பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ, உலகில்-திரு நின்ற செம்மை உளதே?- அவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடை ஆவது; அதன் மேல் ஒர் ஆடல் அரவம்; கவண் அளவு உள்ள உள்கு; கரிகாடு கோயில்; கலன் ஆவது ஓடு, கருதில்; அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும், அகம் தேர்வர், தேவர் அவரே.
விரி கதிர் ஞாயிறு அல்லர்; மதி அல்லர்; வேத விதி அல்லர்; விண்ணும் நிலனும் திரி தரு வாயு அல்லர்; செறு தீயும் அல்லர்; தெளி நீரும் அல்லர், தெரியில்; அரி தரு கண்ணியாளை ஒரு பாகம் ஆக, அருள் காரணத்தில் வருவார் எரி அரவு ஆரம் மார்பர்; இமையாரும் அல்லர்; இமைப்பாரும் அல்லர், இவரே.
தேய் பொடி வெள்ளை பூசி, அதன் மேல் ஒர் திங்கள்-திலகம் பதித்த நுதலர் காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர்; கரிகாடர்; கால் ஒர் கழலர்; வேய் உடன் நாடு தோளி அவள் விம்ம, வெய்ய மழு வீசி, வேழ உரி போர்த்து ஏ, இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும்! இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே?
வளர் பொறி ஆமை புல்கி, வளர் கோதை வைகி, வடி தோலும் நூலும் வளர, கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர்; கிளர் காடும், நாடும், மகிழ்வர்; நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி, குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல், குலாவி உடனே.
உறைவது காடு போலும்; உரி-தோல் உடுப்பர்; விடை ஊர்வது; ஓடு கலனா; இறை இவர் வாழும் வண்ணம் இதுவேலும், ஈசர் ஒரு பால் இசைந்தது; ஒரு பால், பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்; அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது, அமரர் உலகே.
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி, கழல்கால் சிலம்ப, அழகு ஆர் அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார்; ஒருவர்; இருவர்; மணி கிளர் மஞ்ஞை ஆல, மழை ஆடு சோலை மலையான் மகட்கும் இறைவர் அணி கிளர் அன்ன வண்ணம், அவள் வண்ண வண்ணம்; அவர் வண்ண வண்ணம், அழலே.
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர்; நளிர் கங்கை தங்கு முடியர் மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல, கறை கொள் மணிசெய் மிடறர்; முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும், எரி ஆடும் ஆறும், இவர் கைப் பகை வளர் நாகம் வீசி, மதி அங்கு மாறும் இது போலும், ஈசர் இயல்பே?
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி; மால் அயன் தன் உடல் வெந்து வீய, சுடர் நீறு அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர்; தமியார் ஒருவர்; இருவர்; களி கிளர் வேடம் உண்டு, ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்- அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக, எழில் வேதம் ஓதுமவரே.
மலை மடமங்கையோடும், வடகங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் தலை கலன் ஆக உண்டு, தனியே திரிந்து, தவவாணர் ஆகி முயல்வர்; விலை இலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே.
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது, ஒர் காது சுரிசங்கம் நின்று புரள, விதி விதி வேத கீதம் ஒரு பாடும் ஓத, ஒரு பாடு மெல்ல நகுமால்; மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் இது இவர் வண்ண வண்ணம்; இவள் வண்ண வண்ணம்; எழில் வண்ண வண்ணம், இயல்பே!
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து, தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!
கண்காள், காண் மின்களோ!-கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை, எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை,-கண்காள், காண்மின்களோ!
செவிகாள், கேண்மின்களோ!-சிவன், எம் இறை, செம்பவள எரி போல், மேனிப் பிரான், திறம் எப்போதும், செவிகாள், கேண்மின்களோ!
மூக்கே, நீ முரலாய்!-முதுகாடு உறை முக்கணனை, வாக்கே நோக்கிய மங்கை மணாளனை,-மூக்கே, நீ முரலாய்!
வாயே, வாழ்த்துக் கண்டாய்!-மதயானை உரி போர்த்து, பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை- வாயே, வாழ்த்து கண்டாய்!
நெஞ்சே, நீ நினையாய்!-நிமிர் புன் சடை நின் மலனை, மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை,-நெஞ்சே, நீ நினையாய்!
கைகாள், கூப்பித் தொழீர்!-கடி மா மலர் தூவி நின்று, பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனை-கைகாள், கூப்பித் தொழீர்!
ஆக்கையால் பயன் என்?- அரன் கோயில் வலம்வந்து. பூக் கையால் அட்டி, “போற்றி!” என்னாத இவ் ஆக்கையால் பயன் என்?
கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில் கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?
உற்றார் ஆர் உளரோ?-உயிர் கொண்டு போம்பொழுது, குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு உற்றார் ஆர் உளரோ?
இறுமாந்து இருப்பன் கொலோ?-ஈசன் பல் கணத்து எண்ணப் பட்டு, சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று, அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ?
தேடிக் கண்டு கொண்டேன்!-திருமாலொடு நான்முகனும் தேடித் தேட ஒணாத் தேவனை, என் உளே, தேடிக் கண்டு கொண்டேன்!
சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ, கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும், நல்-துணை ஆவது நமச்சிவாயவே!
பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை; ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்; கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது; நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே!
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்; பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!
இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும், “விடுக்கிற்பிரால்!” என்று வினவுவோம் அல்லோம்; அடுக்கல் கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே!
வெந்த நீறு அருங் கலம், விரதிகட்கு எலாம்; அந்தணர்க்கு அருங் கலம் அருமறை, ஆறு அங்கம்; திங்களுக்கு அருங் கலம் திகழும் நீள் முடி நங்களுக்கு அருங் கலம் நமச்சிவாயவே.!
சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்; குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர் நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே!
வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும், ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும், நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே!
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது; சொல் அக விளக்கு அது சோதி உள்ள பல் அக விளக்கு அது பலரும் காண்பது; நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்- தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே; அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் நன் நெறி ஆவது நமச்சிவாயவே!
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன் பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ, நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே.
பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயம் ஆய், திரு நெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப் பெருகிட, “மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய், பிரானே!” எனலும், அருள் கொடு மா விடத்தை, எரியாமல், உண்ட அவன் அண்டர் அண்டர் அரசே.
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட, நிலம் நின்று தம்பம் அது அப் பரம் ஒரு தெய்வம் எய்த, “இது ஒப்பது இல்லை” இருபாலும் நின்று பணியப் பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன், பரமுதல் ஆய தேவர், சிவன் ஆயமூர்த்தி அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.
காலமும் நாள்கள் ஊழி படையா முன், ஏக உரு ஆகி, மூவர் உருவில், சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி, நின்ற தழலோன், ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறள் ஆய் ஒர் ஆலின் இலை மேல் பாலனும் ஆயவர்க்கு ஒர் பரம் ஆய மூர்த்தி அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.
நீடு உயர்விண்ணும் மண்ணும் நெடுவேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலியச் சூடிய கையர் ஆகி, இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும், ஓடிய தாருகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம், நமக்கு ஒர் சரணே.
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம் செய்து ஓடு புரம் மூன்று அலை நலிவு அஞ்சி ஓடி, அரியோடு தேவர் அரணம் புக, தன் அருளால்- கொலை நலி வாளி, மூள அரவு, அம் கை நாணும், அனல் பாய நீறு புரம் ஆம்- மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.
நீல நல் மேனி, செங்கண், வளை வெள் எயிற்றின், எரிகேசன், நேடி வரும் நாள காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின் கண், வந்து குறுகிப் பாலனை ஓட ஓடப் பயம் எய்துவித்த, உயிர் வவ்வு பாசம் விடும்-அக் காலனை வீடு செய்த கழல் போலும், அண்டர் தொழுது ஓது சூடு கழலே.
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி தன்னில்,-அவி உண்ண வந்த இமையோா பயம் உறும் எச்சன், அங்கு மதியோனும், உற்றபடி கண்டு நின்று பயம் ஆய்- அயனொடு மாலும், “எங்கள் அறியாமை ஆதி, கமி!” என்று இறைஞ்சி அகல, சயம் உறு தன்மை கண்ட தழல்வண்ணன், எந்தை, கழல் கண்டு கொள்கை கடனே.
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா, உலகினை ஏழும் முற்றும் இருள் மூட மூட, இருள் ஓட, நெற்றி ஒரு கண் அலர்தர, அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச, மதி போல் அலர்தரு சோதி போல் அலர் வித்த முக்கண் அவன், ஆம், நமக்கு ஓர் சரணே.
கழை படு காடு தென்றல் குயில் கூவ, அஞ்சுகணையோன், -அணைந்து புகலும் மழை வடி வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் எழில் பொடி வெந்து வீழ, இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல, தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல் வண்ணன் எந்தை சரணே.
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக, நிறைவு என்று தன் கண் அதனால் உடன் வழிபாடு செய்த திருமாலை, எந்தை பெருமான், உகந்து மிகவும் சுடர் அடியான் முயன்று சுழல் வித்து, அரக்கன் இதயம் பிளந்த கொடுமை அடல் வலி ஆழி, ஆழியவனுக்கு அளித்த அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.
“கடுகிய தேர் செலாது, கயிலாயம் மீது; கருதேல், உன் வீரம்; ஒழி, நீ! முடுகுவது அன்று, தன்மம்” என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா, “விடு விடு” என்று சென்று விரைவு உற்று, அரக்கன், வரை உற்று எடுக்க, முடிதோள நெடு நெடு இற்று வீழ, விரல் உற்ற பாதம் நினைவு உற்றது, என் தன் மனனே.
பற்று அற்றார் சேர் பழம் பதியை, பாசூர் நிலாய பவளத்தை, சிற்றம்பலத்து எம் திகழ்கனியை, தீண்டற்கு அரிய திரு உருவை, வெற்றியூரில் விரிசுடரை, விமலர்கோனை, திரை சூழ்ந்த ஒற்றியூர் எம் உத்தமனை, உள்ளத்துள்ளே வைத்தேனே.
ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை, கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை, வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை, மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே.
மதி அம் கண்ணி நாயிற்றை, மயக்கம் தீர்க்கும் மருந்தினை, அதிகைமூதூர் அரசினை, ஐயாறு அமர்ந்த ஐயனை, விதியை, புகழை, வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை, நெதியை, ஞானக் கொழுந்தினை, நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே.
புறம் பயத்து எம் முத்தினை, புகலூர் இலங்கு பொன்னினை, உறந்தை ஓங்கு சிராப் பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை, கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை, அறம் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை, அடைந்தேனே.
கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும் விடம் உணியை, ஆலங்காட்டில் அம் தேனை, அமரர் சென்னி ஆய்மலரை, பாலில்-திகழும் பைங்கனியை, பராய்த்துறை எம் பசும் பொன்னை, சூலத்தானை, துணை இலியை, தோளைக் குளிரத் தொழுதேனே.
மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையை, கருகாவூரில் கற்பகத்தை, காண்டற்கு அரிய கதிர் ஒளியை, பெருவேளூர் எம் பிறப்பு இலியை, பேணுவார்கள் பிரிவு அரிய திரு வாஞ்சியத்து எம் செல்வனை, சிந்தையுள்ளே வைத்தேனே.
எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை, குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை, நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை, அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே.
மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை, ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை, சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை, மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே.
சோற்றுத்துறை எம் சோதியை, துருத்தி மேய தூமணியை, ஆற்றில் பழனத்து அம்மானை, ஆலவாய் எம் அருமணியை, நீரில் பொலிந்த நிமிர் திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத் தோற்றக் கடலை, அடல் ஏற்றை, தோளைக் குளிரத் தொழுதேனே.
புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து எம் போர் ஏற்றை, வித்து ஆய் மிழலை முளைத்தானை, வேள்விக் குடி எம் வேதியனை, பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை, பொதியில் மேய புராணனை, வைத்தேன், என் தன் மனத்துள்ளே-மாத்தூர் மேய மருந்தையே.
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள் ஏறு ஊர்ந்தானை, அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானை, சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி, “எந்தை பெம்மான், என் எம்மான்” என்பார் பாவம் நாசமே.
ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை; ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்; ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது; ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே.
இரண்டு கொல் ஆம் இமையோர் தொழு பாதம்; இரண்டு கொல் ஆம் இலங்கும் குழை; பெண், ஆண், இரண்டு கொல் ஆம் உருவம்; சிறு மான், மழு, இரண்டு கொல் ஆம் அவர் ஏந்தின தாமே.
மூன்று கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன; மூன்று கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை; மூன்று கொல் ஆம் கணை, கையது வில், நாண்; மூன்று கொல் ஆம் புரம் எய்தன தாமே.
நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன; நாலு கொல் ஆம் சனனம் முதல்- தோற்றமும்; நாலு கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் நாலு கொல் ஆம் மறை பாடினதாமே.
அஞ்சு கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்; அஞ்சு கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன; அஞ்சு கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை; அஞ்சு கொல் ஆம் அவர் ஆடின தாமே.
ஆறு கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன; ஆறு கொல் ஆம் அவர் தம் மகனார் முகம்; ஆறு கொல் ஆம் தார்மிசை வண்டின் கால்; ஆறு கொல் ஆம் சுவை ஆக்கினதாமே.
ஏழு கொல் ஆம் அவர் ஊழி படைத்தன; ஏழு கொல் ஆம் அவர் கண்ட இருங் கடல்; ஏழு கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் ஏழு கொல் ஆம் இசை ஆக்கினதாமே.
எட்டுக் கொல் ஆம் அவர் ஈறு இல் பெருங் குணம்; எட்டுக் கொல் ஆம் அவர் சூடும் இன மலர்; எட்டுக் கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன; எட்டுக் கொல் ஆம் திசை ஆக்கினதாமே.
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன; ஒன்பது போல் அவர் மார்பினில் நூல்-இழை; ஒன்பது போல் அவர் கோலக் குழல் சடை; ஒன்பது போல் அவர் பார் இடம்தானே.
பத்துக் கொல் ஆம் அவர் பாம்பின் கண், பாம்பின் பல்; பத்துக் கொல் ஆம் எயிறு(ந்) நெரிந்து உக்கன; பத்துக் கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை; பத்துக் கொல் ஆம் அடியார் செய்கை தானே.
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும் கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும் வித்தினை, வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற அத்தனை-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
முன்பனை, உலகுக்கு எல்லாம் மூர்த்தியை, முனிகள் ஏத்தும் இன்பனை, இலங்கு சோதி இறைவனை, அரிவை அஞ்ச வன் பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள் அன்பனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
கரும்பினும் இனியான் தன்னை, காய்கதிர்ச் சோதியானை, இருங்கடல் அமுதம் தன்னை, இறப்பொடு பிறப்பு இலானை, பெரும் பொருள் கிளவியானை, பெருந்தவ முனிவர் ஏத்தும் அரும்பொனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
செருத்தனை அருத்தி செய்து செஞ் சரம் செலுத்தி ஊர்மேல் கருத்தனை, கனகமேனிக் கடவுளை, கருதும் வானோர்க்கு ஒருத்தனை, ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா நிருத்தனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!
கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை வெள் ஏறு ஏற்றனை, இமையோர் ஏத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல் ஆற்றனை, அடியர் ஏத்தும் அமுதனை, அமுத யோக நீற்றனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!
கருப் பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன், விருப்பனை, விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் பொருப்பனை, பொருப்பன் மங்கை பங்கனை, அங்கை ஏற்ற நெருப்பனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!
நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து உளானை, சாதியை, சங்க வெண் நீற்று அண்ணலை, விண்ணில் வானோர் சோதியை, துளக்கம் இல்லா விளக்கினை, அளக்கல் ஆகா ஆதியை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனை, பொருப்போடு ஒக்கும் மழ களியானையின் தோல் மலை மகள் நடுங்கப் போர்த்த குழகனை, குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த அழகனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
விண் இடை மின் ஒப்பானை, மெய்ப் பெரும் பொருள் ஒப்பானை, கண் இடை மணி ஒப்பானை, கடு இருள் சுடர் ஒப்பானை, எண் இடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட அண்ணலை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் நிரவனை, நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர் தங்கள் குரவனை, குளிர் வெண் திங்கள் சடை இடைப் பொதியும் ஐவாய்- அரவனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர் கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி, இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை, கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே!
பின் இலேன், முன் இலேன், நான்; பிறப்பு அறுத்து அருள் செய்வானே! என் இலேன், நாயினேன் நான்? இளங் கதிர்ப் பயலைத் திங்கள் சில்-நிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே! நின் அலால் களைகண் ஆரே? நீறு சேர் அகலத்தானே!
கள்ளனேன் கள்ளத் தொண்டு ஆய்க் காலத்தைக் கழித்துப் போக்கி, தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்; “உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி” என்று வெள்கினேன்; வெள்கி, நானும் விலா இறச் சிரித்திட்டனே!
உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே தகளி ஆக, மடம் படும் உணர் நெய் அட்டி, உயிர் எனும் திரி மயக்கி, இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில், கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே.
வஞ்சப் பெண் அரங்கு கோயில், வாள் எயிற்று அரவம் துஞ்சா; வஞ்சப் பெண் இருந்த குழல் வான் தவழ் மதியம் தோயும்; வஞ்சப் பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழல் உற்று வஞ்சப் பெண் உறக்கம் ஆனேன்; வஞ்சனேன் என் செய்கேனே!
உள்குவார் உள்ளத்தானை, உணர்வு எனும் பெருமையானை, உள்கினேன், நானும் காண்பான்; உருகினேன்; ஊறி ஊறி எள்கினேன்; எந்தை! பெம்மான்! இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே?
மோத்தையைக் கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து, உன் வார்த்தையைப் பேச ஒட்டா மயக்க, நான் மயங்குகின்றேன்; சீத்தையை, சிதம்பு தன்னை, செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா ஊத்தையை, கழிக்கும் வண்ணம் உணர்வு தா, உலக மூர்த்தீ!
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றி, பாவித்தேன், பரமா, நின்னை! சங்கு ஒத்த மேனிச் செல்வா! சாதல் நாள், நாயேன் உன்னை, “எங்கு உற்றாய்?” என்ற போதா, “இங்கு உற்றேன்” என் கண்டாயே!
வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்து, என் உள்ளமே புகுந்து நின்றார்க்கு, உறங்கும் நான் புடைகள் பேர்ந்து “கள்ளரோ, புகுந்தீர்?” என்ன, கலந்து தான் நோக்கி, நக்கு, “வெள்ளரோம்!” என்று, நின்றார்-விளங்கு இளம்பிறையனாரே.
