பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும், வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்ச உடைத்தன, அஞ்சு எழுத்துமே.
மந்திர நால்மறை ஆகி, வானவர் சிந்தையுள் நின்று, அவர் தம்மை ஆள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே.
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர் ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர் ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே
நல்லவர் தீயவர் எனாது, நச்சினர் செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ; கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து; அகத்து அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்; தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும், வெம்மை நரகம் விளைந்த போழ்தினும், இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும், அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே.
வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர் பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும் மாடு கொடுப்பன; மன்னு மா நடம் ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே.
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின; பண்டை இராவணன் பாடி உய்ந்தன; தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச் சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும், பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.
புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச் சித்தத்தவர்கள் தெளிந்து தேறின; வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார் பேணார்; அல்லோம், நாமே.
கொன்றை சூடி நின்ற தேவை அன்றி, ஒன்றும் நன்று இலோமே.
கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்; சொல்லாதாரோடு அல்லோம், நாமே.
கூற்று உதைத்த நீற்றினானைப் போற்றுவார்கள் தோற்றினாரே
காட்டுள் ஆடும் பாட்டு உளானை நாட்டு உளாரும் தேட்டு உளாரே.
தக்கன் வேள்விப் பொக்கம் தீர்த்த மிக்க தேவர் பக்கத்தோமே.
பெண் ஆண் ஆய விண்ணோர்கோவை நண்ணாதாரை எண்ணோம், நாமே.
தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை, ஆத்தம் ஆக, ஏத்தினோமே.
பூவினானும், தாவினானும், நாவினாலும் ஓவினாரே.
மொட்டு அமணர், கட்டர்தேரர், பிட்டர் சொல்லை விட்டு உளோமே.
அம் தண் காழிப் பந்தன் சொல்லைச் சிந்தை செய்வோர் உய்ந்து உளோரே
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது; வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே.
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால், வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது; செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எலாம்; நம்பன் நாமம் நமச்சிவாயவே.
நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தகுவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே.
இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்; நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன், நாமம் நமச்சிவாயவே.
கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின், எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லான் நாமம் நமச்சிவாயவே.
மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய பந்தனையவர் தாமும் பகர்வரேல், சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே
நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும், உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால்- வரதன் நாமம் நமச்சிவாயவே
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல் தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும், மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை நலம் கொள் நாமம் நமச்சிவாயவே.
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன் பாதம் தான் முடி நேடிய பண்பராய், ஆதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர் ஓதும் நாமம் நமச்சிவாயவே.
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள் வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்- விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய் நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே.
“நந்தி நாமம் நமச்சிவாய!” எனும் சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் பந்தபாசம் அறுக்க வல்லார்களே.
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்! வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக! ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!
அரிய காட்சியராய், தமது அங்கை சேர் எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும் கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும், பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே?
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே, தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்; எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ!
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா; கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார்
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி; மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்! சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக் கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில், நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே?
கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே!
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம் ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய, பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே!
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி, நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப் போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே!
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும் பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி, கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே!
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும், தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப் பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில், பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே!
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல், பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும், வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே!