பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅண்ணாமலை
வ.எண் பாடல்
1

வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
சிட்டனை, திரு அண்ணாமலையனை,
இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?

2

வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
தேனனை, திரு அண்ணாமலையனை,
ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?

3

மத்தனை(ம்), மதயானை உரித்த எம்
சித்தனை, திரு அண்ணாமலையனை,
முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த
அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?

4

காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
தேற்றனை, திரு அண்ணாமலையனை,
கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ?

5

மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனை, திரு அண்ணாமலையனை,
என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ?

6

மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
சென்றனை, திரு அண்ணாமலையனை,
வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?

7

வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ?

8

கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
திருவினை, திரு அண்ணாமலையனை,
உருவினை, உணரார் புரம் மூன்று எய்த
அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ?

9

அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?

10

அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅண்ணாமலை
வ.எண் பாடல்
1

பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம்
இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே!

2

பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கு ஏன்று அவர்;
சுற்றமா மிகு தொல் புகழாளொடும்
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்-தவத்தொடு ஞானத்து இருப்பரே.

3

பல் இல் ஓடு கை ஏந்திப் பல இலம்
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்,
அல்லல் தீர்க்கும், அண்ணாமலை கைதொழ
நல்லஆயின நம்மை அடையுமே.

4

பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்
ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ?
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.

5

தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.

6

கட்டி ஒக்கும், கரும்பின் இடை; துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்,
அட்டமூர்த்தி, அண்ணாமலை மேவிய
நட்டம் ஆடியை, நண்ண நன்கு ஆகுமே.

7

கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்,
ஆணிப் பொன்னின், அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

8

கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்,
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகும், நம் மேலைவினைகளே.

9

முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்,
அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை!
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்,
கந்தமாமலர் சூடும் கருத்தனே.

10

மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்
பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.