பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
திருமாளிகைத் தேவர் - கோயில்
வ.எண் பாடல்
1

ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே!
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்குந் தேனே!
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

2

இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
இருட்பிழம் பறஎறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதீ !
அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !
அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே.

3

தற்பரம் பொருளே ! சசிகண்ட சிகண்டா !
சாமகண் டா ! அண்ட வாணா !
நற்பெரும் பொருளாய் ! உரைகலந் துன்னை
என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத் தளவிலா உன்னைத்
தந்தபொன் னம்பலத் தரசே !
கற்பமாய், உலகாய், அல்லைஆ னாயைத்
தொண்டனேன் கருதுமா கருதே.

4

பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
பிறப்பிறப் பறுத்தபே ரொளியே !
கருமையின் வெளியே ! கயற்கணாள் இமவான்
மகள்உமை யவள்களை கண்ணே !
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
அப்பனே அம்பலத் தமுதே
ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்
தொண்டனேன் உரைக்குமா றுரையே.

5

கோலமே ! மேலை வானவர் கோவே !
குணங்குறி இறந்ததோர் குணமே !
காலமே! கங்கை நாயகா! எங்கள்
காலகா லா ! காம நாசா !
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
கோயில்கொண் டாடவல் லானே !
ஞாலமே ! தமியேன் நற்றவத் தாயைத்
தொண்டனேன் நணுகுமா நணுகே

6

நீறணி பவளக் குன்றமே ! நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே !
வேறணி புவன போகமே! யோக
வெள்ளமே !மேருவில் வீரா!
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா!
அம்பொன்செய் அம்பலத் தரசே!
ஏறணி கொடிஎம் ஈசனே! உன்னைத்
தொண்டனேன் இசையுமா றிசையே.

7

தனதன்நற் றோழா ! சங்கரா ! சூல
பாணியே ! தாணுவே ! சிவனே !
கனகநற் றூணே ! கற்பகக் கொழுந்தே !
கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே ! குமர விநாயக சனக !
அம்பலத் தமரர்சே கரனே !
நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே.

8

திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
திகைக்கின்றேன் றனைத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
நிகழ்வித்த நிகரிலா மணியே !
அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய்
ஆலின்கீழ் இருந்த அம் பலவா !
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
தொண்டனேன் புணருமா புணரே.

9

தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும்
தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம்
நெறித்தரு ளியஉருத் திரனே!
அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட
ஆடப்பொன் னம்பலத் தாடும்
சொக்கனே! எவர்க்கும் தொடர்வரி யாயைத்
தொண்டனேன் தொடருமா தொடரே.

10

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்
கருள்புரி வள்ளலே ! மருளார்
இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர்
ஏறிய ஏறுசே வகனே!
அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ்
அடர்த்தபொன் னம்பலத் தரசே!
விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத்
தொண்டனேன் விரும்புமா விரும்பே.

11

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா
தயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட் டோர்வரி யாயை
மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
சிறுமையிற் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே! உன்னைத்
தொண்டனேன் நினையுமா நினையே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
திருமாளிகைத் தேவர் - கோயில்
வ.எண் பாடல்
1

உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
ஓமதூ மப்பட லத்தின்
பியர்நெடு மாடத் தகிற்புகைப் படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
நிறைந்தசிற் றம்பலக் கூத்தா!
மயரறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
வடிகள்என் மனத்துவைத் தருளே.

2

கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவள முத்தீ நான்மறைத் தொழிலால்
எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியந்
திரண்டசிற் றம்பலக் கூத்தா!
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
உன்அடிக் கீழதென் உயிரே.

3

வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்
கரும்பொடு மாந்திடு மேதி
பிரம்பிரி செந்நெற் கழனிச்செங் கழுநீர்ப்
பழனஞ்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புரை முடிவா னவர்அடி முறையால்
இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா!
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
நினைந்துநின் றொழிந்ததென் நெஞ்சே.

4

தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில்
கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில விலயத் திருநடத் தியல்பிற்
றிகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா!
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
மணிக்குறங் கடைந்ததென் மதியே.

5

நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்
கிளங்கமு குளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதண
முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த
செம்பொற்சிற் றம்பலக் கூத்தா!
பொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக்
கச்சுநூல் புகுந்ததென் புகலே.

6

அதுமதி இதுஎன் றலந்தலை நூல்கற்
றழைப்பொழிந் தருமறை யறிந்து
பிதுமதி வழிநின் றொழிவிலா வேள்விப்
பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணும் தேரரும் சேராச்
செல்வச்சிற் றம்பலக் கூத்தா!
மதுமதி வெள்ளத் திருவயிற் றுந்தி
வளைப்புண்டென் உளம்மகிழ்ந் ததுவே.

7

பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்,
பொடியணி பூணநூல் அகலம்,
பெருவரை புரைதிண தோளுடன் காணப்
பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமரு வுதரத் தார்திசை யடைப்ப
நடஞ்செய்சிற் றம்பலக் கூத்தா!
உருமரு வுதரத் தனிவடந் தொடர்ந்து
கிடந்ததென் உணர்வுணர்ந் துணர்ந்தே.

8

கணிஎரி, விசிறுகரம், துடி, விடவாய்க்
கங்கணம், செங்கைமற் றபயம்
பிணிகெட இவைகண் டுன்பெரு நடத்திற்
பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்தென் னமுதே!
சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா!
அணிமணி முறுவற் பவளவாய்ச் செய்ய
சோதியுள் அடங்கிற்றென் அறிவே

9

திருநெடு மால், இந் திரன் அயன், வானோர்
திருக்கடைக் காவலில் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றிற்
பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின்முப் புரந்தீ
விரித்தசிற் றம்பலக் கூத்தா!
கருவடி குழைக்கா தமலச்செங் கமல
மலர்முகம் கலந்ததென் கருத்தே.

10

ஏர்கொள்கற் பகமொத் திருசிலைப் புருவம்,
பெருந்தடங் கண்கள்மூன் றுடையுன்
பேர்கள் ஆயிரம்நூ றாயிரம் பிதற்றும்
பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள்கொக் கிறகும், கொன்றையும் துன்று
சென்னிச்சிற் றம்பலக் கூத்தா!
நீர்கொள்செஞ் சடைவாழ் புதுமதி மத்தம்
நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.

11

காமனக் காலன், தக்கன்,மிக் கெச்சன்
படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்
சேமநற் றில்லை வட்டங்கொண் டாண்ட
செல்வச்சிற் றம்பலக் கூத்தா!
பூமல ரடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
பொறுப்பர்என் புன்சொலின் பொருளே

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
திருமாளிகைத் தேவர் - கோயில்
வ.எண் பாடல்
1

உறவாகிய யோகமும் போகமுமாய்
உயிராளீ !’ என்னும்என் பொன் : ‘ஒருநாள்,
சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
சிலைகொண்டு பன்றிப்பின் சென்று நின்ற
மறவா ! ’ என் னும்; மணி நீரருவி
மகேந்திர மாமலை மேல்உறையும்
குறவா ! ’ என் னும் ; ‘குணக் குன்றே ! ’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே

2

‘காடாடு பல்கணம் சூழக் கேழற்
கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
வேடா ! மகேந்திர வெற்பா ! ‘என்னும்;
வினையேன் மடந்தைவிம் மாவெருவும்;
‘சேடா ! ’என் னும், செல்வர் மூவாயிரர்
செழுஞ்சோதி அந்தணர் செங்கைதொழும்
கோடா ! ’என் னும் குணக் குன்றே ! ’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே

3

கானே வருமுரண் ஏனம் எய்த
களிஆர் புளினநற் காளாய்! ’ என்னும்;
‘வானே தடவு நெடுங் குடுமி
மகேந்திர மாமலை மேல்இ ருந்த
தேனே ! ’ என்னும் தெய்வ வாய்மொழியார்
திருவாளர் மூவா யிரவர் தெய்வக்
கோனே ! ’என் னும் ‘குணக் குன்றே ! ’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே

4

‘வெறியேறு பன்றிப்பின் சென்றொருநாள்
விசயற் கருள்செய்த வேந்தே ! என்னும்;
‘மறியேறு சாரல் மகேந்திரமா
மலைமேல் இருந்த மருந்தே என்னும்;
நெறியே ! ’என் னும்; ‘நெறி நின்ற வர்கள்
நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
குறியே ! ’ என் னும்; ‘ குணக் குன்றே! ’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

5

‘செழுந்தென்றல், அன்றில், இத் திங்கள், கங்குல்,
திரைவீரை, தீங்குழல், சேவின்மணி
எழுந்தின்றென் மேற்பகை யாட வாடும்
எனைநீ நலிவதென் ! என்னே ! ’ என்னும் ;
‘அழுந்தா மகேந்திரத் தந்தரப்புட்
கரசுக் கரசே ! அமரர்தனிக்
கொழுந்தே! ’ என்னும் ; ‘குணக் குன்றே! ’ என்னும் ;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

6

‘வண்டார் குழல்உமை நங்கை முன்னே
மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவலவில் லாடி வேடர்
கடிநா யுடன்கை வளைந்தாய்! ’என்னும்;
‘பண்டாய மலரயன், தக்கன், எச்சன்,
பகலோன் தலை, பல், ப சுங்கண்
கொண்டாய்! ’ என் னும்; ‘குணக் குன்றே! ’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

7

‘கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
சிலையும், கணையும், கவணும் கைக்கொண்
டுடுப்பாய தோல் செருப் புச், சுரிகை
வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
‘நடப்பாய் ! மகேந்திர நாத ! நாதாந்தத்
தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
கொடுப்பாய் !’ என் னும் ; ‘குணக் குன்றே! ’ என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

8

சேவேந்து வெல்கொடி யானே ! ’என்னும்;
‘சிவனே! என் சேமத் துணையே !’ என்னும்:
‘மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
வளர்நாய கா ! இங்கே வாராய் ’ என்னும்;
பூவேந்தி மூவா யிரவர் தொழப்
புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே! என் னும், ‘குணக் குன்றே!’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

9

‘தரவார் புனம்சுனைத் தாழ் அருவி,
தடங்கல் லுறையும் மடங்கலமர்
மரவார் பொழில், எழில் வேங்கை எங்கும்
மழைசூழ் மகேந்திர மாமலைமேற்
சுரவா ! என் னும் ; ‘சுடர் நீள மடிமால்
அயன் இந் திரன்முதல் தேவர்க்கெல்லாம்
குரவா! ‘என் னும் ; ‘குணக் குன்றே’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

10

‘திருநீ றிடாஉருத் தீண்டேன்’ என்னும்;
திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டிவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்;
‘வருநீ ரருவி மகேந்திரப்பொன்
மலையில் மலைமக ளுக்கருளும்
குருநீ ’ என் னும்; ‘குணக் குன்றே’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

11

‘உற்றாய்! ’ என் னும்; உன்னை யன்றி மற்றொன்
றுணரேன் ’ என் னும்உணர் வுள்கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத் தும்பிதற்றிப்
பிணிதீர்வெண் ணீறிடப் பெற்றேன்;’ என்னும்;
‘சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில்
குற்றாய்!’ என் னும்; ‘குணக் குன்றே’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

12

‘வேறாக, உள்ளத் துவகைவிளைத்
தவனச் சிவலோக, வேத வென்றி
மாறாத மூவா யிரவரையும்,
எனையும் மகிழ்ந்தாள வல்லாய்! ’ என்னும்;
‘ஆறார் சிகர மகேந்திரத்துன்
அடியார் பிழைபொறுப் பாய்! அமுதோர்
கூறாய்! ’என் னும்; ‘குணக் குன்றே!’ என்னும் ;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
திருமாளிகைத் தேவர் - கோயில்
வ.எண் பாடல்
1

இணங்கிலா ஈசன் நேசத்
திருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
மணவடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில்
கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண்: வாய்
பேசாதப் பேய்க ளோடே.

2

எட்டுரு விரவி என்னை
ஆண்டவன், ஈண்டு சோதி
விட்டிலங் கலங்கல் தில்லை
வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத்
தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண் ; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

3

அருட்டிரட் செம்பொற் சோதி
யம்பலத் தாடு கின்ற
இருட்டிரட் கண்டத் தெம்மான்
இன்பருக் கன்பு செய்யா
அரட்டரை, அரட்டுப் பேசும்
அமுக்கரைக், கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

4

துணுக்கென அயனும் மாலும்
தொடர்வருஞ் சுடராய், இப்பால்
அணுக்கருக் கணிய செம்பொன்
அம்பலத் தாடிக் கல்லாச்
சிணுக்கரைச், செத்தற் கொத்தைச்
சிதம்பரைச், சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

5

திசைக்குமிக் குலவு கீர்த்தித்
தில்லைக்கூத் துகந்து தீய
நசிக்கவெண் ணீற தாடும்
நமர்களை நணுகா நாய்கள்
அசிக்கஆ ரியங்கள் ஓதும்
ஆதரைப், பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண்; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

6

‘ஆடர வாட ஆடும்
அம்பலத் தமுதே’ என்னும்
சேடர்சே வடிகள் சூடாத்
திருவிலா உருவி னாரைச்
சாடரைச், சாட்கை மோடச்
சழக்கரைப், பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண் ; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

7

உருக்கினன் உள்ளத் துள்ளே
ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப் பருளுந் தில்லைச்
செல்வன்பால் செல்லுஞ் செல்வில்
அருக்கரை, அள்ளல் வாய
கள்ளரை, அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண் ; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

8

செக்கர்ஒத் திரவி நூறா
யிரத்திரள் ஒப்பாந் தில்லைச்
சொக்கர்,அம் பலவர் என்னும்
சுருதியைக் கருத மாட்டா
எக்கரைக், குண்டாம் மிண்ட
எத்தரைப் புத்த ராதிப்
பொக்கரைக் காணா கண்; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

9

எச்சனைத் தலையைக் கொண்டு
செண்டடித் திடபம் ஏறி
அச்சங்கொண் டமரர் ஓட
நின்றஅம் பலவற் கல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக்
கயவரைப் பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண் ; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

10

விண்ணவர் மகுட கோடி
மிடைந்தொளி மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற
வாசலுக் காசை யில்லாத்
தெண்ணரைத், தெருள உள்ளத்
திருளரைத், திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

11

சிறப்புடை அடியார் தில்லைச்
செம்பொன்அம் பலவற் காளாம்
உறைப்புடை அடியார் கீழ்க்கீழ்
உறைப்பர்சே வடிநீ றாடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே
இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கருவூர்த் தேவர் - கோயில்
வ.எண் பாடல்
1

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
கறையணற் கட்செவிப் பகுவாய்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தங் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின்
மறைதவழ் வளரிளங் கமுகந்
திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

2

இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
ஏழையேற் கென்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை யென்றால்
அஞ்சலென் றருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலம்
செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

3

தாயினே ரிரங்குந் தலைவவோ என்றும்
தமியனேன் துணைவவோ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
நலம்புரி பரமர்தங் கோயில்
வாயினே ரரும்பு மணிமுருக் கலர
வளரிளஞ் சோலைமாந் தளிர்செந்
தீயினே ரரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

4

துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
நடம்புரி பரமர்தங் கோயில்
அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த
அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

5

கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே

6

நெஞ்சிட ரகல அகம்புகுந் தொடுங்கு
நிலைமையோ டிருள்கிழித் தெழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்றொளி துளும்பும்
விரிசடை யடிகள்தங் கோயில்
அஞ்சுடர்ப் புரிசை ஆழிசூழ் வட்டத்
தகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

7

பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரட் பளிங்கிற் றோன்றிய தோற்றந்
தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந் தோமகுண் டத்து
நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பு பெரும்பற்றப் புலியூர்த் (7)
திருவளர் திருச்சிற்றம் பலமே.

8

சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
திசைகளோ டண்டங்க ளனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக் கொடுங்கும்
புணர்ப்புடை அடிகள்தங் கோயில்
ஆர்த்துவந் தமரித் தமரரும் பிறரும்
அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

9

பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
பெரியதங் கருணையுங் காட்டி
அன்னைதேன் கலந்தின் னமுதுகந் தளித்தாங்
கருள்புரி பரமர்தங் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகங் குடைந்து
பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

10

உம்பர்நா டிம்பர் விளங்கியாங் கெங்கும்
ஒளிவளர் திருமணிச் சுடர்கான்
றெம்பிரான் நடஞ்செய் சூழலங் கெல்லாம்
இருட்பிழம் பறஎறி கோயில்
வம்புலாங் கோயில் கோபுரம் கூடம்
வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

11

இருந்திரைத் தரளப் பரவைசூ ழகலத்
தெண்ணிலங் கண்ணிலபுன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத் தறிவுறு கருவூர்த்
துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தங் கோயில்
பொழிலகங் குடைந்துவண் டுறங்கச்
செருந்திநின் றரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
வ.எண் பாடல்
1

முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேற்
றொத்து மிளிர்வனபோற் றூண்டு விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க மாயிற்றே.

