பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஅஞ்சைக்களம்
வ.எண் பாடல்
1

தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே? சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே?
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே? அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே?
மலைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு,
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .

2

பிடித்து ஆட்டி ஓர் நாகத்தைப் பூண்டது என்னே? பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே?
பொடித்தான் கொண்டு மெய்ம் முற்றும் பூசிற்று என்னே? புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே?
மடித்து, ஓட்டந்து, வன் திரை எற்றியிட, வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய,
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .

3

சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே! சிறியார் பெரியார், மனத்து ஏறல் உற்றால்;
முந்தித் தொழுவார் இறவார்; பிறவார்; முனிகள் முனியே! அமரர்க்கு அமரா!
சந்தித் தடமால் வரை போல்-திரைகள் தணியாது இடறும் கடல் அம்கரை மேல்,
அந்தித்தலைச் செக்கர்வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .

4

இழைக்கும்(ம்) எழுத்துக்கு உயிரே ஒத்தியால்; இலையே ஒத்தியால்; உளையே ஒத்தியால்;
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால்; அடியார் தமக்கு ஓர் குடியே ஒத்தியால்
மழைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .

5

வீடின் பயன் என்? பிறப்பின் பயன் என்? விடை ஏறுவது என், மதயானை நிற்க?
கூடும் மலை மங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே?
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என்? நிதியம் பல செய்த கலச் செலவில்
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .

6

இரவத்து இடு காட்டு எரி ஆடிற்று என்னே? இறந்தார் தலையில் பலி கோடல் என்னே?
பரவித் தொழுவார் பெறு பண்டம் என்னே? பரமா, பரமேட்டி, பணித்து அருளாய்!
உரவத்தொடு, சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு,
அரவக் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!

7

“ஆக்கும் அழிவும் அமைவும், நீ” என்பன், நான்; “சொல்லுவார் சொல்பொருள் அவை, நீ” என்பன், நான்;
“நாக்கும் செவியும் கண்ணும், நீ” என்பன், நான்; நலனே! இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்-
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புகப் பெய்து கொண்டு, ஏற நுந்தி
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .

8

வெறுத்தேன், மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்; விளங்கும் குழைக் காது உடை வேதியனே!
இறுத்தாய், இலங்கைக்கு இறை ஆயவனை, தலை பத்தொடு தோள் பல இற்று விழ;
கறுத்தாய், கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம்; கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .

9

பிடிக்குக் களிறே ஒத்தியால்; எம்பிரான்! பிரமற்கும் பிரான்; மற்றை மாற்கும் பிரான்;
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரியச் சிலை தொட்டவனே! உனை நான் மறவேந்-
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .

10

எம் தம்(ம்) அடிகள், இமையோர் பெருமான், எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றன்,
அம் தண்கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை,
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர் கோன்-நம்பி ஊரன்-சொன்ன
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே .