நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர்; நளிர் கங்கை தங்கு முடியர்
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல, கறை கொள் மணிசெய் மிடறர்;
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும், எரி ஆடும் ஆறும், இவர் கைப்
பகை வளர் நாகம் வீசி, மதி அங்கு மாறும் இது போலும், ஈசர் இயல்பே?