பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை, பேய் ஆய்த் திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்; வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை; பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது உந்தி மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றம் ஊர்தீ! கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், நீ! செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்! ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா! தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ! எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்) நகை செய்தாய்! மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்; வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்; தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்! தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர் ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா! தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே; செழு வார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அழகா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால் பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி, சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? .