பெருவிரல் இறைதான் ஊன்ற, பிறை எயிறு இலங்க அங்காந்து அரு வரை அனைய தோளான் அரக்கன், அன்று, அலறி வீழ்ந்தான்; இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் திருவடி சுமந்து கொண்டு காண்க, நான் திரியும் ஆறே!
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன், மதி இலாதேன்; இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் அருள் அவாப் பெறுதல் இன்றி, அஞ்சி, நான் அலமந்தேற்குப் பொருள் அவாத் தந்த ஆறே போது போய்ப் புலர்ந்தது அன்றே!
மெய்ம்மை ஆம் உழவைச் செய்து, விருப்பு எனும் வித்தை வித்தி, பொய்ம்மை ஆம் களையை வாங்கி, பொறை எனும் நீரைப் பாய்ச்சி, தம்மையும் நோக்கிக் கண்டு, தகவு எனும் வேலி இட்டு, செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே!
“எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று, இங்கு எம்பிரான் ஆட்ட, ஆடி, என் உளே உழிதர் வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கும் என்றால், எம்பிரான் என்னின் அல்லால், என் செய்கேன், ஏழையேனே?
காயமே கோயில் ஆக, கடிமனம் அடிமை ஆக, வாய்மையே தூய்மை ஆக, மனமனி இலிங்கம் ஆக, நேயமே நெய்யும் பாலா, நிறைய நீர் அமைய ஆட்டி, பூசனை ஈசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே.
வஞ்சகப் புலையனேனை வழி அறத் தொண்டில் பூட்டி “அஞ்சல்!” என்று ஆண்டுகொண்டாய்; அதுவும் நின் பெருமை அன்றே! நெஞ்சு அகம் கனிய மாட்டேன்; நின்னை உள் வைக்க மாட்டேன்; நஞ்சு இடம் கொண்ட கண்டா! என், என நன்மைதானே?
நாயினும் கடைப்பட்டேனை நன்நெறி காட்டி ஆண்டாய்; ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே! அமுதம் ஒத்து நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய்; நிலாவி நிற்க, நோய் அவை சாரும் ஆகில், நோக்கி நீ அருள் செயாயே!
விள்ளத்தான் ஒன்று மாட்டேன்; விருப்பு எனும் வேட்கையாலே வள்ளத் தேன் போல நுன்னை வாய் மடுத்து உண்டிடாமே, உள்ளத்தே நிற்றியேனும், உயிர்ப்புளே வருதியேனும், கள்ளத்தே நிற்றி; அம்மா! எங்ஙனம் காணும் ஆறே?
ஆசை வன் பாசம் எய்தி, அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய், ஊசலாட்டுண்டு, வாளா, உழந்து நான் உழிதராமே,- தேசனே! தேசமூர்த்தி! திரு மறைக்காடு மேய ஈசனே!-உன் தன் பாதம் ஏத்தும் ஆறு அருள், எம்மானே!
நிறைவு இலேன், நேசம் இல்லேன்; நினைவு இலேன்; வினையின் பாசம் மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள், என் எம்மான்! சிறை இலேன் செய்வது என்னே? திருவடி பரவி ஏத்தக் குறைவு இலேன்; குற்றம் தீராய்-கொன்றை சேர் சடையினானே!
நடு இலாக் காலன் வந்து நணுகும் போது அறிய ஒண்ணா; அடுவன, அஞ்சு பூதம்; அவை தமக்கு ஆற்றல் ஆகேன்; படுவன, பலவும் குற்றம்; பாங்கு இலா, மனிதர் வாழ்க்கை; கெடுவது, இப் பிறவி சீ! சீ!-கிளர் ஒளிச் சடையினீரே!
கடும்பகல் நட்டம் ஆடி, கையில் ஓர் கபாலம் ஏந்தி, இடும் பலிக்கு இல்லம் தோறும் உழி தரும் இறைவனீரே! நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென் கூந்தல் கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ?
கோவணம் உடுத்த ஆறும், கோள் அரவு அசைத்த ஆறும், தீ வணச் சாம்பர் பூசித் திரு உரு இருந்த ஆறும், பூவணக் கிழவனாரை புலி உரி அரையனாரை, ஏ வணச் சிலையினாரை, யாவரே எழுதுவாரே?
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்; துளக்கு இல் நல் மலர் தொடுத்தால்-தூய விண் ஏறல் ஆகும்; விளக்கு இட்டார் பேறு, சொல்லின், மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்; அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளும் ஆறே!
சந்திரன் சடையில் வைத்த சங்கரன், சாமவேதி, அந்தரத்து அமரர் பெம்மான், ஆன் நல் வெள் ஊர்தியான் தன் மந்திரம் நமச்சிவாய ஆக, நீறு அணியப் பெற்றால், வெந்து அறும், வினையும் நோயும் வெவ் அழல் விறகு இட்டன்றே!
