பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
குண்டைக் குறள் பூதம் குழும, அனல் ஏந்தி, கெண்டை பிறழ் தெண் நீர்க் கெடில வடபக்கம், வண்டு மருள் பாட, வளர் பொன் விரி கொன்றை விண்ட தொடையலான் ஆடும், வீரட்டானத்தே.
அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக் கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி, சுரும்பு உண் விரிகொன்றைச் சுடர் பொன் சடை தாழ, விரும்பும் அதிகையுள் ஆடும், வீரட்டானத்தே.
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட, பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான், மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள், வேடம் பல வல்லான் ஆடும், வீரட்டானத்தே.
எண்ணார் எயில் எய்தான்; இறைவன்; அனல் ஏந்தி; மண் ஆர் முழவு அதிர, முதிரா மதி சூடி, பண் ஆர் மறை பாட, பரமன்-அதிகையுள், விண்ணோர் பரவ, நின்று ஆடும், வீரட்டானத்தே.
கரிபுன்புறம் ஆய கழிந்தார் இடுகாட்டில், திரு நின்று ஒரு கையால், திரு ஆம் அதிகையுள், எரி ஏந்திய பெருமான், எரிபுன் சடை தாழ, விரியும் புனல் சூடி, ஆடும், வீரட்டானத்தே.
துளங்கும் சுடர் அங்கைத் துதைய விளையாடி, இளங்கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி, வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள், விளங்கும் பிறைசூடி ஆடும், வீரட்டானத்தே.
பாதம் பலர் ஏத்த, பரமன், பரமேட்டி தம் புடை சூழ, புலித்தோல் உடை ஆக, கீதம் உமை பாட, கெடில வடபக்கம், வேத முதல்வன் நின்று ஆடும், வீரட்டானத்தே.
கல் ஆர் வரை அரக்கன் தடந்தோள் கவின் வாட, ஒல்லை அடர்த்து, அவனுக்கு அருள்செய்து, அதிகையுள், பல் ஆர் பகுவாய நகு வெண்தலை சூடி, வில்லால் எயில் எய்தான் ஆடும், வீரட்டானத்தே.
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்; பொடி ஆடு மார்பானை, புரிநூல் உடையானை, கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள், வெடி ஆர் தலை ஏந்தி, ஆடும், வீரட்டானத்தே.
அரையோடு அலர் பிண்டி மருவிக் குண்டிகை சுரை ஓடு உடன் ஏந்தி, உடை விட்டு உழல்வார்கள் உரையோடு உரை ஒவ்வாது; உமையோடு உடன் ஆகி, விரை தோய் அலர்தாரான் ஆடும், வீரட்டானத்தே.
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன், வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்துச் சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை, வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே.