பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவே நின்ற பாவவினைகள் தாம், பல, நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர்பிரான் இடம்- கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
இறங்கிச் சென்று தொழுமின், இன் இசை பாடியே! பிறங்கு கொன்றைச் சடையன், எங்கள் பிரான், இடம்- நிறங்கள் செய்த மணிகள், நித்திலம், கொண்டு இழி கறங்கு வெள்ளை அருவித் தண் கழுக்குன்றமே.
நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால் ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட- தோளும் எட்டும் உடைய மா மணிச்சோதியான், காளகண்டன், உறையும் தண் கழுக்குன்றமே.!
வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை! முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவு இடம்- பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம் மதம் மூன்று உடைக் களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன், இலை கொள் சூலப்படையன், எந்தைபிரான், இடம்- முலைகள் உண்டு தழுவிக் குட்டியொடு முசுக் கலைகள் பாயும் புறவின் தண் கழுக்குன்றமே!
மடம் உடைய அடியார் தம் மனத்தே உற விடம் உடைய மிடறன், விண்ணவர்மேலவன், படம் உடைய அரவன் தான், பயிலும்(ம்) இடம்- கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே
ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே உற ஞானமூர்த்தி, நட்டம் ஆடி, நவிலும்(ம்) இடம்- தேனும் வண்டும் மது உண்டு இன் இசை பாடியே, கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே.
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற வந்து, நாளும் வணங்கி, மாலொடு நான்முகன் சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே.
பிழைகள் தீரத் தொழுமின்பின் சடைப் பிஞ்ஞகன், குழை கொள் காதன், குழகன், தான் உறையும்(ம்) இடம்- மழைகள் சாலக் கலித்து நீடு உயர் வேய் அவை கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே!
பல் இல் வெள்ளைத் தலையன் தான் பயிலும்(ம்) இடம், கல்லில் வெள்ளை அருவித் தண் கழக்குன்றினை, மல்லின் மல்கு திரள்தோள் ஊர வனப்பினால் சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே!