பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட, அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்வு இடம் விண்ணின் மா மழை பொழிந்து இழிய, வெள் அருவி சேர் திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.
வெறி உலாம் கொன்றை அம் தாரினான், மேதகு பொறி உலாம் அரவு அசைத்து ஆடி, ஓர் புண்ணியன், மறி உலாம் கையினான், மங்கையோடு அமர்வு இடம் செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.
ஏறனார், விடைமிசை; இமையவர் தொழ உமை- கூறனார்; கொல் புலித் தோலினார்; மேனிமேல் நீறனார்; நிறைபுனல் சடையனார்; நிகழ்வு இடம் தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான், உமையொடும்; விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார்; மேவு இடம் உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்த் திரையின் ஆர் எறி புனல்-திரு முதுகுன்றமே.
கடிய ஆயின குரல் களிற்றினைப் பிளிற, ஓர் இடிய வெங்குரலினோடு ஆளி சென்றிடு நெறி, வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்வு இடம் செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார், பெரியது ஓர் வானம் ஆர் மதியினோடு அரவர், தாம் மருவு இடம், ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து, உமையொடும் தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.
மஞ்சர் தாம், மலர்கொடு வானவர் வணங்கிட, வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே, அம் சொலாள் உமையொடும்(ம்) அமர்வு இடம் அணி கலைச் செஞ் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே.
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை ஏரின் ஆர் முடி இராவணன், எடுத்தான், இற, வாரின் ஆர்முலையொடும் மன்னனார் மருவு இடம் சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே.
ஆடினார், கானகத்து; அருமறையின் பொரு பாடினார்; பலபுகழ்ப் பரமனார்; இணை அடி ஏடின் ஆர் மலர்மிசை அயனும், மால், இருவரும் தேடினார் அறிவு ஒணார்; திரு முதுகுன்றமே.
மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர் பேசு மெய் உள அல; பேணுவீர்! காணுமின்- வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம்(ம்) இசை செய, தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே!
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை நண்ணினான், காழியுள் ஞானசம்பந்தன், சொல் எண்ணினார், ஈர் ஐந்து மாலையும் இயலுமாப் பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.
முரசு அதிர்ந்து எழுதரு முது குன்றம் மேவிய பரசு அமர் படை உடையீரே; பரசு அமர் படை உடையீர்! உமைப் பரவுவார் அரசர்கள் உலகில் ஆவாரே.
மொய் குழலாளொடு முதுகுன்றம் மேவிய பை அரவம் அசைத்தீரே; பை அரவம் அசைத்தீர்! உமைப் பாடுவார் நைவு இலர்; நாள்தொறும் நலமே.
முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய மழ விடை அது உடையீரே; மழ விடை அது உடையீர்! உமை வாழ்த்துவார் பழியொடு பகை இலர்தாமே.
முருகு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய உரு அமர் சடைமுடியீரே; உரு அமர் சடைமுடியீர்! உமை ஓதுவார் திருவொடு தேசினர் தாமே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய பத்து முடி அடர்த்தீரே; பத்து முடி அடர்த்தீர்! உமைப் பாடுவார் சித்தம் நல்ல(வ்) அடியாரே.
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி, அன்று இயன்றவர் அறிவு அரியீரே; இயன்றவர் அறிவு அரியீர்! உமை ஏத்துவார் பயன் தலை நிற்பவர் தாமே.
மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய கட்டு அமண் தேரைக் காய்ந்தீரே; கட்டு அமண் தேரைக் காய்ந்தீர்! உமைக் கருதுவார் சிட்டர்கள் சீர் பெறுவாரே.
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை நாடிய ஞானசம்பந்தன் நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ் பாடிய அவர் பழி இலரே.