பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தான் எனை முன் படைத்தான்; அது அறிந்து தன் பொன் அடிக்கே நான் என பாடல்? அந்தோ! நாயினேனைப் பொருட்படுத்து, வான் எனை வந்து எதிர்கொள்ள, மத்தயானை அருள்புரிந்து(வ்) ஊன் உயிர் வேறு செய்தான்-நொடித்தான்மலை உத்தமனே.
ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ- ஊனை உயிர் வெருட்டீ ஒள்ளியானை நினைத்திருந்தேன், வானை மதித்த(அ)மரர் வலம்செய்து, எனை ஏற வைக்க ஆனை அருள் புரிந்தான், நொடித்தான்மலை உத்தமனே?
மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து, அடியேன்; சுந்தர வேடங்களால்-துரிசே செயும் தொண்டன் எனை அந்தர மால்விசும்பில்(ல்) அழகு ஆனை அருள்புரிந்த- தும் தரமோ? நெஞ்சமே!-நொடித்தான்மலை உத்தமனே.
வாழ்வை உகந்த நெஞ்சே! மடவார் தங்கள் வல்வினைப் பட்டு, ஆழ முகந்த என்னை அது மாற்றி, அமரர் எல்லாம் சூழ அருள் புரிந்து(த்), தொண்டனேன் பரம் அல்லது ஒரு வேழம் அருள் புரிந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
மண்ணுலகில் பிறந்து(ந்) நும்மை வாழ்த்தும் வழி அடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்; விண்ணுலகத்தவர்கள் விரும்ப(வ்) வெள்ளையானையின் மேல் என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.
அஞ்சினை ஒன்றி நின்று(வ்) அலர் கொண்டு அடி சேர்வு அறியா வஞ்சனை என் மனமே வைகி, வான நன் நாடர் முன்னே! துஞ்சுதல் மாற்றுவித்து, தொண்டனேன் பரம் அல்லது ஒரு வெஞ்சின ஆனை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
நிலை கெட, விண் அதிர(ந்), நிலம் எங்கும் அதிர்ந்து அசைய, மலை இடை யானை ஏறி(வ்) வழியே வருவேன் எதிரே, அலைகடல் ஆல் அரையன்(ன்) அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச, உலை அணையாத வண்ணம்-நொடித்தான்மலை உத்தமனே.
அர ஒலி, ஆகமங்கள்(ள்) அறிவார் அறி தோத்திரங்கள், விரவிய வேத ஒலி, விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப, வரம் மலி வாணன் வந்து(வ்) வழிதந்து, எனக்கு ஏறுவது ஓர் சிரம் மலி யானை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.
இந்திரன், மால், பிரமன்(ன்), எழில் ஆர் மிகு தேவர், எல்லாம் வந்து எதிர்கொள்ள, என்னை மத்தயானை அருள்புரிந்து, மந்திர மா முனிவர், “இவன் ஆர்?” என,-எம்பெருமான் “நம்தமர் ஊரன்” என்றான்நொடித்தான்மலை உத்தமனே.
ஊழிதொறு ஊழி முற்றும்(ம்) உயர் பொன் நொடித்தான்மலையை, சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன, ஏழ் இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும், ஆழி-கடல்(ல்) அரையா! அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே!