பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருநெல்வாயில் அரத்துறை
வ.எண் பாடல்
1

கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
உடல் உளானை, ஒப்பாரி இலாத எம்
அடல் உளானை, அரத்துறை மேவிய
சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

2

கரும்பு ஒப்பானை, கரும்பினில் கட்டியை,
விரும்பு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.

3

ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும்(ம்) இறை
வேறு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை, அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

4

பரப்பு ஒப்பானை, பகல் இருள் நன்நிலா
இரப்பு ஒப்பானை, இளமதி சூடிய
அரப்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

5

நெய் ஒப்பானை, நெய்யில் சுடர் போல்வது ஓர்
மெய் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
ஐ ஒப்பானை, அரத்துறை மேவிய
கை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

6

நிதி ஒப்பானை, நிதியின் கிழவனை,
விதி ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அதி ஒப்பானை, அரத்துறை மேவிய
கதி ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

7

புனல் ஒப்பானை, பொருந்தலர் தம்மையே
மினல் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அனல் ஒப்பானை,- அரத்துறை மேவிய
கனல் ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.

8

பொன் ஒப்பானை, பொன்னில் சுடர் போல்வது ஓர்
மின் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அன் ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானை, - கண்டீர்- நாம் தொழுவதே.

9

காழியானை, கன விடை ஊரும் மெய்
வாழியானை, வல்லோரும் என்ற இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை
ஊழியானை, கண்டீர்- நாம் தொழுவதே.

10

கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை,
மலை ஒப்பானை, மணி முடி ஊன்றிய
அலை ஒப்பானை, அரத்துறை மேவிய
நிலை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.