பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருமுதுகுன்றம்
வ.எண் பாடல்
1

மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட
தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.

2

தழை ஆர் வடவிடவீதனில் தவமே புரி சைவன்,
இழை ஆர் இடை மடவாளொடும், இனிதா உறைவு இடம் ஆம்
மழை வான் இடை முழவ, எழில் வளை வாள் உகிர், எரி கண்,
முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே.

3

விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாசவேதனை, ஒண்
தளை ஆயின தவிர, அருள் தலைவனது சார்பு ஆம்
களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு
முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே.

4

சுரர், மா தவர், தொகு கின்னரர் அவரோ, தொலைவு இல்லா
நரர் ஆன பல் முனிவர், தொழ இருந்தான் இடம் நலம் ஆர்
அரசார் வர அணி பொன்கலன் அவை கொண்டு பல் நாளும்
முரசு ஆல்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே.

5

அறை ஆர் கழல் அந்தன்தனை, அயில் மூஇலை, அழகு ஆர்
கறை ஆர் நெடுவேலின்மிசை ஏற்றான் இடம் கருதில்,
மறை ஆயினபல சொல்லி, ஒண்மலர் சாந்து அவை கொண்டு,
முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே.

6

ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி, எழில் விசயற்கு
ஓவாத இன் அருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில்
சாவாதவர், பிறவாதவர், தவமே மிக உடையார்,
மூவாத பல் முனிவர், தொழும் முதுகுன்று அடைவோமே.

7

தழல் சேர்தரு திருமேனியர், சசி சேர் சடை முடியர்,
மழ மால்விடை மிக ஏறிய மறையோன், உறை கோயில்
விழவோடு ஒலி மிகு மங்கையர், தகும் நாடகசாலை,
முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே.

8

செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன்
கதுவாய்கள் பத்து அலறீயிடக் கண்டான் உறை கோயில்
மது வாய செங் காந்தள் மலர் நிறைய, குறைவு இல்லா
முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே.

9

இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய,
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்-
புயல் ஆடு வண்பொழில் சூழ் புனல் படப்பைத் தடத்து அருகே
முயல் ஓட, வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே.

10

அருகரொடு புத்தர் அவர் அறியா அரன், மலையான்
மருகன், வரும் இடபக் கொடி உடையான், இடம் மலர் ஆர்
கருகு குழல் மடவார் கடிகுறிஞ்சி அது பாடி,
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே.

11

முகில் சேர்தரு முதுகுன்று உடையானை, மிகு தொல் சீர்
புகலிநகர் மறை ஞானசம்பந்தன், உரைசெய்த
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்
பகரும் அடியவர்கட்கு இடர், பாவம், அடையாவே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருமுதுகுன்றம்
வ.எண் பாடல்
1

தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்
நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே.

2

பற்றும் ஆகி வான் உளோர்க்கு, பல் கதிரோன், மதி, பார்,
எற்று நீர், தீ, காலும், மேலைவிண், இயமானனோடு,
மற்று மாது ஓர் பல் உயிர் ஆய், மால் அயனும் மறைகள்
முற்றும் ஆகி, வேறும் ஆனான் மேயது முதுகுன்றே.

3

வாரி, மாகம் வைகு திங்கள், வாள் அரவம், சூடி,
நாரி பாகம் நயந்து, பூமேல் நான்முகன்தன் தலையில்
சீரிது ஆகப் பலி கொள் செல்வன்; செற்றலும் தோன்றியது ஓர்
மூரி நாகத்து உரிவை போர்த்தான்; மேயது முதுகுன்றே.

4

பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ முந்நீர்
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும்,
நாடுதானும் ஊடும் ஓடி, ஞாலமும் நான்முகனும்
ஊடு காண, மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே.

5

வழங்கு திங்கள், வன்னி, மத்தம், மாசுணம், மீது அணவி,
செழுங் கல்வேந்தன் செல்வி காண, தேவர் திசை வணங்க,
தழங்கு மொந்தை, தக்கை, மிக்க பேய்க்கணம் பூதம் சூழ,
முழங்கு செந்தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே.

6

சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல் அரா, நல் இதழி,
சழிந்த சென்னி சைவவேடம் தான் நினைத்து, ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான், முக்கண் ஆதி, மேயது முதுகுன்றே.

7

மயங்கு மாயம் வல்லர் ஆகி, வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த
புயங்க ராக மாநடத்தன், புணர் முலை மாது உமையாள்
முயங்கு மார்பன், முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே.

8

ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும்(ம்) அறியாக்
கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும், கொய் மலரால்
ஏல இண்டை கட்டி, நாமம் இசைய எப்போதும் ஏத்தும்
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே.

9

உறி கொள்கையர், சீவரத்தர், உண்டு உழல் மிண்டர் சொல்லை
நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழுமின்!
மறி கொள் கையன், வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட
முறி கொள் மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே.

10

மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை,
பித்தர்வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன்......

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருமுதுகுன்றம்
வ.எண் பாடல்
1

நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.

2

அத்தன் முதுகுன்றை, பத்தி ஆகி, நீர்,
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே.

3

ஐயன் முதுகுன்றை, பொய்கள் கெட நின்று,
கைகள் கூப்புவீர்! வையம் உமது ஆமே.

4

ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர்
வாசமலர் தூவ, பாசவினை போமே.

5

மணி ஆர் முதுகுன்றைப் பணிவார் அவர் கண்டீர்,
பிணி ஆயின கெட்டுத் தணிவார், உலகிலே.

6

“மொய் ஆர் முதுகுன்றில் ஐயா!” என வல்லார்
பொய்யார், இரவோர்க்கு; செய்யாள் அணியாளே.

7

விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படைஆயின சூழ, உடையார், உலகமே.

8

பத்துத்தலையோனைக் கத்த, விரல் ஊன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே!

9

இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.

10

தேரர் அமணரும் சேரும் வகை இல்லான்,
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே!

11

நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருமுதுகுன்றம்
வ.எண் பாடல்
1

மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும்,
விரும்பும் நால்வே-
தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல்
அரிவை பாகம்
ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர்
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே.

2

வேரி மிகு குழலியொடு வேடுவனாய், வெங்கானில் விசயன் மேவு
போரின் மிகு பொறை அளந்து, பாசுபதம் புரிந்து அளித்த புராணர்
கோயில்
காரின் மலி கடிபொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து, கயம்
முயங்கி,
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே.

3

தக்கனது பெருவேள்வி, சந்திரன், இந்திரன், எச்சன், அருக்கன்,
அங்கி,
மிக்க விதாதாவினொடும், விதிவழியே தண்டித்த விமலர் கோயில்
கொக்கு, இனிய கொழும் வருக்கை, கதலி, கமுகு, உயர் தெங்கின்,
குவை கொள்சோலை,
முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள் வயல் சூழ்
முதுகுன்றமே.

4

வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய; விறல் அழிந்து,
விண் உளோர்கள்,
செம்மலரோன், இந்திரன், மால், சென்று இரப்ப; தேவர்களே
தேர் அது ஆக,
மைம் மருவு மேரு விலு, மாசுணம் நாண், அரி எரிகால் வாளி ஆக,
மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம்
முதுகுன்றமே.

5

இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால் ஆய்,
ஒருபால் எள்காது
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர்
ஓங்கு
கழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின்
முழை மேவு மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே.

6

நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம்
நல் முத்தாறு
வகை ஆரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டுகரை அருகும்
மறிய மோதி,
தகை ஆரும் வரம்பு இடறி, சாலி கழுநீர் குவளை சாயப் பாய்ந்து,
முகை ஆர் செந்தாமரைகள் முகம்மலர, வயல் தழுவு முதுகுன்றமே.

7

அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி, அமரர்
வேண்ட,
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த
நிமலர் கோயில்
திறம் கொள் மணித்தரளங்கள் வர, திரண்டு அங்கு எழில்
குறவர் சிறுமிமார்கள்
முறங்களினால் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலைப்
பெய்முதுகுன்றமே.

8

கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல் இலங்கையர்கோன்
கண்ணும் வாயும்
பிதிர் ஒளிய கனல் பிறங்க, பெருங்கயிலைமலையை நிலை
பெயர்த்த ஞான்று,
மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடி ஒன்று ஊன்றி, மறை
பாட, ஆங்கே
முதிர் ஒளிய சுடர் நெடுவாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி
முதுகுன்றமே.

9

பூ ஆர் பொன்தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த
மாலும்,
ஓவாது கழுகு ஏனம் ஆய், உயர்ந்து ஆழ்ந்து, உற நாடி, உண்மை
காணாத்
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே.

10

மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டு உடையாரும், விரவல் ஆகா
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து, அங்கு
உய்மின்,தொண்டீர்!
ஞானிகளாய் உள்ளார்கள் நால்மறையை முழுது உணர்ந்து,
ஐம்புலன்கள் செற்று,
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்து இருந்து தவம் புரியும்
முதுகுன்றமே.

11

முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை,
மூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக்
கொண்டு,
தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில்-தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த
பாடல்
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே.