பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருத் தண்டலை நீணெறி
வ.எண் பாடல்
1

விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,
சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம்
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம்
நெருங்கும் தண்டலை நீணெறி; காண்மினே!

2

இகழும் காலன் இதயத்தும், என் உளும்,
திகழும் சேவடியான் திருந்தும்(ம்) இடம்
புகழும் பூமகளும் புணர் பூசுரர்
நிகழும் தண்டலை நீணெறி; காண்மினே!

3

பரந்த நீலப் படர் எரி வல்விடம்
கரந்த கண்டத்தினான் கருதும்(ம்) இடம்
சுரந்த மேதி துறை படிந்து ஓடையில்
நிரந்த தண்டலை நீணெறி; காண்மினே!

4

தவந்த என்பும், தவளப்பொடியுமே,
உவந்த மேனியினான் உறையும்(ம்) இடம்
சிவந்த பொன்னும் செழுந் தரளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி; காண்மினே!

5

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

6

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

இலங்கை வேந்தன் இருபது தோள் இற,
விலங்கலில் அடர்த்தான் விரும்பும்(ம்) இடம்
சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும்
நிலம் கொள் தண்டலை நீணெறி; காண்மினே!

9

கரு வரு உந்தியின் நான்முகன், கண்ணன், என்று
இருவரும் தெரியா ஒருவன்(ன்) இடம்
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண்-
நிருபர் தண்டலை நீணெறி; காண்மினே!

10

கலவு சீவரத்தார், கையில் உண்பவர்
குலவமாட்டாக் குழகன் உறைவு இடம்
சுலவு மா மதிலும், சுதை மாடமும்,
நிலவு தண்டலை நீணெறி; காண்மினே!

11

நீற்றர், தண்டலை நீணெறி நாதனை,
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை
சாற்று ஞானசம்பந்தன்-தமிழ் வலார்
மாற்று இல் செல்வர்; மறப்பர், பிறப்பையே.