பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவாலங்காடு
வ.எண் பாடல்
1

துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பு ஆய்
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு,
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

2

கேடும் பிறவியும் ஆக்கினாரும், கேடு இலா
வீடுமாநெறி விளம்பினார், எம் விகிர்தனார்
காடும் சுடலையும் கைக்கொண்டு, எல்லிக் கணப்பேயோடு
ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

3

கந்தம் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கனல் ஆடி,
வெந்தபொடி-நீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்
கொந்து அண் பொழில்-சோலை அரவின் தோன்றிக் கோடல் பூத்த,
அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

4

பாலமதி சென்னி படரச் சூடி, பழி ஓராக்
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார்
கோலம் பொழில்-சோலைப் பெடையோடு ஆடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

5

ஈர்க்கும் புனல் சூடி, இளவெண் திங்கள் முதிரவே
பார்க்கும் அரவம் பூண்டு ஆடி, வேடம் பயின்றாரும்
கார்க் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி, கருந்தேன் மொய்த்து,
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

6

பறையும் சிறு குழலும் யாழும் தம் பயிற்றவே,
மறையும் பல பாடி, மயானத்து உறையும் மைந்தனார்,
பிறையும் பெரும்புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

7

நுணங்குமறை பாடி ஆடி வேடம் பயின்றாரும்,
இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்று ஆய் இசைந்தாரும்
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு,
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

8

கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்து உண்ண,
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார், எம் இறைவனார்
பிணையும் சிறுமறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து
அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

9

கவிழ மலை, தரளக் கடகக் கையால் எடுத்தான் தோள்
பவழ நுனிவிரலால் பைய ஊன்றிப் பரிந்தாரும்
தவழும் கொடிமுல்லை புறவம் சேர நறவம் பூத்து
அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

10

பகலும் இரவும் சேர் பண்பினாரும், நண்பு ஓராது
இகலும் இருவர்க்கும் எரி ஆய்த் தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

11

போழம்பல பேசிப் போது சாற்றித் திரிவாரும்,
வேழம் வரும் அளவும் வெயிலே துற்றித் திரிவாரும்,
கேழல் வினை போகக் கேட்பிப்பாரும்; கேடு இலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

12

சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன்
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை,
வேந்தன் அருளாலே, விரித்த, பாடல் இவை வல்லார்
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆகச் சேர்வாரே.