இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
ஏழையேற் கென்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை யென்றால்
அஞ்சலென் றருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலம்
செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.