பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர்; பலபுகழ் அல்லது
பழி இலர், தாமும்;
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தடக்கைகள்
அடர்த்தது ஓர் தன்மையை உடையர்;
மலை இலங்கு அருவிகள் மணமுழவு அதிர, மழை தவழ்
இள மஞ்ஞை மல்கிய சாரல்,
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?