பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை நீறு சேர் திருமேனியர் சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில் மாறு இலா மணிகண்டரே.
தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மை அடைவார் ஆம், “அடிகள்!” என மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு உடையீரே! உமை உள்கியே.
“பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய கையான்” என்று வணங்குவர் மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற ஐயா! நின் அடியார்களே.
சால மா மலர் கொண்டு, “சரண்!” என்று, மேலையார்கள் விரும்புவர் மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று நீலம் ஆர் கண்ட! நின்னையே.
“மாறு இலா மணியே!” என்று வானவர் ஏறவே மிக ஏத்துவர் கூறனே! குலவும் திரு மாற்பேற்றில் நீறனே! என்றும் நின்னையே.
உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை; பரவாதார் இல்லை, நாள்களும்; திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று அரையானே! அருள் நல்கிடே!
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை உரை கெடுத்து, அவன் ஒல்கிட வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப் பரவிடக் கெடும், பாவமே.
இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனி ஒருவரால் அறிவு ஒண்ணிலன், மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப் பரவுவார் வினை பாறுமே.
தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும் நீசர்தம் உரை கொள்ளேலும்! “தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின் ஈசன்” என்று எடுத்து ஏத்துமே!
மன்னி மாலொடு சோமன் பணி செயும் மன்னும் மாற்பேற்று அடிகளை மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல் பன்னவே, வினை பாறுமே.
குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன், பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன், கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும் மருந்து அவன், வள நகர் மாற்பேறே.
பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி, வேறு அணி பலி கொளும் வேட்கையனாய், நீறு அணிந்து, உமை ஒருபாகம் வைத்த மாறு இலி வள நகர் மாற்பேறே.
கரு உடையார் உலகங்கள் வேவ, செரு விடை ஏறி முன் சென்று நின்று, உரு உடையாள் உமையாளும் தானும் மருவிய வள நகர் மாற்பேறே.
தலையவன், தலை அணிமாலை பூண்டு கொலை நவில் கூற்றினைக் கொன்று உகந்தான், கலை நவின்றான், கயிலாயம் என்னும் மலையவன், வள நகர் மாற்பேறே.
துறை அவன், தொழிலவன், தொல் உயிர்க்கும் பிறை அணி சடை முடிப் பெண் ஓர்பாகன், கறை அணி மிடற்று அண்ணல், காலன் செற்ற மறையவன், வள நகர் மாற்பேறே.
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்துக் கண்ணினால் காமனைக் காய்ந்தவன்தன், விண்ணவர் தானவர் முனிவரொடு மண்ணவர் வணங்கும், நல் மாற்பேறே.
தீது இலா மலை எடுத்த அரக்கன் நீதியால் வேத கீதங்கள் பாட, ஆதியான் ஆகிய அண்ணல், எங்கள் மாதி தன் வள நகர் மாற்பேறே.
செய்ய தண் தாமரைக் கண்ணனொடும் கொய் அணி நறுமலர் மேல் அயனும் ஐயன் நன் சேவடி அதனை உள்க, மையல் செய் வள நகர் மாற்பேறே.
குளித்து உணா அமணர், குண்டு ஆக்கர், என்றும் களித்து நன் கழல் அடி காணல் உறார்; முளைத்த வெண்மதியினொடு அரவம் சென்னி வளைத்தவன் வள நகர் மாற்பேறே.
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல செந்து இசை பாடல் செய் மாற்பேற்றைச் சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார் எந்தை தன் கழல் அடி எய்துவரே.