பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்; விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.
தாயவன் உலகுக்கு, தன் ஒப்பு இலாத் தூயவன், தூ மதி சூடி, எல்லாம் ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும் சேயவன், உறைவு இடம் திரு வல்லமே.
பார்த்தவன், காமனைப் பண்பு அழிய; போர்த்தவன், போதகத்தின் உரிவை; ஆர்த்தவன் நான்முகன் தலையை, அன்று சேர்த்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
கொய்த அம் மலர் அடி கூடுவார் தம்- மை, தவழ் திருமகள் வணங்க வைத்து, பெய்தவன், பெரு மழை; உலகம் உய்யச் செய்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்; நேரிழையோடும் கூடி, தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே சேர்ந்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.
பதைத்து எழு காலனைப் பாதம் ஒன்றால் உதைத்து, எழு மா முனிக்கு உண்மை நின்று, விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே.
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று, ஆங்கு அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம் நிகழ்ந்தவர், நேடுவார், நேடச் செய்தே திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே.
பெரியவன்; சிறியவர் சிந்தைசெய்ய அரியவன்; அருமறை அங்கம் ஆனான்; கரியவன், நான்முகன், காண ஒண்ணாத் தெரியவன்; உறைவு இடம் திரு வல்லமே.
அன்றிய அமணர்கள், சாக்கியர்கள், குன்றிய அற உரை கூறா வண்ணம் வென்றவன், புலன் ஐந்தும்; விளங்க எங்கும் சென்றவன்; உறைவு இடம் திரு வல்லமே.
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று, நல்-தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் பற்றுவர், ஈசன் பொன்பாதங்களே.