பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருக்கூடலையாற்றூர்
வ.எண் பாடல்
1

வடிவு உடை மழு ஏந்தி, மதகரி உரி போர்த்து,
பொடி அணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்,
கொடி அணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

2

வையகம் முழுது உண்ட மாலொடு, நான்முகனும்,
பை அரவு இள அல்குல் பாவையொடும்(ம்), உடனே,
கொய் அணி மலர்ச் சோலைக் கூடலையாற்றூரில்
ஐயன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

3

ஊர்தொறும் வெண் தலை கொண்டு, “உண் பலி இடும்!” என்று,
வார் தரு மென்முலையாள் மங்கையொடும்(ம்) உடனே,
கூர் நுனை மழு ஏந்தி, கூடலையாற்றூரில்
ஆர்வன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

4

சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன்
பந்து அணவும் விரலாள் பாவையொடும்(ம்) உடனே,
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே!

5

வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ, நல்
சோதி அது உரு ஆகி, சுரிகுழல் உமையோடும்,
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில்
ஆதி இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

6

வித்தக வீணையொடும், வெண்புரிநூல் பூண்டு,
முத்து அன வெண் முறுவல் மங்கையொடும்(ம்) உடனே,
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

7

மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடைமேல
இழை நுழை துகில் அல்குல் ஏந்திழையாளோடும
குழை அணி திகழ் சோலைக் கூடலையாற்றூரில்
அழகன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

8

மறை முதல் வானவரும், மால், அயன், இந்திரனும்,
பிறை நுதல் மங்கையொடும், பேய்க்கணமும், சூழ,
குறள்படை அதனோடும், கூடலையாற்றூரில்
அறவன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

9

வேலையின் நஞ்சு உண்டு, விடை அது தான் ஏறி,
பால் அன மென்மொழியாள் பாவையொடும்(ம்) உடனே,
கோலம் அது உரு ஆகி, கூடலையாற்றூரில்
ஆலன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

10

கூடலையாற்றூரில் கொடி இடையவளோடும்
ஆடல் உகந்தானை, “அதிசயம் இது” என்று
நாடிய இன்தமிழால் நாவல ஊரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார் தம் வினை பற்று அறுமே.