பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருச்சோபுரம்
வ.எண் பாடல்
1

வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்?
கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத்
தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே!

2

விடை அமர்ந்து, வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்கு
சடை ஒடுங்க, தண் புனலைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த,
தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே!

3

தீயர் ஆய வல் அரக்கர் செந்தழலுள் அழுந்தச்
சாய எய்து, வானவரைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி, பாய் புலித்தோல் உடுத்த
தூய வெள்ளை நீற்றினானே! சோபுரம் மேயவனே!

4

பல் இல் ஓடு கையில் ஏந்தி, பல்கடையும் பலி தேர்ந்து,
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொல் ஆம்?
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும்
தொல்லை ஊழி ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!

5

நாற்றம் மிக்க கொன்றை துன்று செஞ்சடைமேல் மதியம்
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை கொல் ஆம்?
ஊற்றம் மிக்க காலன்தன்னை ஒல்க உதைத்து அருளி,
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!

6

கொல் நவின்ற மூ இலைவேல், கூர் மழுவாள் படையன்,
பொன்னை வென்ற கொன்றைமாலை சூடும் பொற்பு என்னை கொல் ஆம்?
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து, அரை சேர்
துன்ன வண்ண ஆடையினாய்! சோபுரம் மேயவனே!

7

“குற்றம் இன்மை, உண்மை, நீ” என்று உன் அடியார் பணிவார்,
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை கொல் ஆம்?
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு, அயன் வெண் தலையில்
துற்றல் ஆன கொள்கையானே! சோபுரம் மேயவனே!

8

விலங்கல் ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு, விறல் அரக்கர்
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை கொல் ஆம்?
இலங்கை மன்னு வாள் அவுணர்கோனை எழில் விரலால்
துலங்க ஊன்றிவைத்து உகந்தாய்! சோபுரம் மேயவனே!

9

விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி, விரிதிரை நீர்
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்?
இடந்து மண்ணை உண்ட மாலும், இன் மலர்மேல் அயனும்,
தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே!

10

புத்தரோடு புன்சமணர் பொய் உரையே உரைத்து,
பித்தர் ஆகக் கண்டு உகந்த பெற்றிமை என்னை கொல் ஆம்?
மத்தயானை ஈர் உரிவை போர்த்து, வளர் சடைமேல்
துத்திநாகம் சூடினானே! சோபுரம் மேயவனே!

11

சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனை,
சீலம் மிக்க தொல்புகழ் ஆர் சிரபுரக் கோன்-நலத்தான்,
ஞாலம் மிக்க தண் தமிழான், ஞானசம்பந்தன்-சொன்ன
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர், வான் உலகே.