பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஊறல்
வ.எண் பாடல்
1

மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று,
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த
ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.

2

மத்தமதக்கரியை, மலையான்மகள் அஞ்ச, அன்று, கையால்
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம்
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து, ஒளிர் நீலம் நாளும் நயனம்
ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே.

3

ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார், நன்றும்
கான் அமர் மான்மறிக் கைக் கடவுள், கருதும் இடம்
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து, அழகு ஆர், நம்மை
ஊனம் அறுத்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.

4

நெய் அணி மூஇலைவேல், நிறை வெண்மழுவும், அனலும், அன்று,
கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில்
மை அணி கண் மடவார்பலர் வந்து இறைஞ்ச, மன்னி நம்மை
உய்யும் வகை புரிந்தான்-திரு ஊறலை உள்குதுமே.

5

எண்திசையோர் மகிழ, எழில் மாலையும் போனகமும், பண்டு,
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில்
கொண்டல்கள் தங்கு பொழில் குளிர்பொய்கைகள் சூழ்ந்து, நஞ்சை
உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே.

6

கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்துதலும், கலங்கி,
மறுக்கு உறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில்
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று
ஒறுத்து, அருள் செய்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.

7

நீரின் மிசைத் துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது, அன்று,
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில்
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச, மகிழ்ந்து, ஆகம்
ஊரும் அரவு அசைத்தான்-திரு ஊறலை உள்குதுமே.

8

பொன் இயல் சீவரத்தார், புளித் தட்டையர், மோட்டு அமணர்குண்டர்,
என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில்
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து, அழகு ஆர், தன்னை
உன்ன வினை கெடுப்பான்-திரு ஊறலை உள்குதுமே.

9

கோடல் இரும் புறவில் கொடி மாடக் கொச்சையர்மன், மெச்ச
ஓடுபுனல் சடைமேல் கரந்தான் திரு ஊறல்,
நாடல் அரும்புகழான் மிகு ஞானசம்பந்தன், சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே.