பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு வெண் பிறையானை, பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை, இறையானை, ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து உறைவானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.
நொச்சியே, வன்னி, கொன்றை, மதி, கூவிளம், உச்சியே புனைதல் வேடம்; விடைஊர்தியான்; கச்சி ஏகம்பம் மேய கறைக்கண்டனை நச்சியே தொழுமின்! நும்மேல் வினை நையுமே.
பார் ஆரும் முழவம், மொந்தை, குழல், யாழ், ஒலி சீராலே பாடல் ஆடல் சிதைவுஇல்லது ஓர் ஏர் ஆர் பூங் கச்சி ஏகம்பனை, எம்மானை, சேராதார் இன்பம் ஆய நெறி சேராரே.
குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப் போய் மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன்கச்சியுள மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம் சென்று ஏய்க்கும் சிந்தையார்மேல் வினை சேராவே.
சடையானை, தலை கை ஏந்திப் பலி தருவார்தம் கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள புடையே பொன் மலரும் கம்பைக்கரை ஏகம்பம் உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.
மழுவாளோடு எழில் கொள் சூலப்படைவல்லார்தம் கெழு வாளோர், இமையார், உச்சி உமையாள் கங்கை வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம் தொழுவாரே விழுமியார்; மேல்வினை துன்னாவே.
விண் உளார்; மறைகள்வேதம் விரித்து ஓதுவார் கண் உளார்; கழலின் வெல்வார், கரி காலனை; நண்ணுவார் எழில் கொள் கச்சிநகர் ஏகம்பத்து அண்ணலார்; ஆடுகின்ற அலங்காரமே!
தூயானை, தூய ஆய மறை ஓதிய வாயானை, வாள் அரக்கன் வலி வாட்டிய தீயானை, தீது இல் கச்சித் திரு ஏகம்பம் மேயானை, மேவுவார் என் தலைமேலாரே.
நாகம் பூண்; ஏறுஅது ஏறல்; நறுங்கொன்றை, தார்; பாகம் பெண்; பலியும் ஏற்பர்; மறை பாடுவர்; ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே!
போதியார், பிண்டியார், என்று இவர் பொய்ந்நூலை வாதியா வம்மின்! அம் மா எனும் கச்சியுள ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம் நீதியால் தொழுமின்! நும்மேல் வினை நில்லாவே.
அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை, கந்து அண் பூங்காழிஊரன் கலிக்கோவையால் சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம் பந்தன் சொல் பாடி ஆட, கெடும், பாவமே.