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்து இடைப் புகுந்து நின்று துள்ளுவர், சூறை கொள்வர்; தூ நெறி விளைய ஒட்டார் முள் உடையவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல் உள் இடை மறைந்து நின்று, அங்கு உணர்வினால் எய்யல் ஆமே.
தொண்டனேன் பிறந்து, வாளா தொல் வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து, நாளும் பெரியது ஓர் அவாவில் பட்டேன்; அண்டனே! அமரர்கோவே! அறிவனே! “அஞ்சல்” என்னாய்- தெண் திரைக் கங்கை சூடும் திருத் தகு சடையினானே!
பாறினாய்,-பாவி நெஞ்சே!-பன்றி போல் அளற்றில் பட்டு தேறி நீ நினைதி ஆயின், சிவகதி திண்ணம் ஆகும்; ஊறலே உவர்ப்பு நாறி, உதிரமே ஒழுகும் வாசல் கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே!
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர வைத்த கால், அரக்கனோ தன் வான்முடி தனக்கு நேர்ந்தான்; “மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி தன் மேல் வைத்த கால் வருந்தும்” என்று வாடி நான் ஒடுங்கினேனே.
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம் தன்னுள் சென்றிலேன்; ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்; நின்று உளே துளும்புகின்றேன்; நீசனேன்; ஈசனேயோ! இன்று உளேன்! நாளை இல்லேன்!-என் செய்வான் தோன்றினேனே!
கற்றிலேன், கலைகள் ஞானம்; கற்றவர் தங்களோடும் உற்றிலேன்; ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன்; பெற்றிலேன்; பெருந் தடங்கண் பேதையார் தமக்கும் பொல்லேன்; எற்று உளேன்? இறைவனே!-நான் என் செய்வான் தோன்றினேனே!
மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணர மாட்டேன்; மூட்டி, நான், முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்; பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம் தன்னை; ஈட்டினேன்; களைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
கரைக் கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் உரைக் கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன்; ஆதலாலே, அரைக் கிடந்து அசையும் நாகம் அசைப்பனே! இன்ப வாழ்க்கைக்கு இரைக்கு இடைந்து உருகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன், தேவ தேவன், வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர் தமைப் புறமே பேசக் கூச்சு இலேன்; ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன்; நாச் சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன் ஏச்சுளே நின்று, மெய்யே என் செய்வான் தோன்றினேனே!
தேசனை, தேசம் ஆகும் திருமால் ஓர் பங்கன் தன்னை, பூசனை, புனிதன் தன்னை, புணரும் புண்டரிகத்தானை, நேசனை, நெருப்பன் தன்னை, நிவஞ்சகத்து அகன்ற செம்மை ஈசனை, அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
விளைக்கின்ற வினையை நோக்கி, வெண் மயிர் விரவி, மேலும் முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன், இயல; வெள்ளம் திளைக்கின்ற முடியினான் தன் திருவடி பரவமாட்டாது இளைக்கின்றேன், இருமி ஊன்றி;-என் செய்வான் தோன்றினேனே!
விளைவு அறிவு இலாமையாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து களைகணும் இல்லேன்; எந்தாய்! காமரம் கற்றும் இல்லேன்! தளை அவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பம் எய்த இளையனும் அல்லேன்; எந்தாய்!-என் செய்வான் தோன்றினேனே!
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட அட்ட மா மூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும் எள்-தனை எட்ட மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
தம் மானம் காப்பது ஆகித் தையலார் வலியுள் ஆழ்ந்து அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற எம்மானை,-நினைய மாட்டேன்;-என் செய்வான் தோன்றினேனே!
மக்களே, மணந்த தாரம், வல் வயிற்று அவரை, ஓம்பும் சிக்குளே அழுந்தி, ஈசன் திறம் படேன்; தவம் அது ஓரேன்; கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும், இக் களேபரத்தை ஓம்ப, என் செய்வான் தோன்றினேனே!
கூழையேன் ஆகமாட்டேன், கொடு வினைக் குழியில் வீழ்ந்து ஏழின் இன் இசையினாலும் இறைவனை ஏத்த மாட்டேன்; மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தை மார் தமக்கும் பொல்லேன் ஏழையேன் ஆகி, நாளும் என் செய்வான் தோன்றினேனே!
