பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் கருத்தனாய் ஆண்டனன் ஆண்டனன்; ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆட்- பூண்டனன் பூண்டனன்; பொய் அன்று; சொல்லுவன்; கேண்மின்கள்: மீண்டனன் மீண்டனன், வேதவித்து அல்லாதவர்கட்கே.
பாடுவன் பாடுவன், பார்ப் பதிதன் அடி பற்றி, நான் தேடுவன் தேடுவன்; திண்ணெனப் பற்றிச் செறிதர ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளை, கூடுவன் கூடுவன், குற்றம் அது அற்று என் குறிப்பொடே.
காய்ந்தவன் காய்ந்தவன், கண் அழலால் அன்று காமனை; பாய்ந்தவன் பாய்ந்தவன், பாதத்தினால் அன்று கூற்றத்தை; ஆய்ந்தவன் ஆய்ந்தவன், ஆமாத்தூர் எம் அடிகளார், ஏய்ந்தவன் ஏய்ந்தவன், எம்பிராட்டியைப் பாகமே.
ஓர்ந்தனன் ஓர்ந்தனன், உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள், சேர்ந்தனன் சேர்ந்தனன், சென்று திரு ஒற்றியூர் புக்கு; சார்ந்தனன் சார்ந்தனன், சங்கிலி மென்தோள் தடமுலை; ஆர்ந்தனன் ஆர்ந்தனன், ஆமாத்தூர் ஐயன் அருள் அதே.
வென்றவன் வென்றவன், வேள்வியில் விண்ணவர் தங்களை; சென்றவன் சென்றவன், சில்பலிக்கு என்று தெரு இடை; நின்றவன் நின்றவன், நீதி நிறைந்தவர் தங்கள் பால்; அன்று அவன் அன்று அவன், செய் அருள்; ஆமாத்தூர் ஐயனே.
காண்டவன் காண்டவன், காண்டற்கு அரிய கடவுளாய்; நீண்டவன் நீண்டவன், நாரணன் நான்முகன் நேடவே; ஆண்டவன் ஆண்டவன், ஆமாத்தூரையும் எனையும் ஆள்; பூண்டவன் பூண்டவன், மார்பில் புரிநூல் புரளவே.
எண்ணவன் எண்ணவன், ஏழ் உலகத்து உயிர் தங்கட்கு; கண் அவன் கண் அவன், “காண்டும்” என்பார் அவர் தங்கட்கு; பெண் அவன் பெண் அவன், மேனி ஓர்பாகம்; ஆம், பிஞ்ஞகன்; அண்ணவன் அண்ணவன்-ஆமாத்தூர் எம் அடிகளே.
பொன்னவன் பொன்னவன்; பொன்னைத் தந்து என்னைப் போக விடா மின்னவன் மின்னவன்; வேதத்தின் உள் பொருள் ஆகிய அன்னவன் அன்னவன்; ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால் “என்னவன் என்னவன்!” என் மனத்து இன்புற்று இருப்பனே.
தேடுவன் தேடுவன், செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்; நாடுவன் நாடுவன், நாபிக்கு மேலே ஓர் நால்விரல்; மா(ட்)டுவன் மா(ட்)டுவன், வன் கை பிடித்து; மகிழ்ந்து உளே ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளே.
உற்றனன், உற்றவர் தம்மை ஒழிந்து, உள்ளத்து உள்பொருள் பற்றினன், பற்றினன், பங்கயச் சேவடிக்கே செல்ல; அற்றனன் அற்றனன்; ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆட்- பெற்றனன் பெற்றனன், பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே.
ஐயனை, அத்தனை, ஆள் உடை ஆமாத்தூர் அண்ணலை, மெய்யனை, மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை, மையனை, மை அணி கண்டனை, வன் தொண்டன்-ஊரன்-சொல் பொய் ஒன்றும் இன்றிப் புலம்புவார் பொன் கழல் சேர்வரே.