பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவிற்கோலம்
வ.எண் பாடல்
1

உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர்
திருவினான்; வளர்சடைத் திங்கள் கங்கையான்;
வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கிய
செருவினான்; உறைவு இடம் திரு விற்கோலமே.

2

சிற்றிடை உமை ஒருபங்கன்; அங்கையில்
உற்றது ஓர் எரியினன்; ஒரு சரத்தினால்,
வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அறச்
செற்றவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.

3

ஐயன்; நல் அதிசயன்; அயன் விண்ணோர் தொழும்
மை அணி கண்டன்; ஆர் வண்ணம், வண்ணவான்;
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும்,
செய்யவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.

4

விதைத்தவன், முனிவருக்கு அறம்; முன் காலனை
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தரப்
புதைத்தவன்; நெடு நகர்ப்-புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.

5

முந்தினான், மூவருள் முதல்வன் ஆயினான்,
கொந்து உலாம் மலர்ப்பொழில் கூகம் மேவினான்,
அந்தி வான்பிறையினான், அடியர் மேல் வினை
சிந்துவான், உறைவு இடம் திரு விற்கோலமே.

6

தொகுத்தவன், அருமறை அங்கம்; ஆகமம்
வகுத்தவன்; வளர் பொழில் கூகம் மேவினான்;
மிகுத்தவன்; மிகுத்தவர் புரங்கள் வெந்து அறச்
செகுத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.

7

விரித்தவன், அருமறை; விரிசடை வெள்ளம்
தரித்தவன்; தரியலர் புரங்கள் ஆசு அற
எரித்தவன்; இலங்கையர் கோன் இடர் படச்
சிரித்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை

9

திரி தரு புரம் எரிசெய்த சேவகன்,
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன்,
அரியொடு பிரமனது ஆற்றலால் உருத்
தெரியலன், உறைவு இடம் திரு விற்கோலமே.

10

சீர்மை இல் சமணொடு, சீவரக் கையர்
நீர்மை இல் உரைகள் கொள்ளாது, நேசர்க்கு
பார் மலி பெருஞ் செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையினான் இடம் திரு விற்கோலமே.

11

கோடல் வெண்பிறையனை, கூகம் மேவிய
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை,
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் வல்லார்களுக்கு இல்லை, பாவமே.