரக்கனை அசைவு செய்தீரே;
அரக்கனை அசைவு செய்தீர்! உமை அன்பு செய்து
இருக்க வல்லார் இடர் இலரே.

9

நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று
இருவரை இடர்கள் செய்தீரே;
இருவரை இடர்கள் செய்தீர்! உமை இசைவொடு
பரவ வல்லார் பழி இலரே.

10

நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கெடுத்தீரே;
சாக்கியச் சமண் கெடுத்தீர்! உமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே.

11

நிலம் மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை,
நலம் மல்கு ஞானசம்பந்தன்
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ்,
சொல மல்குவார் துயர் இலரே.