பொன் இயலும் திருமேனி வெண் நீறு பொலிந்திடும் ஆகாதே?
பூ மழை, மாதவர் கைகள் குவிந்து, பொழிந்திடும் ஆகாதே?
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே?
வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே?
தன் அடியார் அடி என் தலைமீது தழைப்பன ஆகாதே?
தான் அடியோமுடனே உய வந்து, தலைப்படும் ஆகாதே?
இன் இயம் எங்கும் நிறைந்து, இனிது ஆக இயம்பிடும் ஆகாதே?
என்னை முன் ஆளுடை ஈசன், என் அத்தன், எழுந்தருளப் பெறிலே!