பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஒற்றியூர்
வ.எண் பாடல்
1

அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்; அதுவும் நான் படப் பாலது ஒன்று ஆனால்,
பிழுக்கை வாரியும் பால் கொள்வர்; அடிகேள்! பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்!
வழுக்கி வீழினும் திருப் பெயர் அல்லால், மற்று நான் அறியேன், மறு மாற்றம்;
ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

2

கட்டனேன் பிறந்தேன், உனக்கு ஆள் ஆய்; காதல் சங்கிலி காரணம் ஆக,
எட்டினால்-திகழும் திருமூர்த்தி! என் செய்வான், அடியேன் எடுத்து உரைக்கேன்?
பெட்டன் ஆகிலும், திருவடி, பிழையேன், பிழைப்பன் ஆகிலும் திருவடிக்கு அடிமை;
ஒட்டினேன், எனை நீ செய்வது எல்லாம்; ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

3

கங்கை தங்கிய சடை உடைக் கரும்பே! கட்டியே! பலர்க்கும் களை கண்ணே!
அங்கை நெல்லியின் பழத்து இடை அமுதே! அத்த! என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்?
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல, வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி,
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

4

ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால்; யாவர் ஆகில் என், அன்பு உடையார்கள்?
தோன்ற நின்று அருள் செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய்;
மூன்று கண் உடையாய்! அடியேன் கண் கொள்வதே கணக்கு வழக்கு ஆகில்,
ஊன்று கோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எலும் ஊர் உறைவானே! .

5

வழித்தலைப் படுவான் முயல்கின்றேன்; உன்னைப் போல் என்னைப் பாவிக்க மாட்டேன்;
சுழித்தலைப் பட்ட நீர் அது போலச் சுழல்கின்றேன்; சுழல்கின்றது, என் உள்ளம்;
கழித்தலைப் பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து, நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

6

மானை நோக்கியர் கண் வலைப் பட்டு, வருந்தி, யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி,
தேனை ஆடிய கொன்றையினாய்! உன் சீலமும் குணமும் சிந்தியாதே
நானும் இத்தனை வேண்டுவது; அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை,
ஊனம் உள்ளன தீர்த்து, அருள் செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

7

மற்றுத் தேவரை நினைந்து உனை மறவேன்; நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன்;
பெற்றிருந்து பெறா தொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன்;
முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என்? உனை நான் மறவேனேல்,
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

8

கூடினாய், மலை மங்கையை; நினையாய்; “கங்கை ஆயிரமுகம் உடையாளை
சூடினாய்” என்று சொல்லிய புக்கால், தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே;
வாடி நீ இருந்து என் செய்தி? மனனே! வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி,
ஊடினால், இனி ஆவது ஒன்று உண்டே? ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

9

மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா!
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்;
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ!
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

10

ஓதம் வந்து உலவும் கரை தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை, நாளும்
ஞாலம் தான் பரவப்படுகின்ற நால் மறை அங்கம் ஓதிய நாவன்-
சீலம் தான் பெரிதும் மிக வல்ல சிறுவன், வன் தொண்டன், ஊரன்-உரைத்த
பாடல் பத்து இவை வல்லவர் தாம் போய்ப் பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே .

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருவொற்றியூர்
வ.எண் பாடல்
1

பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்-
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே.

2

பந்தும் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார், செந்தீவண்ணர்,
எம்தம் அடிகள், இறைவர்க்கு இடம்போல்-
உந்தும் திரைவாய் ஒற்றியூரே.

3

பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்,
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்,
தவழும் மதி சேர் சடையாற்கு, இடம்போல்-
உகளும் திரைவாய் ஒற்றியூரே.

4

என்(ன்)னது எழிலும் நிறையும் கவர்வான்,-
புன்னை மலரும் புறவில்-திகழும்-
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்,
உன்னப்படுவான், -ஒற்றியூரே

5

பணம் கொள் அரவம் பற்றி, பரமன்,
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி,
வணங்கும் இடை மென்மடவார் இட்ட
உணங்கல் கவர்வான்,-ஒற்றியூரே.

6

படை ஆர் மழுவன், பலவெண் நீற்றன்,
விடை ஆர் கொடியன், வேத நாவன்,
அடைவார் வினைகள் அறுப்பான், என்னை
உடையான், உறையும்-ஒற்றியூரே.

7

சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன், வினையை வீட்ட
நன்றும் நல்ல நாதன், நரை ஏறு
ஒன்றை உடையான்,-ஒற்றியூரே.

8

கலவ மயில் போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப்படியான்,
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்,-
உலவும் திரைவாய் ஒற்றியூரே.

9

பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்;
எற்றும் வினைகள் தீர்ப்பார்;-ஓதம்
ஒற்றும் திரைவாய் ஒற்றியூரே.

10

ஒற்றி ஊரும் அரவும் பிறையும்
பற்றி ஊரும் பவளச் சடையான்
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாட, கழியும், வினையே.