பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஅண்ணாமலை
வ.எண் பாடல்
1

உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே.

2

தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி,
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற,
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.

3

பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலி மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல்,
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.

4

உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகு எல்லாம்
எதிரும் பலி உணவு ஆகவும், எருது ஏறுவது அல்லால்,
முதிரும் சடை இளவெண் பிறை முடிமேல் கொள, அடி மேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே.

5

மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள் அருவி
அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார்,
குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே?

6

பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே.

7

கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில்
நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள,
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இனவண்டு இசை முரல,
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.

8

ஒளிறூ புலி அதள் ஆடையன், உமை அஞ்சுதல் பொருட்டால்,
பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்து உரித்து,
வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை
அளறூபட அடர்த்தான்; இடம் அண்ணாமலை அதுவே.

9

விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும், வேதக்
கிளர் தாமரை மலர்மேல் உறை கேடு இல் புகழோனும்,
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை, முறுவல், உமை தலைவன் அடி சரணே!

10

வேர் வந்து உற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும்,
மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்,
ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல்,
கூர் வெண் மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே!

11

வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல்,
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை,
கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவண்ணாமலை
வ.எண் பாடல்
1

பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

2

மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத்து அடக்கு அதுவும் நன்மைப் பொருள் போலும்
வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி,
அம் சொல் கிளிகள், “ஆயோ!” என்னும் அண்ணாமலையாரே.

3

ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான்-நல்ல அடியார் மேல்
ஊனத்திரளை நீக்கு அதுவும் உண்மைப் பொருள் போலும்
ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்
ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

4

இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
தழைத்த சடையார், விடை ஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்து, அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே.

5

உருவில்-திகழும் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார்
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம்
அருவித்திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே.

6

எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார்,
நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத,
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.

7

வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல்
அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

8

மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள்
நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார்
“திறம் தான் காட்டி அருளாய்!” என்று தேவர் அவர் வேண்ட,
அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.

9

தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை;
மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு,
கூடிக் குறவர் மடவார் குவித்து, “கொள்ள வம்மின்!” என்று,
ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.

10

தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்!
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில்,
அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே.

11

அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.