பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஇடைச்சுரம்
வ.எண் பாடல்
1

வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை
வளர்மதி சூடி,
கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, கனல் எரி ஆடுவர், காடு
அரங்கு ஆக;
விரி வளர்தரு பொழில் இனமயில் ஆல, வெண் நிறத்து அருவிகள
திண்ணென வீழும்,
எரி வளர் இனமணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர்
வணம் என்னே?

2

ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர்சடை உடையர்; அழகினை அருளுவர்;
குழகு அலது அறியார்;
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர்; நடு இருள்
ஆடுவர்; கொன்றை அம்தாரார்;
சேற்று அயல் மிளிர்வன கயல் இளவாளை செருச் செய, ஓர்ப்பன
செம்முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

3

கானமும், சுடலையும், கல் படு நிலனும், காதலர்; தீது இலர்;
கனல் மழுவாளர்;
வானமும் நிலமையும் இருமையும் ஆனார்; வணங்கவும் இணங்கவும்
வாழ்த்தவும் படுவார்;
நானமும் புகை ஒளி விரையொடு கமழ, நளிர்பொழில் இள
மஞ்ஞை மன்னிய பாங்கர்,
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

4

கட மணி மார்பினர்; கடல் தனில் உறைவார் காதலர்; தீது இலர்;
கனல் மழுவாளர்;
விடம் அணி மிடறினர்; மிளிர்வது ஓர் அரவர்; வேறும் ஓர்
சரிதையர்; வேடமும் உடையர்;
வடம் உலை அயலன கருங்குருந்து ஏறி, வாழையின் தீம்கனி
வார்ந்து தேன் அட்டும்
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
மேவிய இவர் வணம் என்னே?

5

கார் கொண்ட கடி கமழ் விரிமலர்க் கொன்றைக் கண்ணியர்;
வளர்மதி கதிர்விட, கங்கை-
நீர் கொண்ட சடையினர்; விடை உயர் கொடியர்; நிழல் திகழ்
மழுவினர்; அழல் திகழ் நிறத்தர்;
சீர் கொண்ட மென்சிறைவண்டு பண்செய்யும் செழும் புனல்
அனையன செங்குலை வாழை
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
மேவிய இவர் வணம் என்னே?

6

தோடு அணி குழையினர்; சுண்ண வெண் நீற்றர்; சுடலையின்
ஆடுவர்; தோல் உடை ஆகப்
பீடுடி உயர் செய்தது ஓர் பெருமையை உடையர்; பேய் உடன்
ஆடுவர்; பெரியவர் பெருமான்;
கோடல்கள் ஒழுகுவ, முழுகுவ தும்பி, குரவமும் மரவமும்
மன்னிய பாங்கர்,
ஏடு அவிழ் புதுமலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

7

கழல் மல்கு காலினர்; வேலினர்; நூலர்; கவர் தலை அரவொடு
கண்டியும் பூண்பர்;
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர்; பாடுவர்;
ஆர் அணங்கு உடையர்;
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு
இடைப் புணர்குயில் ஆலும்
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம்
மேவிய இவர் வணம் என்னே?

8

தேம் கமழ் கொன்றை அம் திருமலர் புனைவார்; திகழ்தரு
சடைமிசைத் திங்களும் சூடி,
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி, வேறும் ஓர் சரிதையர்;
வேடமும் உடையர்;
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி, தவழ் கன
மணியொடு மிகு பளிங்கு இடறி,
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
மேவிய இவர் வணம் என்னே?

9

பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர்; பலபுகழ் அல்லது
பழி இலர், தாமும்;
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தடக்கைகள்
அடர்த்தது ஓர் தன்மையை உடையர்;
மலை இலங்கு அருவிகள் மணமுழவு அதிர, மழை தவழ்
இள மஞ்ஞை மல்கிய சாரல்,
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

10

பெருமைகள் தருக்கி ஓர் பேது உறுகின்ற பெருங்கடல் வண்ணனும்
பிரமனும் ஓரா
அருமையர்; அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை
அடியவர்க்கு அணியரும் ஆவர்;
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளைக் கயல் இனம்
வயல் இளவாளைகள் இரிய,
எருமைகள் படிதர, இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர்
வணம் என்னே?

11

மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில்
வருபுனல் காழிச்
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள்
பரவி நின்று உருகு சம்பந்தன்,
புடைச் சுரத்து அரு வரைப் பூக் கமழ் சாரல் புணர் மட நடையவர்
புடை இடை ஆர்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல், இவை சொல வல்லவர்
பிணி இலர்தாமே.