பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், விரவலாமை சொல்லி, “திடுகு மொட்டு” எனக் குத்தி, கூறை கொண்டு, ஆறு அலைக்கும் இடம் முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இடுகு நுண் இடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
வில்லைக் காட்டி வெருட்டி, வேடுவர், விரவலாமை சொல்லிக் கல்லினால் எறிந்திட்டும், மோதியும், கூறை கொள்ளும் இடம் முல்லைத்தாது மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய், எல்லைக் காப்பது ஒன்று இல்லை ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
பசுக்களே கொன்று தின்று, பாவிகள், பாவம் ஒன்று அறியார், உசிர்க் கொலை பல நேர்ந்து, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம் முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இசுக்கு அழியப் பயிக்கம் கொண்டு, நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
பீறல் கூறை உடுத்து, ஓர் பத்திரம் கட்டி, வெட்டனராய், சூறைப் பங்கியர் ஆகி, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம் மோறை வேடுவர் கூடி வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், ஏறு கால் இற்றது இல்லை ஆய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
தயங்கு தோலை உடுத்த சங்கரா! சாம வேதம் ஓதீ! மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்; முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன் பூண்டி நகர்வாய், இயங்கவும் மிடுக்கு உடையராய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
விட்டு இசைப்பன, கொக்கரை, கொடுகொட்டி, தத்தளகம், கொட்டிப் பாடும் துந்துமியொடு, குடமுழா, நீர் மகிழ்வீர்; மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இட்ட பிச்சை கொண்டு உண்பது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
வேதம் ஓதி, வெண்நீறு பூசி, வெண் கோவணம் தற்று, அயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர்; மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மா நகர்வாய், ஏது காரணம் ஏது காவல் கொண்டு, எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
பட அரவு நுண் ஏர் இடை, பணைத்தோள், வரி நெடுங்கண் மடவரல்(ல்) உமை நங்கை தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்; முடவர் அல்லீர்; இடர் இலீர்; முருகன் பூண்டி மா நகர்வாய்; இடவம் ஏறியும் போவது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
சாந்தம் ஆக வெண் நீறு பூசி, வெண்பல்-தலை கலனா, வேய்ந்த வெண் பிறைக் கண்ணி தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்; மோந்தையோடு முழக்கு அறா முருகன் பூண்டி மா நகர்வாய், ஏந்து பூண் முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே.
முந்தி வானவர் தாம் தொழும் முருகன் பூண்டி மா நகர்வாய்ப் பந்து அணை விரல் பாவை தன்னை ஓர் பாகம் வைத்தவனைச் சிந்தையில் சிவ தொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு எம் தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே.