பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருக்கச்சி அனேகதங்காவதம்
வ.எண் பாடல்
1

தேன் நெய் புரிந்து உழல் செஞ்சடை எம்பெருமானது இடம்; திகழ் ஐங்கணை அக்
கோனை எரித்து எரி ஆடி இடம்; குலவானது இடம்; குறையா மறை ஆம்
மானை இடத்தது ஓர் கையன் இடம்; மதம் மாறுபடப் பொழியும் மலை போல்
யானை உரித்த பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

2

கூறு நடைக் குழிகண் பகுவாயன பேய் உகந்து ஆட, நின்று ஓரி இட,
வேறுபடக் குடகத்தி(ல்)லை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம்;
ஏறுவிடைக் கொடி எம்பெருமான், இமையோர் பெருமான், உமையாள் கணவன்,
ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

3

கொடிகள் இடைக் குயில் கூவும் இடம்; மயில் ஆலும்(ம்) இடம்; மழுவாள் உடைய
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறைக்கண்டன் இடம்; பிறைத்துண்டம் முடிச்
செடி கொள் வினைப்பகை தீரும் இடம்; திரு ஆரும் இடம்; திரு மார்பு-அகலத்து
அடிகள் இடம்(ம்); அழல் வண்ணன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

4

கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை,
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில்-தங்க உவந்து அருள் செய்,
சங்குகுழைச் செவி கொண்டு, அருவித்திரள் பாய, (அ)வியாத் தழல் போல் உடை, தம்
அம் கை, மழுத் திகழ் கையன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

5

பைத்த படத்தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம்; பயிலப் புகுவார்
சித்தம் ஒரு நெறி வைத்த இடம்; திகழ்கின்ற இடம்; திருவான் அடிக்கே
வைத்த மனத்தவர், பத்தர், மனம் கொள வைத்த இடம்; மழுவாள் உடைய
அத்தன் இடம்(ம்); அழல்வண்ணன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

6

தண்டம் உடைத் தருமன் தமர் என்தமரைச் செயும் வன் துயர் தீர்க்கும் இடம்;
பிண்டம் உடைப் பிறவித்தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம்;
கண்டம் உடைக் கரு நஞ்சு கரந்த பிரானது இடம்; கடல் ஏழு கடந்து
அண்டம் உடைப் பெருமானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

7

கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால்
விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்;
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும்
அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

8

புல்லி இடம்; “தொழுது உய்தும்” என்னாதவர் தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்; விரவாது உயிர் உண்ணும் வெங்காலனைக் கால் கொடு வீந்து அவியக்
கொல்லி இடம் குளிர் மாதவி, மவ்வல், குரா, வகுளம், குருக்கத்தி, புன்னை,
அல்லி இடைப் பெடை வண்டு உறங்கும் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

9

சங்கையவர் புணர்தற்கு அரியான், தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர்
மங்கை அவள், மகிழச் சுடுகாட்டு இடை நட்டம் நின்று ஆடிய சங்கரன், எம்
அங்கையில் நல் அனல் ஏந்துமவன், கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேரகலத்து
அங்கையவன்(ன்) உறைகின்ற இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

10

வீடு பெறப் பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம்; வினை தீரும் இடம்;
பீடு பெறப் பெரியோர் திடம் கொண்டு மேவினர் தங்களைக் காக்கும் இடம்;
பாடும் இடத்து அடியான், புகழ் ஊரன், உரைத்த இம் மாலைகள் பத்தும் வல்லார்
கூடும் இடம்; சிவலோகன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே.