பகைச் சுடர் ஆய்ப் பாவம் அறுப்பான் தன்னை,
பழி இலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை,
வகைச் சுடர் ஆய் வல் அசுரர் புரம் அட்டானை,
வளைவு இலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை,
மிகைச் சுடரை, விண்ணவர்கள், மேல் அப்பாலை,
மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும்
திகைச் சுடரை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.