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்; பின்னை நான் பித்தன் ஆகிப் பிதற்றுவன், பேதையேன் நான்; என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை என் உளே நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
கறை அணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்; பிறை நுதல் பேதை மாதர் பெய் வளையார்க்கும் அல்லேன்; மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
வளைத்து நின்று, ஐவர்கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய, தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல்-எரி மடுத்த நீரில்- திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல்-தெளிவு இலாதேன், இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, நின் தாள் பரவி, ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்-இருங் கங்கை என்னும் காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வன முலைமேல் பாம்பு அலைக்கும் சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
உடம்பைத் தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் இடும்பைப் படாமல் இரங்குகண்டாய்-இருள் ஓடச் செந்தீ அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா! அழலே உமிழும் படம் பொத்து அரவு அரையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும் மூரித் திரைப் பௌவம் நீக்குகண்டாய்-முன்னை நாள் ஒரு கால் வேரித் தண் பூஞ் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழச் செந்தீப் பாரித்த கண் உடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்-அண்டமே அளவும் பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து, வேய்த்தோளி அஞ்சப் பருவரைத் தோல் உரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
இடுக்கு ஒன்றும் இன்றி, எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய்-அண்டம் எண் திசையும் சுடர்த் திங்கள் சூடி, சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி, படர்க்கொண்ட செஞ்சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
அடலைக்கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் நடலைப் படாமை விலக்கு கண்டாய்-நறுங் கொன்றை, திங்கள், சுடலைப் பொடிச்-சுண்ணம், மாசுணம், சூளாமணி, கிடந்து படரச் சுடர் மகுடா! எம்மை ஆளும் பசுபதியே!
துறவித் தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் மறவித்தொழில் அது மாற்றுகண்டாய்-மதில் மூன்று உடைய அறவைத்தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப்- பறவைப்புரம் எரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
சித்தத்து உருகி, “சிவன், எம்பிரான்” என்று சிந்தையுள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்- மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம் பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
விடையும் விடைப் பெரும் பாகா! என் விண்ணப்பம்: வெம்மழுவாள்- படையும், படை ஆய் நிரைத்த பல் பூதமும், பாய்புலித்தோல்- உடையும், முடைத்தலைமாலையும், மாலைப் பிறை ஒதுங்கும் சடையும், இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
விஞ்சத் தடவரை வெற்பா! என் விண்ணப்பம்; மேல் இலங்கு சங்கக் கலனும், சரி கோவணமும், தமருகமும், அந்திப் பிறையும், அனல் வாய் அரவும், விரவி எல்லாம் சந்தித்து இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
வீந்தார் தலைகலன் ஏந்தீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு சாந்து ஆய வெந்ததவள-வெண் நீறும், தகுணிச்சமும், பூந்தாமரை மேனி, புள்ளி உழை-மான் அதள், புலித்தோல், தாம்தாம் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
வெஞ்சமர் வேழத்து உரியாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும், வான்மதியும், நஞ்சம் மா நாகம், நகுசிரமாலை, நகுவெண்தலை, தஞ்சமா வாழும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
வேலைக்-கடல் நஞ்சம் உண்டாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு காலற் கடந்தான் இடம் கயிலாயமும், காமர் கொன்றை, மாலைப் பிறையும், மணி வாய் அரவும், விரவி எல்லாம் சாலக் கிடக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
வீழிட்ட கொன்றை அம்தாராய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு சூழ் இட்டு இருக்கும் நல் சூளாமணியும், சுடலை நீறும், ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும், அரவும், என்பு, ஆமை ஓடும், தாழ் இட்டு இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
விண்டார் புரம் மூன்றும் எய்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி-நீறும், தொழுது பாதம் கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்- தண்தார் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு கொடு கொட்டி, கொக்கரை, தக்கை, குழல், தாளம், வீணை, மொந்தை, வடு விட்ட கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும், தடுகுட்டம் ஆடும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
வெண் திரைக் கங்கை விகிர்தா! என் விண்ணப்பம்: மேல் இலங்கு கண்டிகை பூண்டு, கடி சூத்திரம்மேல் கபாலவடம், குண்டிகை, கொக்கரை, கொன்றை, பிறை, குறள் பூதப்படை தண்டி வைத்திட்ட சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
வேதித்த வெம்மழு ஆளீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு சோதித் திருக்கும், நல் சூளாமணியும், சுடலை நீறும், பாதிப்பிறையும், படுதலைத்துண்டமும், பாய் புலித்தோல், சாதித்து இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
விவந்து ஆடிய கழல் எந்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு தவந்தான் எடுக்கத் தலைபத்து இறுத்தனை; தாழ் புலித்தோல் சிவந்து ஆடிய பொடி-நீறும், சிரமாலை சூடி நின்று தவம் தான் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து இலங்கு வெள்ளிப் புரி அன்ன வெண் புரிநூலன் விரிசடைமேல் வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடி, வெள் என்பு அணிந்து, வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே.
உடலைத் துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்பக் கடலைக் கடந்து, உய்யப் போயிடல் ஆகும்; கனகவண்ணப் படலைச் சடை, பரவைத் திரைக் கங்கை, பனிப்பிறை, வெண் சுடலைப் பொடி, கடவுட்கு அடிமைக்கண்-துணி, நெஞ்சமே!
