பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்புறவார்பனங்காட்டூர்
வ.எண் பாடல்
1

விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்! வரி
பண் அமர்ந்து ஒலி சேர் புறவு ஆர் பனங்காட்டூர்,
பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா! பிறை சேர் நுதல் இடைக்
கண் அமர்ந்தவனே! கலந்தார்க்கு அருளாயே!

2

நீடல் கோடல் அலர, வெண்முல்லை நீர் மலர்நிரைத் தாது அளம்செய,
பாடல் வண்டு அறையும் புறவு ஆர் பனங்காட்டூர்,
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க, வெண்குழை துள்ள, நள் இருள்
ஆடும் சங்கரனே! அடைந்தார்க்கு அருளாயே!

3

வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல்
பாளை ஒண் கமுகம் புறவு ஆர் பனங்காட்டூர்,
பூளையும் நறுங் கொன்றையும் மதமத்தமும் புனைவாய்! கழல் இணைத்
தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே!

4

மேய்ந்து இளஞ் செந்நெல் மென் கதிர் கவ்வி
மேல்படுகலில், மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவு ஆர் பனங்காட்டூர்,
"ஆய்ந்த நால்மறை பாடி ஆடும் அடிகள்!" என்று என்று அரற்றி, நல் மலர்,
சாய்ந்து, அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே!

5

செங்கய(ல்)லொடு சேல் செருச் செய, சீறியாழ் முரல் தேன் இனத்தொடு
பங்கயம் மலரும் புறவும் ஆர் பனங்காட்டூர்,
கங்கையும் மதியும் கமழ் சடைக் கேண்மையாளொடும் கூடி, மான்மறி
அம் கை ஆடலனே! அடியார்க்கு அருளாயே!

6

நீரின் ஆர் வரை கோலி, மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவு ஆர் பனங்காட்டூர்,
"காரின் ஆர் மலர்க்கொன்றை தாங்கு கடவுள்!" என்று கைகூப்பி, நாள்தொறும்
சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே!

7

கை அரிவையர் மெல்விரல்(ல்) அவை காட்டி, அம்மலர்க்காந்தள், அம் குறி
பை அராவிரியும் புறவு ஆர்பனங்காட்டூர்,
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய்! கழல் ஏத்தி நாள்தொறும்
பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே!

8

தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர்ப் பொய்கை,
பாவில் வண்டு அறையும் புறவு ஆர் பனங்காட்டூர்
மேவி, அந்நிலை ஆய் அரக்கன தோள் அடர்த்து, அவன் பாடல் கேட்டு, அருள்
ஏவிய பெருமான்! என்பவர்க்கு அருளாயே!

9

அம் தண் மாதவி, புன்னை, நல்ல அசோகமும்(ம்), அரவிந்தம், மல்லிகை,
பைந் தண் நாழல்கள், சூழ் புறவு ஆர் பனங்காட்டூர்,
எந்து இள(ம்) முகில்வண்ணன், நான்முகன், என்று இவர்க்கு
அரிது ஆய் நிமிர்ந்தது ஒர்
சந்தம் ஆயவனே! தவத்தார்க்கு அருளாயே!

10

நீணம் ஆர் முருகு உண்டு, வண்டு இனம், நீல மா மலர் கவ்வி, நேரிசை
பாணி யாழ்முரலும் புறவு ஆர்பனங்காட்டூர்,
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக, தலை
ஊண் உரியவனே! உகப்பார்க்கு அருளாயே!

11

மையின் ஆர் மணி போல் மிடற்றனை, மாசு இல் வெண்பொடிப் பூசும் மார்பனை,
பைய தேன் பொழில் சூழ் புறவு ஆர் பனங்காட்டூர்,
ஐயனை, புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நால்மறை ஞானசம்பந்தன்
செய்யுள் பாட வல்லார், சிவலோகம் சேர்வாரே.