பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்பாதிரிப்புலியூர்
வ.எண் பாடல்
1

ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய்,
மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.

2

பற்று ஆய் நினைந்திடு, எப்போதும்!-நெஞ்சே!-இந்தப் பாரை முற்றும்
சுற்று ஆய் அலைகடல் மூடினும் கண்டேன், புகல் நமக்கு;
உற்றான், உமையவட்கு அன்பன், திருப் பாதிரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியினான்தன மொய்கழலே.

3

விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு இங்கு
அடையா, அவலம்; அருவினை சாரா; நமனை அஞ்சோம்;
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே?

4

மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும்-திருப் பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே.

5

“வைத்த பொருள் நமக்கு ஆம்” என்று சொல்லி, மனத்து அடைத்து
சித்தம் ஒருக்கி, “சிவாயநம” என்று இருக்கின் அல்லால்,
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ?-அறிவு இலாப் பேதைநெஞ்சே!

6

கருஆய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்;
உருஆய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனது அருளால்,
திருவாய் “பொலியச் சிவாயநம” என்று நீறு அணிந்தேன்;
தருவாய், சிவகதி நீ!-பாதிரிப்புலியூர் அரனே!

7

எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்!
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே!
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க்
கண் ஆர் நுதலாய்!-கழல் நம் கருத்தில் உடையனவே.

8

புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!

9

மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழ் உலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல், நெஞ்சே!
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப்புலியூர்க்
கண் பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே.

10

திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு, திகைத்து, முத்தி
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர்
இருந்தாய்! அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே!