பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
கோயில்
வ.எண் பாடல்
1

அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை,
அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை,
தேவர்கள்தம் கோனை, மற்றைக்
கரியானை, நான்முகனை, கனலை, காற்றை,
கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற
பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

2

கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி
சூழ் வலஞ்சுழியும் கருதினானை,
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை,
ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே;
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள்
எப்பொழுதும் வணங்கி ஏத்தப்-
பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

3

கருமானின் உரி-அதளே உடையா வீக்கி, கனை
கழல்கள் கலந்து ஒலிப்ப, அனல் கை ஏந்தி,
வரு மானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட,
வளர்மதியம் சடைக்கு அணிந்து, மான் நேர் நோக்கி
அரு மான வாள் முகத்தாள் அமர்ந்து காண,
அமரர்கணம் முடி வணங்க, ஆடுகின்ற
பெருமானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

4

அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை,
அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா-
மருந்து அமரர்க்கு அருள் புரிந்த மைந்தன் தன்னை,
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி
சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே.

5

அருந்துணையை; அடியார் தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை; அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு, வான்
புலன்கள் அகத்து அடக்கி, மடவாரோடும்
பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி,
பொது நீக்கி, தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையை; பெரும்பற்றப்புலியூரானை;- பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே.

6

கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை,
கன வயிரக் குன்று அனைய காட்சியானை,
அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை,
அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை,
சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச்
சுடர்க்கொழுந்தை, துளக்கு இல்லா விளக்கை, மிக்க
பெரும்பொருளை, பெரும்பற்றப்புலியூரானை, -
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

7

வரும் பயனை, எழு நரம்பின் ஓசையானை, வரை
சிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும் பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த
அம்மானை, அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை,
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில்
-துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

8

கார் ஆனை ஈர் உரிவைப் போர்வையானை, காமரு
பூங் கச்சி ஏகம்பன் தன்னை,
ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை,
அமரர்களுக்கு அறிவு அரிய அளவு இலானை,
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற
பரஞ்சுடரை, பரனை, எண் இல்
பேரானை, பெரும்பற்றப்புலியூரானை, - பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

9

முற்றாத பால் மதியம் சூடினானை, மூ உலகம் தான்
ஆய முதல்வன் தன்னை,
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தன்னை, திகழ்
ஒளியை, மரகதத்தை, தேனை, பாலை,
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னை,
கூத்து ஆட வல்லானை, கோனை, ஞானம்
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை,- பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

10

கார் ஒளிய திருமேனிச் செங்கண் மாலும்,
கடிக்கமலத்து இருந்த (அ)அயனும், காணா வண்ணம்
சீர் ஒளிய தழல் பிழம்பு ஆய் நின்ற தொல்லைத்,
திகழ் ஒளியை; சிந்தை தனை மயக்கம் தீர்க்கும்
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும், ஏழ்
உலகுங் கடந்தண்டத் அப்பால் நின்ற
பேர் ஒளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப், சோத
நாள் எல்லாம் பிறவா நாளே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
கோயில்
வ.எண் பாடல்
1

மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார்;
மருகல் உள்ளார்;
கொங்கில் கொடுமுடியார்; குற்றாலத்தார்; குடமூக்கின்
உள்ளார்; போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்கும் இடம் அறியார்; சால நாளார்; தருமபுரத்து
உள்ளார்; தக்களூரார்-
பொங்கு வெண்நீறு அணிந்து பூதம் சூழ, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார்தாமே.

2

நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இந் நாள் நனிபள்ளி
உள்ளார்; போய் நல்லூர்த் தங்கி
பாகப் பொழுது எலாம் பாசூர்த் தங்கி, பரிதி
நியமத்தார், பன்னிரு நாள்;
வேதமும் வேள்விப் புகையும் ஓவா விரிநீர் மிழலை
எழுநாள்-தங்கி,
போகமும் பொய்யாப் பொருளும் ஆனார்-புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார்தாமே.

3

துறம் காட்டி, எல்லாம் விரித்தார் போலும்; தூ மதியும்
பாம்பும் உடையார் போலும்;
மறம் காட்டி, மும்மதிலும் எய்தார் போலும்; மந்திரமும்
தந்திரமும் தாமேபோலும்;
அறம் காட்டி, அந்தணர்க்கு அன்று ஆலநீழல் அறம்
அருளிச்செய்த அரனார்-இந் நாள்,
புறங்காட்டு எரி ஆடிப் பூதம் சூழ, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார் தாமே.

4

வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக, மழுவாள் கை
ஏந்தி, மயானத்து ஆடி,
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலித் திரு
வாஞ்சியத்தார்; திரு நள்ளாற்றார்;
கார் ஏறு கண்டத்தார்; காமற் காய்ந்த கண் விளங்கு
நெற்றியார்; கடல் நஞ்சு உண்டார்-
போர் ஏறு தாம் ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார்தாமே.

5

கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கபாலம்
கை ஏந்தி, கணங்கள் பாட,
ஊரார் இடு பிச்சை கொண்டு, உழ(ல்)லும் உத்தமராய்
நின்ற ஒருவனார்தாம்:
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர்; திரு ஆரூர்த்
திரு மூலட்டானம் மேயார்-
போர் ஆர் விடை ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார்தாமே.

6

காது ஆர் குழையினர்; கட்டங்கத்தர்;
கயிலாயமாமலையார்; காரோணத்தார்;
மூதாயர் மூதாதை இல்லார் போலும்; முதலும் இறுதியும்
தாமே போலும்;
மாது ஆய மாதர் மகிழ, அன்று, வன் மத வேள் தன்
உடலம் காய்ந்தார்-இந்நாள்
போது ஆர் சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார் தாமே.

7

இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும்
இமையவர்க்கும் ஏகம் ஆய் நின்று, சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான்;
தன் பெருமையே பேச நின்று,
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும்;
மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர்-
புறம் தாழ்சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார்தாமே.

8

குலா வெண்தலைமாலை என்பு பூண்டு, குளிர்
கொன்றைத்தார் அணிந்து, கொல் ஏறு ஏறி,
கலா வெங்களிற்று உரிவைப்போர்வை மூடி, கை ஓடு
அனல் ஏந்தி, காடு உறைவார்;
நிலா வெண்மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல்
சூழ் நெய்த்தானம் மேய செல்வர்-
புலா வெண்தலை ஏந்திப் பூதம் சூழ, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார்தாமே.

9

சந்தித்த கோவணத்தர், வெண் நூல் மார்பர்;
சங்கரனைக் கண்டீரோ? கண்டோம்-இந் நாள்,
பந்தித்த வெள்விடையைப் பாய ஏறி, படுதலையில்
என்கொலோ ஏந்திக் கொண்டு,
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம்,
மணி ஆரூர் நின்று, அந்தி கொள்ளக்கொள்ள,
பொன் தீ மணிவிளக்குப் பூதம் பற்ற, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார்தாமே.

10

பாதங்கள் நல்லார் பரவி ஏத்த, பத்திமையால் பணி
செய்யும் தொண்டர்தங்கள்
ஏதங்கள் தீர, இருந்தார்போலும்; எழுபிறப்பும் ஆள்
உடைய ஈசனார்தாம்-
வேதங்கள் ஓதி, ஓர் வீணை ஏந்தி, விடை ஒன்று
தாம் ஏறி, வேதகீதர்,
பூதங்கள் சூழ, புலித்தோல் வீக்கி, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார்தாமே.

11

பட்டு உடுத்து, தோல் போர்த்து, பாம்பு ஒன்று
ஆர்த்து, பகவனார், பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய், தீஏந்தி, செல்வார் தம்மைத் தில்லைச்
சிற்றம்பலத்தே கண்டோம், இந் நாள்;
விட்டு இலங்கு சூலமே, வெண் நூல், உண்டே;
ஓதுவதும் வேதமே; வீணை உண்டே;
கட்டங்கம் கையதே, -சென்று காணீர்!-கறை சேர்
மிடற்று எம் கபாலியார்க்கே.