பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்; முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்; மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே, என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே? .
உம்பரும் வானவரும்(ம்) உடனே நிற்கவே, எனக்குச் செம்பொனைத் தந்து அருளி, திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்; எம்பெருமான்! அருளீர், அடியேன் இட்டளம் கெடவே! .
பத்தா! பத்தர்களுக்கு அருள் செய்யும் பரம்பரனே! முத்தா! முக்கணனே! முதுகுன்றம் அமர்ந்தவனே! மைத்து ஆரும் தடங்கண் பரவை இவள் வாடாமே, அத்தா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
மங்கை ஓர் கூறு அமர்ந்தீர்; மறை நான்கும் விரித்து உகந்தீர்; திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே, அங்கணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
மை ஆரும் மிடற்றாய்! மருவார் புரம் மூன்று எரித்த செய்யார் மேனியனே! திகழும் முதுகுன்று அமர்ந்தாய்! பை ஆரும்(ம்) அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்; ஐயா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
நெடியான், நான்முகனும்(ம்), இரவி(ய்)யொடும், இந்திரனும், முடியால் வந்து இறைஞ்ச(ம்) முதுகுன்றம் அமர்ந்தவனே! படி ஆரும்(ம்) இயலாள் பரவை இவள் தன் முகப்பே, அடிகேள்! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் வந்து அணவும் மதி சேர், சடை மா முதுகுன்று உடையாய்! பந்து அணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பே, அந்தணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
பரசு ஆரும் கரவா! பதினெண் கணமும் சூழ முரசார் வந்து அதிர(ம்), முதுகுன்றம் அமர்ந்தவனே! விரை சேரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, அரசே! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .
ஏத்தாது இருந்து அறியேன்; இமையோர் தனி நாயகனே! மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே! பூத்து ஆரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, கூத்தா! தந்து அருளாய், கொடியேன் இட்டளம் கெடவே! .
பிறை ஆரும் சடை எம்பெருமான்! “அருளாய்” என்று, முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன்-சொன்ன இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம், சிவலோகம் அதே .
நஞ்சி, “இடை இன்று நாளை” என்று உம்மை நச்சுவார் துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்! பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்! முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!
ஏரிக் கனகக்கமலம் மலர் அன்ன சேவடி ஊர் இத்தனையும் திரிந்தக்கால் அவை நோம்கொலோ? வாரிக்கண் சென்று வளைக்கப்பட்டு, வருந்திப் போய், மூரிக் களிறு முழக்கு அறா முதுகுன்றரே!
தொண்டர்கள் பாட, விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்! பண்டு அகம் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே? கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர் மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே!
இளைப்பு அறியீர்; இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என்? விளைப்பு அறியாத வெங் காலனை உயிர் வீட்டினீர்; அளைப் பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் முளைப்பிறைச் சென்னிச் சடைமுடி முதுகுன்றரே!
ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம் தொறும் பாடிப் படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ? மாடம், மதில், அணி கோபுரம், மணி மண்டபம், மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே!
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டு இடைக் குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே? மழை வளரும் நெடுங்கோட்டு இடை மதயானைகள், முழை வளர் ஆளி, முழக்கு அறா முதுகுன்றரே!
சென்று இல் இடைச் செடி நாய் குரைக்க, செடிச்சிகள் மன்றில் இடைப் பலி தேரப் போவது வாழ்க்கையே? குன்றில் இடைக் களிறு ஆளி கொள்ள, குறத்திகள் முன்றில் இடைப் பிடி கன்று இடும் முதுகுன்றரே!
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்தொறும் சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே? மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே!
செட்டு நின் காதலி ஊர்கள் தோறும் அறம் செய, “அட்டுமின், சில்பலிக்கு!” என்று அகம் கடை நிற்பதே? பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர்! பரிசு என்கொலோ? முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே!
எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என் சொலார்? பத்தியினால் இடுவார் இடைப் பலி கொண்மினோ! எத்திசையும் திரை ஏற மோதிக் கரைகள் மேல் முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரே!
முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரைப் பித்தன் ஒப்பான் அடித்தொண்டன்-ஊரன்-பிதற்று இவை தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்று இலார், எத்தவத்தோர்களும், ஏத்துவார்க்கு இடர் இல்லையே.