பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஅதிகைத் திரு வீரட்டானம்
வ.எண் பாடல்
1

தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன்,
கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல் உடையானை, விடையானை, ”கறை கொண்ட கண்டத்து
அம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும்” என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன்-
எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறை போதும் இகழ்வன் போல் யானே! .

2

முன்னே எம்பெருமானை மறந்து என்கொல்? மறவா-தொழிந்து என்கொல்? மறவாத சிந்தையால் வாழ்வேன்;
“பொன்னே! நல்மணியே! வெண் முத்தே! செய் பவளக் குன்றமே! ஈசன்!” என்று உன்னையே புகழ்வேன்;
“அன்னே! என் அத்தா!” என்று அமரரால் அமரப் படுவானை, அதிகை மா நகருள் வாழ்பவனை,
என்னே! என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

3

“விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே! விண்ணவர் தம் பெருமானே! மண்ணவர் நின்று ஏத்தும்
கரும்பே! என் கட்டி!” என்று உள்ளத்தால் உள்கி, காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும் புனலும் சடைக்கு அணிந்து, வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில வைத்து அருளும் எந்தை,
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

4

நால்-தானத்து ஒருவனை, நான் ஆய பரனை, நள்ளாற்று நம்பியை, வெள்ளாற்று விதியை,
காற்றானை, தீயானை, கடலானை, மலையின் தலையானை, கடுங் கலுழிக் கங்கை நீர் வெள்ள-
ஆற்றானை, பிறையானை, அம்மானை, எம்மான்தம்மானை, யாவர்க்கும் அறிவு அரிய செங்கண்
ஏற்றானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

5

சேந்தர் தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும் உடையானை, அதிகை மா நகருள் வாழ்பவனை,
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் சடை இடையில் கயல் இனங்கள் குதி கொள்ளக் குலாவி,
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணக்கி, மறிகடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

6

மைம் மான மணிநீல கண்டத்து எம்பெருமான், வல் ஏனக் கொம்பு அணிந்த மா தவனை, வானோர்-
தம்மானை, தலைமகனை, தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை, தாழ்வரைக்கை வென்ற
வெம் மான மதகரியின் உரியானை, வேத-விதியானை, வெண்நீறு சண்ணித்த மேனி
எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

7

வெய்து ஆய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி, அருள் புரிந்து, வீடு பேறு ஆக்கம்
பெய்தானை, பிஞ்ஞகனை, மைஞ் ஞவிலும் கண்டத்து எண்தோள் எம்பெருமானை, பெண்பாகம் ஒருபால்
செய்தானை, செக்கர் வான் ஒளியானை, தீ வாய் அரவு ஆடு சடையானை, திரிபுரங்கள் வேவ
எய்தானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

8

பொன்னானை, மயில் ஊர்தி முருகவேள் தாதை, பொடி ஆடு திருமேனி, நெடுமால் தன் முடிமேல்-
தென்னானை, குடபாலின் வடபாலின் குணபால் சேராத சிந்தையான், செக்கர்வான் அந்தி
அன்னானை, அமரர்கள் தம் பெருமானை, கருமான் உரியானை, அதிகை மா நகருள் வாழ்பவனை,
என்னானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

9

திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவச் சிலை வளைவித்து, ஒரு கணையால்- தொழில் பூண்ட சிவனை,
கருந் தான மதகளிற்றின் உரியானை, பெரிய கண் மூன்றும் உடையானை, கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நால்-ஐந்தும், ஈர்-ஐந்து முடியும், உடையானைப் பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல்
இருந்தானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

10

என்பினையே கலன் ஆக அணிந்தானை, எங்கள் எருது ஏறும் பெருமானை, இசை ஞானி சிறுவன்-
வன் பனைய வளர் பொழில் சூழ் வயல் நாவலூர்க்கோன், வன்தொண்டன், ஆரூரன்- மதியாது சொன்ன
அன்பனை, யாவர்க்கும் அறிவு அரிய அத்தர்-பெருமானை, அதிகை மா நகருள் வாழ்பவனை,
என் பொன்னை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .