பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅதிகை வீரட்டானம்
வ.எண் பாடல்
1

வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
வெள் ஏற்றினானை,
பொறி அரவினானை, புள் ஊர்தியானை,
பொன்நிறத்தினானை, புகழ் தக்கானை,
அறிதற்கு அரிய சீர் அம்மான் தன்னை,
அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை,
எறி கெடிலத்தானை, இறைவன் தன்னை, - ஏழையேன்
நான் பண்டு இகழ்ந்த ஆறே!

2

வெள்ளிக்குன்று அன்ன விடையான் தன்னை,
வில்வலான் வில்வட்டம் காய்ந்தான் தன்னை,
புள்ளிவரிநாகம் பூண்டான் தன்னை, பொன்
பிதிர்ந்தன்ன சடையான் தன்னை,
வள்ளி வளைத் தோள் முதல்வன் தன்னை, வாரா
உலகு அருள வல்லான் தன்னை,
எள்க இடு பிச்சை ஏற்பான்தன்னை, - ஏழையேன்
நான் பண்டு இகழ்ந்த ஆறே!

3

முந்தி உலகம் படைத்தான் தன்னை, மூவா முதல்
ஆய மூர்த்தி தன்னை,
சந்த வெண்திங்கள் அணிந்தான் தன்னை,
தவநெறிகள் சாதிக்க வல்லான்தன்னை,
சிந்தையில்-தீர்வினையை, தேனை, பாலை, செழுங்
கெடில வீரட்டம் மேவினானை,
எந்தை பெருமானை, ஈசன் தன்னை, -ஏழையேன்
நான் பண்டு இகழ்ந்த ஆறே!

4

மந்திரமும், மறைப் பொருளும், ஆனான்தன்னை;
மதியமும், ஞாயிறும், காற்றும், தீயும்,
அந்தரமும், அலைகடலும், ஆனான் தன்னை;
அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை;
கந்தருவம் செய்து, இருவர், கழல் கைகூப்பி,
கடிமலர்கள் பல தூவி, காலைமாலை.
இந்திரனும் வானவரும் தொழ, செல்வானை;-
ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

5

ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார்;
உயர்கதிக்கு வழி தேடிப் போகமாட்டார்;
வரு பிறப்பு ஒன்று உணராது, மாசு பூசி, வழி
காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி,
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகை ஊரன் அம்மான்
தன் அடி இணையே அணைந்து வாழாது,
இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு-
ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

6

ஆறு ஏற்க வல்ல சடையான் தன்னை; அஞ்சனம்
போலும் மிடற்றான் தன்னை;
கூறு ஏற்க, கூறு அமர, வல்லான் தன்னை; கோல்
வளைக்கை மாதராள் பாகன்தன்னை;
நீறு ஏற்கப் பூசும் அகலத்தானை; நின்மலன் தன்னை;
நிமலன் தன்னை;
ஏறு ஏற்க ஏறுமா வல்லான் தன்னை;- ஏழையேன்
நான் பண்டு இகழ்ந்த ஆறே!

7

குண்டு ஆக்கனாய் உழன்று, கையில் உண்டு,
குவிமுலையார்தம் முன்னே நாணம் இன்றி,
உண்டி உகந்து, அமணே நின்றார் சொல் கேட்டு,
உடன் ஆகி, உழி தந்தேன், உணர்வு ஒன்று இன்றி;
வண்டு உலவு கொன்றை அம்கண்ணியானை,
வானவர்கள் ஏத்தப்படுவான் தன்னை,
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை-
ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

8

உறி முடித்த குண்டிகை தம் கையில்-தூக்கி,
ஊத்தைவாய்ச் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்க(ன்)னாய்,
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு, கண்டார்க்குப்
பொல்லாத காட்சி ஆனேன்;
மறிதிரை நீர்ப்பவ்வம் நஞ்சு உண்டான் தன்னை,
மறித்து ஒரு கால் வல்வினையேன், நினைக்க மாட்டேன்;
எறிகெடில நாடர் பெருமான் தன்னை-ஏழையேன்
நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

9

நிறை ஆர்ந்த நீர்மை ஆய் நின்றான்தன்னை,
நெற்றிமேல் கண் ஒன்று உடையான் தன்னை,
மறையானை, மாசு ஒன்று இலாதான் தன்னை,
வானவர்மேல் மலர் அடியை வைத்தான் தன்னை,
கறையானை, காது ஆர் குழையான் தன்னை,
கட்டங்கம் ஏந்திய கையான் தன்னை,
இறையானை, எந்தைபெருமான் தன்னை;- ஏழையேன்
நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

10

தொல்லை வான் சூழ் வினைகள் சூழப் போந்து
தூற்றியேன்; ஆற்றியேன்; சுடர் ஆய் நின்று
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட,
வானவர்க்கும் தானவர்க்கும், பெருமான் தன்னை
கொல்லைவாய்க் குருந்து ஒசித்துக் குழலும் ஊதும்
கோவலனும், நான்முகனும், கூடி எங்கும்
எல்லை காண்பு அரியானை; எம்மான் தன்னை;-
ஏழையேன்நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

11

முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள்
முறைமுறையால், “நம் தெய்வம்” என்று தீண்டி,
தலை பறிக்கும் தன்மையர்கள் ஆகி நின்று, தவமே
என்று அவம் செய்து, தக்கது ஓரார்;
மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதன்
அழியச் செற்ற சேவடியினானை,
இலை மறித்த கொன்றை அம்தாரான் தன்னை,-
ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅதிகை வீரட்டானம்
வ.எண் பாடல்
1

சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச்
சடாமகுடத்து இருத்துமே; சாமவேத-
கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே:
மெய்யனே; கனகமேனிப்
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசு
ஏறுமே; பரமயோகி ஆமே;
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கு(ம்)மே;-
அவன் ஆகில் அதிகை வீரட்டன் ஆமே.

2

ஏறு ஏறி ஏழ் உலகம் உழிதர்வானே; இமையவர்கள்
தொழுது ஏத்த இருக்கின்றானே;
பாறு ஏறு படுதலையில் பலி கொள்வானே; பட அரவம்
தடமார்பில் பயில்வித்தானே;
நீறு ஏறு செழும் பவளக்குன்று ஒப்பானே; நெற்றிமேல்
ஒற்றைக்கண் நிறைவித்தானே;
ஆறு ஏறு சடைமுடி மேல் பிறை வைத்தானே;-அவன்
ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

3

முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே; முதல்
ஆகி நடு ஆகி முடிவு ஆனானே;
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே; கதம்
நாகம் கொண்டு ஆடும் காட்சியானே;
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே; பெரு
நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆகி
அண்டத்துக்கு அப்பால் ஆய் இப் பாலானே;-
அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

4

செய்யனே; கரியனே, கண்டம்; பைங்கண் வெள்
எயிற்று ஆடு அரவனே; வினைகள் போக
வெய்யனே; தண் கொன்றை மிலைத்த சென்னிச்
சடையனே; விளங்கு மழுச் சூலம் ஏந்தும்
கையனே; காலங்கள் மூன்று ஆனானே; கருப்பு வில்
தனிக் கொடும் பூண் காமற் காய்ந்த
ஐயனே; பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே;- அவன்
ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

5

பாடுமே, ஒழியாமே நால்வேத(ம்)மும்; படர்சடைமேல்
ஒளி திகழப் பனி வெண்திங்கள்
சூடுமே; அரை திகழத் தோலும் பாம்பும் சுற்றுமே;
தொண்டைவாய் உமை ஓர் பாகம்
கூடுமே; குடமுழவம், வீணை, தாளம், குறுநடைய சிறு
பூதம் முழக்க, மாக்கூத்து
ஆடுமே; அம் தடக்கை அனல் ஏந்து(ம்)மே;- அவன்
ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

6

ஒழித்திடுமே, உள்குவார் உள்ளத்து உள்ள உறு
பிணியும் செறு பகையும்; ஒற்றைக்கண்ணால்
விழித்திடுமே, காமனையும் பொடி ஆய் வீழ;
வெள்ளப் புனல் கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே; ஏழ் உலகும் தான் ஆகு(ம்)மே;
இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பி(ன்)னால்
அழித்திடுமே; ஆதி மா தவத்து உளானே;- அவன்
ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

7

குழலோடு, கொக்கரை, கைத்தாளம், மொந்தை,
குறள்பூதம் முன் பாடத் தான் ஆடு(ம்)மே;
கழல் ஆடு திருவிரலால் கரணம்செய்து, கனவின்
கண் திரு உருவம் தான் காட்டு(ம்)மே;
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடு(ம்)மே;-
ஈமப் புறங்காட்டில் ஏமம்தோறும்
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே;-அவன்
ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

8

மால் ஆகி மதம் மிக்க களிறுதன்னை வதைசெய்து,
மற்று அதனின் உரிவை கொண்டு,
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம், வெம்
புலால் கை கலக்க, மெய் போர்த்தானே;
கோலாலம் பட வரை நட்டு, அரவு சுற்றி,
குரைகடலைத் திரை அலற, கடைந்து கொண்ட
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே;-அவன்
ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

9

செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும்
செஞ்சடை எம்பெருமானே; தெய்வம் நாறும்
வம்பின் நாள்மலர்க் கூந்தல் உமையாள் காதல்
மணவாளனே; வலங்கை மழுவாள(ன்)னே:
நம்பனே; நால்மறைகள் தொழ நின்றானே;
நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே; அண்ட கோசத்து உளானே;- அவன்
ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

10

எழுந்த திரை நதித் துவலை நனைந்த திங்கள்
இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே;
கொழும் பவளச்செங்கனிவாய்க் காமக்கோட்டி
கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட
தழும்பு உளவே; வரைமார்பில் வெண்நூல் உண்டே;
சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்திய செந்திரு உருவில் வெண் நீற்றானே;-
அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

11

நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே;
நேர் ஒருவர் இல்லாதானே;
கொடி ஏறு கோல மா மணிகண்ட(ன்)னே; கொல்
வேங்கை அதளனே; கோவணவனே;
பொடி ஏறு மேனியனே; ஐயம் வேண்டிப் புவலோகம்
திரியுமே; புரிநூலானே;
அடியாரை அமருலகம் ஆள்விக்கு(ம்)மே;- அவன்
ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅதிகைவீரட்டானம்
வ.எண் பாடல்
1

எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி! எரிசுடர்
ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி! கொல்லும்
கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி! கற்றார்
இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!-
வீரட்டம் காதல் விமலா, போற்றி!.

2

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி! பல்
ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!-அலை
கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

3

முல்லை அம் கண்ணி முடியாய், போற்றி! முழுநீறு
பூசிய மூர்த்தி, போற்றி!
எல்லை நிறைந்த குணத்தாய், போற்றி! ஏழ் நரம்பின்
ஓசை படைத்தாய், போற்றி!
சில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி! சென்று
அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி!
தில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி!-திரு
வீரட்டானத்து எம் செல்வா, போற்றி!.

4

சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி! தவநெறிகள்
சாதித்து நின்றாய், போற்றி!
கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்
குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி!
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து
உடன் வைத்த பண்பா, போற்றி!
ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!-அலை
கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

5

நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி! நிழல் திகழும்
வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!-இருங் கெடில
வீரட்டத்து எந்தாய், போற்றி!.

6

பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி! பழையாற்றுப்
பட்டீச்சுரத்தாய், போற்றி!
வீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி! வேழத்து
உரி வெருவப் போர்த்தாய், போற்றி!
நாடுவார் நாடற்கு அரியாய், போற்றி! நாகம் அரைக்கு
அசைத்த நம்பா, போற்றி!
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய், போற்றி!-அலை
கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

7

மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி!
விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி!
வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி!
பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி! பார்
முழுதும் ஆய பரமா, போற்றி!
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!-
கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!.

8

வெஞ்சின வெள் ஊர்தி உடையாய், போற்றி!
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி!
துஞ்சாப் பலிதேரும் தோன்றால், போற்றி!
தொழுதகை துன்பம் துடைப்பாய், போற்றி!
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி!
நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி!-அலை
கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

9

சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி! சீபர்ப்பதம்
சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி! தத்துவனே,
போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!-அலை
கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

10

முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி! தத்துவனே,
போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு “அணா” என்று இருவர் தோள் கைகூப்ப,
துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!-எறி
செடில வீரட்டத்து ஈசா, போற்றி!.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅதிகைவீரட்டானம்
வ.எண் பாடல்
1

அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி;
அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி;
சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி;
சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி;
பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி;
பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி;
திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி- திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

2

கொடுவினையார் என்றும் குறுகா அடி; குறைந்து
அடைந்தார் ஆழாமைக் காக்கும்(ம்) அடி;
படு முழவம் பாணி பயிற்றும்(ம்) அடி; பதைத்து
எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்த(வ்) அடி;
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி; கடல்
வையம் காப்பான் கருதும்(ம்) அடி;
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி- நிறை
கெடில வீரட்டம் நீங்கா அடி.

3

வைது எழுவார் காமம், பொய், போகா அடி;
வஞ்சவலைப்பாடு ஒன்று இல்லா அடி;
கைதொழுது நாம் ஏத்திக் காணும்(ம்) அடி;
கணக்கு வழக்கைக் கடந்த(வ்) அடி;
நெய்-தொழுது, நாம் ஏத்தி-ஆட்டும்(ம்) அடி; நீள்
விசும்பை ஊடு அறுத்து நின்ற(வ்) அடி;
தெய்வப்புனல் கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி;

4

அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்(ம்) அடி;
அழகு எழுதல் ஆகா அருள் சேவடி;
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த(வ்) அடி;
சோமனையும் காலனையும் காய்ந்தவ(வ்) அடி;
பெரும் பித்தர் கூடிப் பிதற்றும்(ம்) அடி;
பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல(வ்) அடி;
திருந்து நீர்த் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி

5

ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற(வ்) அடி;
ஊழிதோறுஊழி உயர்ந்த(வ்) அடி;
பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்(ம்) அடி;
புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
இரு நிலத்தார் இன்பு உற்று அங்கு ஏத்தும்(ம்) அடி;
இன்பு உற்றார் இட்ட பூ ஏறும்(ம்) அடி;
திரு அதிகைத் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

6

திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி;
சிறந்தவர்க்குத் தேன் ஆய் விளைக்கும்(ம்) அடி;
பொருளவர்க்குப் பொன் உரை ஆய் நின்ற(வ்)
அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி;
உரு என்று உணரப்படாத(வ்)அடி;
திரு அதிகைத் தென் கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

7

உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி; உரையால்
உணரப்படாத(வ்) அடி;
வரைமாதை வாடாமை வைக்கும்(ம்) அடி; வானவர்கள்
தாம் வணங்கி வாழ்த்தும்(ம்) அடி;
அரைமாத்திரையில் அடங்கும்(ம்) அடி; அகலம்
அளக்கிற்பார் இல்லா அடி;
கரை மாங் கலிக் கெடில நாடன்(ன்) அடி-கமழ்
வீரட்டானக் காபாலி(ய்) அடி;

8

நறுமலர் ஆய் நாறும் மலர்ச்சேவடி; நடு ஆய்
உலகம் நாடு ஆய(வ்) அடி;
செறிகதிரும் திங்களும் ஆய் நின்ற(வ்) அடி;
தீத்திரள் ஆய் உள்ளே திகழ்ந்த(வ்) அடி;
மறு மதியை மாசு கழுவும்(ம்) அடி; மந்திரமும்
தந்திரமும் ஆய(வ்) அடி;
செறி கெடில நாடர் பெருமான் அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

9

அணியனவும் சேயனவும் அல்லா அடி;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆய(வ்) அடி;
பணிபவர்க்குப் பாங்கு ஆக வல்ல(வ்) அடி;
பற்று அற்றார் பற்றும் பவள(வ்) அடி;
மணி அடி; பொன் அடி; மாண்பு ஆம் அடி;
மருந்து ஆய்ப் பிணி தீர்க்க வல்ல(வ்) அடி;
தணிபு ஆடு தண்கெடில நாடன்(ன்) அடி-தகை
சார் வீரட்டத் தலைவன்(ன்) அடி;

10

அம் தாமரைப்போது அலர்ந்த(வ்) அடி;
அரக்கனையும் ஆற்றல் அழித்த(வ்) அடி;
முந்துஆகி முன்னே முளைத்த(வ்) அடி; முழங்கு
அழல் ஆய் நீண்ட எம் மூர்த்தி(ய்) அடி;
பந்து ஆடு மெல்விரலாள் பாகன்(ன்) அடி;
பவளத்தடவரையே போல்வான் அடி;
வெந்தார் சுடலை நீறு ஆடும்(ம்) அடி-வீரட்டம்
காதல் விமலன்(ன்) அடி.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅதிகைவீரட்டானம்
வ.எண் பாடல்
1

செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
சிற்றேமமும், பெருந் தண் குற்றால(ம்)மும்,
தில்லைச் சிற்றம்பலமும், தென்கூட(ல்)லும்,
தென் ஆனைக்காவும், சிராப்பள்ளி(ய்)யும்,
நல்லூரும், தேவன்குடி, மருக(ல்)லும்,
நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும்-
கல்லலகு நெடும்புருவக் கபாலம் ஏந்திக்
கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே.

2

தீர்த்தப்புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
திருக்கோவல்வீரட்டம், வெண்ணெய் நல்லூர்,
ஆர்த்து அருவி வீழ் சுனைநீர் அண்ணாமலை,
அறையணி நல்லூரும்(ம்), அரநெறியும், -
ஏத்துமின்கள்! நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது,
இன்னம்பர், ஏகம்ப(ம்) மும்,
கார்த் தயங்கு சோலைக் கயிலாய (ம்)
மும்-கண்நுதலான் தன்னுடைய காப்புக்களே.

3

சிறை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருப்
பாதிரிப்புலியூர், திரு ஆமாத்தூர்,
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற
சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தான(ம்)மும், -
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று
அமுதர்-பழனம், நல்லம்,
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும்,
கழுக்குன்றும்-தம்முடைய காப்புக்களே.

4

திரை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
ஆரூர், தேவூர், திரு நெல்லிக்கா,
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும், ஓத்தூரும்,
மாற்பேறும், மாந்துறையும்,
வரை ஆர் அருவி சூழ் மாநதியும், மாகாளம்,
கேதாரம், மா மேரு(வ்)வும்-
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை
உறைவார் காப்புக்களே.

5

செழு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
திரிபுராந்தகம், தென் ஆர் தேவீச்சுரம்,
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும்,
குடமூக்கும், கோகரணம், கோலக்காவும்,
பழி நீர்மை இல்லாப் பனங்காட்டூரும், பனையூர்,
பயற்றூர், பராய்த்துறையும்,
கழுநீர் மது விரியும் காளிங்க(ம்)மும் -
கணபதீச்சுரத்தார் தம் காப்புக்களே.

6

தெய்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், செழுந்
தண் பிடவூரும், சென்று நின்று
பவ்வம் திரியும் பருப்பத(ம்)மும், பறியலூர்
வீரட்டம், பாவநாசம்,
மவ்வம் திரையும் மணி முத்த(ம்)மும்,
மறைக்காடும், வாய்மூர், வலஞ்சுழி(ய்)யும்,
கவ்வை வரிவண்டு பண்ணேபாடும்
கழிப்பாலை-தம்முடைய காப்புக்களே.

7

தெண் நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
தீக்காலிவல்லம், திரு வேட்டி(ய்)யும்,
உண் நீர் ஆர் ஏடகமும், ஊறல், அம்பர்,
உறையூர், நறையூர், அரண நல்லூர்,
விண்ணார் விடையான் விளமர், வெண்ணி,
மீயச்சூர், வீழிமிழலை, மிக்க
கண் ஆர் நுதலார் கரபுர(ம்)மும்-காபாலியார்
அவர்தம் காப்புக்களே.

8

தெள்ளும் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
திண்டீச்சுரமும், திருப்புக(ல்)லூர்,
எள்ளும் படையான் இடைத்தான(ம்)மும்,
ஏயீச்சுரமும், நல் ஏமம், கூடல்,
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும், குரங்கணில்
முட்டமும், குறும்பலாவும்,
கள் அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும்
காரோணம்-தம்முடைய காப்புக்களே.

9

சீர் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
திருக்காட்டுப்பள்ளி, திரு வெண்காடும்,
பாரார் பரவும் சீர்ப் பைஞ்ஞீலியும்,
பந்தணைநல்லூரும், பாசூர், நல்லம்,
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும்,
நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வாயி(ல்)லும்,
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு
என்றும்-கடவூரில் வீரட்டம்-காப்புக்களே.

10

சிந்தும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
வாஞ்சியமும், திரு நள்ளாறும்,
அம் தண்பொழில் புடை சூழ் அயோகந்தியும்,
ஆக்கூரும், ஆவூரும், ஆன்பட்டி(ய்)யும்,
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது(வ்)
இடைச்சுரமும், எந்தை தலைச்சங்காடும்,
கந்தம் கமழும் கரவீர(ம்)மும், கடம்பூர்க்
கரக்கோயில்-காப்புக்களே.

11

தேன் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருச்
செம்பொன்பள்ளி, திருப் பூவணமும்,
வானோர் வணங்கும் மணஞ்சேரி(ய்)யும்,
மதில் உஞ்சைமாகாளம், வாரணாசி,
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம், இலங்கு
ஆர் பருப்பதத்தோடு, ஏண் ஆர் சோலைக்
கான் ஆர் மயில் ஆர் கருமாரி(ய்)யும் -
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.

12

திரு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
அளப்பூர், தெற்கு ஏறு சித்தவடம்,
உரு நீர் வளம் பெருகு மா நிருப(ம்)மும் -
மயிலாப்பில் மன்னினார், மன்னி ஏத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற -
பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம்
கருநீலவண்டு அரற்றும் காளத்தி(ய்)யும்,
கயிலாயம்-தம்முடைய காப்புக்களே.