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம் மூ உலகுக்கு அன்னையும் அத்தனும் ஆவாய்-அழல்வணா!-நீ அலையோ? உன்னை நினைந்தே கழியும், என் ஆவி; கழிந்ததன் பின் என்னை மறக்கப்பெறாய்; எம்பிரான்! உன்னை வேண்டியதே.
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய், நீ; நினையப் புகில் பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி; உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே!
முழுத்தழல்மேனித் தவளப்பொடியன், கனகக்குன்றத்து எழில் பரஞ்சோதியை, எங்கள் பிரானை, இகழ்திர்கண்டீர்; தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னை, தொழப்படும் தேவர்தம்மால்-தொழுவிக்கும் தன் தொண்டரையே.
விண் அகத்தான்; மிக்க வேதத்து உளான்; விரிநீர் உடுத்த மண் அகத்தான்; திருமால் அகத்தான்; மருவற்கு இனிய பண் அகத்தான்; பத்தர் சித்தத்து உளான்; பழ நாய் அடியேன் கண் அகத்தான்; மனத்தான்; சென்னியான் எம் கறைக்கண்டனே.
பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய் இருங்கடல் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு, கங்காளராய், வரும் கடல் மீள நின்று, எம் இறை நல் வீணை வாசிக்குமே.
வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும் தானம் துளங்கித் தலைதடுமாறில் என்? தண்கடலும் மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?-வேலை நஞ்சு உண்டு ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே.
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான் அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில், அவன் தனை யான் பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால், “இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான்” என்று எதிர்ப்படுமே!
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர்? இகலி, உன்னை நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்து அன்று, நின் பெருமை- பொன்னை ஒப்பாரித்து, அழலை வளாவி, செம்மானம் செற்று, மின்னை ஒப்பாரி, மிளிரும் சடைக்கற்றை வேதியனே!
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் தோள் மிசையே பவளக்குழை தழைத்தால் ஒக்கும், பல்சடை; அச் சடைமேல் பவளக்கொழுந்து அன்ன, பைம்முக நாகம்; அந் நாகத்தொடும், பவளக்கண் வாலமதி, எந்தை சூடும் பனிமலரே.
முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி, வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய்! பிணி மேய்ந்து இருந்த இருகால் குரம்பை இது நான் உடையது; இது பிரிந்தால், தருவாய், எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே!
“மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு ஊர் இடும்பை காவாய்!” என, கடை தூங்கு மணியைக் கையால் அமரர் நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை; அப்பால் தீ ஆய் எரிந்து பொடி ஆய்க் கழிந்த, திரிபுரமே.
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே-வந்து அமரர் முன்நாள் முந்திச் செழுமலர் இட்டு, முடி தாழ்த்து, அடி வணங்கும் நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே?
அந்தி வட்டத்து இளங்கண்ணியன், ஆறு அமர் செஞ்சடையான், புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும்,- பொய் என்பனோ- சந்தி வட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே?
உன் மத்தகமலர் சூடி, உலகம் தொழச் சுடலைப் பல்மத்தகம் கொண்டு, பல் கடைதோறும் பலி திரிவான்; என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் தன் மத்தகத்து ஒர் இளம்பிறை சூடிய சங்கரனே.
அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள்; ஐயம் உணல்; வரைப்பாவையைக் கொண்டது எக் குடிவாழ்க்கைக்கு? வான் இரைக்கும் இரைப்பா! படுதலை ஏந்து கையா! மறை தேடும் எந்தாய்! உரைப்பார் உரைப்பனவே செய்தியால்-எங்கள் உத்தமனே!
துறக்கப்படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடு இறப்பன்; இறந்தால், இரு விசும்பு ஏறுவன்; ஏறி வந்து பிறப்பன்; பிறந்தால், “பிறை அணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர் மறப்பன் கொலோ?” என்று, என் உள்ளம் கிடந்து மறுகிடுமே.
வேரி வளாய விரைமலர்க்கொன்றை புனைந்து, அனகன், சேரி வளாய என் சிந்தை புகுந்தான்; திருமுடிமேல் வாரி வளாய வருபுனல் கங்கைசடை மறிவு ஆய், ஏரி வளாவிக் கிடந்தது போலும், இளம்பிறையே.
கல்-நெடுங்காலம் வெதும்பி, கருங்கடல் நீர் சுருங்கி, பல்-நெடுங்காலம் மழைதான் மறுக்கினும், “பஞ்சம் உண்டு” என்று என்னொடும் சூள் அறும்-அஞ்சல்!-நெஞ்சே! இமையாத முக்கண் பொன்நெடுங்குன்றம் ஒன்று உண்டுகண்டீர், இப் புகல் இடத்தே.
மேலும் அறிந்திலன், நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து மாலும் அறிந்திலன்; மால் உற்றதே; வழிபாடு செய்யும் பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக் காலன் அறிந்தான், அறிதற்கு அரியான் கழல் அடியே!