பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவலிதாயம்
வ.எண் பாடல்
1

பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,
ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,
சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.

2

படை இலங்கு கரம் எட்டு உடையான், படிறு ஆகக் கனல் ஏந்திக்
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன், உறை கோயில்,
மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம்
அடைய நின்ற அடியார்க்கு அடையா, வினை அல்லல் துயர்தானே.

3

ஐயன், நொய்யன், அணியன், பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த,
செய்யன், வெய்ய படை ஏந்த வல்லான், திருமாதோடு உறை கோயில்
வையம் வந்து பணிய, பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம்
உய்யும் வண்ணம் நினைமின்! நினைந்தால், வினை தீரும்; நலம் ஆமே.

4

ஒற்றை ஏறு அது உடையான்; நடம் ஆடி, ஒரு பூதப்படை சூழ;
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம்பெம்மான்; மடவாளோடு
உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம்
பற்றி வாழும் அதுவே சரண் ஆவது, பாடும் அடியார்க்கே.

5

புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர, பொருள் ஆய
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும்
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம்
சிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிது அன்றே.

6

ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு, உலகத்து உள்ளவர் ஏத்த,
கான் இயன்ற கரியின் உரி போர்த்து, உழல் கள்வன்; சடை தன் மேல்
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி; மகிழும் வலி தாயம்
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த, தெளிவு ஆமே.

7

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி,
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில்
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்து
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த, நம் உண்மைக் கதி ஆமே.

8

கடலில் நஞ்சம் அமுது உண்டு, இமையோர் தொழுது ஏத்த, நடம் ஆடி,
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில்
மடல் இலங்கு கமுகின், பலவின், மது விம்மும் வலி தாயம்
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ, உள்ளத்துயர் போமே.

9

பெரிய மேருவரையே சிலையா, மலைவு உற்றார் எயில் மூன்றும்
எரிய எய்த ஒருவன், இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும்
எரி அது ஆகி உற ஓங்கியவன், வலிதாயம் தொழுது ஏத்த,
உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே.

10

ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி
ஏசி, ஈரம் இலராய், மொழிசெய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்!
வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்
பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப் பேணும் பெரியோரே.

11

வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால், அருள்மாலைத் தமிழ் ஆக,
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர் வாரே.