2

கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்
அடியார் அமர்உலகம் ஆளநீ ஆளாதே
முடியாமுத் தீவேள்வி மூவா யிரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக்கூத் தாடினையே

3

அல்லியம் பூம்பழனத் தாமூர்நா வுக்கரசைச்
செல்லநெறி வகுத்த சேவகனே! தென்றில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா டரங்காகச்
செல்வ நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே

4

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டெமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் றன்னையும்ஆட்கொண்டருளி
அம்புந்து கண்ணாளுந் தானும்அணி தில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே.

5


களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிமுடி மூவா யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே.

6

அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே
புவலோக நெறிபடைத்தபுண்ணியங்கள் நண்ணியசீர்ச்
சிவலோக மாவதுவும் தில்லைச்சிற் றம்பலமே.

7

களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்
அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச்சிற் றம்பலமே சேர்ந்தனையே.

8

பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுகில்
நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாடோறும்
ஆடகத்தான் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே

9

உருவத் தெரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்
தரவிக்கும் அம்பலமே ஆடரங்க மாயிற்றே.

10

சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்றன்
ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக்
காடன் தமிழ்மாலை பத்துங் கருத்தறிந்து
பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கோயில்
வ.எண் பாடல்
1

மின்னார் உருவம் மேல்வி ளங்க
வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்றுவந்து
நின்றது போலும்என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்றில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
என்றுகொல் எய்துவதே !

2

ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
ஆகுதி வேட்டுயர்வார்
மூவா யிரவர் தங்க ளோடு
முன்னரங் கேறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
கூடுவ தென்றுகொலோ !

3

முத்தீ யாளர் நான்ம றையர்
மூவா யிரவர்நின்னோ
டொத்தே வாழுந் தன்மை யாளர்
ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடுந்
தென்றில்லை யம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண
அணைவதும் என்றுகொலோ !

4

மானைப் புரையும் மடமென் னோக்கி
மாமலை யாளோடும்
ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்
அம்புலி சூடும் அரன்
றேனைப் பாலைத் தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக்
கூடுவ தென்றுகொலோ!

5

களிவான் உலகிற் கங்கை நங்கை
காதலனே அருளென்
றொளிமால் முன்னே வரங்கி டக்க
உன்னடி யார்க்கருளும்
தெளிவா ரமுதே தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
உறுவதும் என்றுகொலோ!

6

பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப்
பதஞ்சலிக் காட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன்
மாமறை யோர்வணங்கச்
சீரால் மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடுகின்ற
காரார் மிடற்றெம் கண்ட னாரைக்
காண்பதும் என்றுகொலோ !

7

இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்
இருபது தோளும்இற
மலைதான்எடுத்த மற்றவற்கு
வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன் றெய்த வில்லி
செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொற் கையி னானைக்
காண்பதும் என்றுகொலோ.

8

வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும்
ஈழமுங் கொண்டதிறற்
செங்கோற் சோழன் கோழி வேந்தன்
செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி ஆடும்
அணிதில்லை யம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை
என்றுகொல் எய்துவதே.

9

நெடியா னோடு நான்மு கன்னும்
வானவரும் நெருங்கி
முடியால் முடிகள் மோதி உக்க
முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால் திரட்டும்
அணிதில்லை யம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக்
காண்பதும் என்றுகொலோ.

10

சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
பேரின்பம் எய்துவரே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கோயில்
வ.எண் பாடல்
1

துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆள்உகப்பார்?
கைச்சாலும் சிறுகதலி இலைவேம்புங் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீஅறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

2

தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும்
எம்போல்வார்க் கில்லாமை என்னளவே அறிந்தொழிந்
[தேன்
வம்பானார் பணிஉகத்தி வழிஅடியேன் தொழில் இறையும்
நம்பாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

3

பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத
திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும்
இசையானால் என்திறத்தும் எனையுடையாள் உரை
[யாடாள்
நசையானேன் றிருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

4

ஆயாத சமயங்கள் அவரவர்கண் முன்பென்னை
நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே
பேயாஇத் தொழும்பனைத்தம் பிரான்இகழும்
[என்பித்தாய்
நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே

5

நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும் தொழும்
[பனேன்
ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும் இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

6

படுமதமும் இடவயிறும் உடையகளி றுடையபிரான்
அடிஅறிய உணர்த்துவதும் அகத்தியனுக் கோத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக் கொன்றினுக்கு வையிடுதல்
நடுவிதுவோ ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே

7

மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகா தொழிதலும்நான் மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந் தலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

8

வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி
வீடாம்செய் குற்றேவல் எற்றேமற் றிதுபொய்யிற்
கூடாமே கைவந்து குறுகுமா றியானுன்னை
நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

9

வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத்
தோளாரக் கையாரத் துணையாரத் தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும் ? அடியேன்உன் தாள்சேரும்
நாளேதோ ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

10

பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித் தொண்டன்எடுத
தோவாதே அழைக்கின்றான் என்றருளின் நன்றுமிகத்
தேவே ! தென் திருத்தில்லைக் கூத்தாடீ ! நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்குத் தடுப்பரிதே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கோயில் - பாதாதிகேசம்
வ.எண் பாடல்
1

மையல் மாதொரு கூறன் மால்விடை
யேறி மான்மறி யேந்தி யதடங்
கையன் கார்புரை யுங்கறைக்
கண்டன் கனன்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
நீர்வயல் தில்லை யம்பலத்தான்
செய்யபாதம் வந்தென் சிந்தை
யுள்ளிடங் கொண்டனவே

2

சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்ததட
முந்த டம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி
யார்தில்லை யம்பலவன்

புலம்பி வானவர் தான வர்புகழ்ந்
தேத்த ஆடுபொற் கூத்த னார்கழற்
சிலம்பு கிங்கிணிஎன் சிந்தை
யுள்ளிடங் கொண்டனவே.

3

குருண்ட வார்குழற் கோதை மார்குயில்
போல்மி ழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லைதன்னுள் திரு
மல்குசிற் றம்பலவன்
மருண்டு மாலை யான்ம கள்தொழ
ஆடுங் கூத்தன் மணிபு ரைதரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை
யுள்ளிடங் கொண்டனவே

4

போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன்
மகள்உமை யச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ் தட
மல்குசிற் றம்பலவன்
சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து
வீக்கும் பொன்னூல் தன்னினொடு
தாழ்ந்த கச்சதன்றே தமி
யேனைத் தளர்வித்ததே.

5

பந்த பாச மெலாம்அ றப்பசு
பாச நீக்கிய பன்மு னிவரோ
டந்தணர் வணங்கும் அணி
யார்தில்லை யம்பலவன்
செந்த ழல்புரை மேனியுந் திகழுந்
திருவயிறும் வயிற்றினுள்
உந்தி வான்சுழிஎன் உள்ளத்
துள்ளிடங் கொண்டனவே.

6

குதிரை மாவொடு தேர்ப லகுவிந்
தீண்டுதில்லையுட் கொம்ப னாரொடு
மதுர வாய்மொழி யார்மகிழ்ந்
தேத்துசிற் றம்பலவன்
அதிர வார்கழல் வீசிநின்றழ
காநடம் பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம்என் னுள்ளத்
துள்ளிடங் கொண்டனவே.

7


படங்கொள் பாம்பணை யானொ டுபிர
மன்ப ரம்பர மாவரு ளென்று
தடங்கை யால்தொழ வுந்தழல்
ஆடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும்அத் தோள்க ளுந்தட
மார்பினிற் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்டமன்றே வினை
யேனை மெலிவித்தவே.

8


செய்ய கோடுடன் கமல மலர்சூழ்தரு
தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்ய நின்று மகிழ்ந்
தாடுசிற் றம்பலவன்
செய்ய வாயின் முறுவலும் திகழுந்திருக்
காதும் காதினின் மாத்தி ரைகளோ
டைய தோடுமன்றே அடி
யேனை ஆட் கொண்டனவே.

9

செற்று வன்புரந் தீயெழச்சிலை
கோலி ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறி
நீர்த்தில்லை யம்பலவன்
மற்றை நாட்ட மிரண்டொ டுமல
ருந்திரு முகமும் முகத்தினுள்
நெற்றி நாட்டமன்றே நெஞ்சு
ளேதிளைக் கின்றனவே

10


தொறுக்கள் வான்கம லம்ம லருழக்
கக்க ரும்புநற் சாறு பாய்தர
மறுக்க மாய்க்கயல்கள் மடை
பாய்தில்லை யம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த
அவ்வ கத்துமொட் டோடு மத்தமும்
பிறைக்கொள் சென்னியன்றே பிரியா
தென்னுள் நின்றனவே

11

தூவி நீரொடு பூவ வைதொழு
தேத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி யுள்நிறுத்தி யமர்ந்
தூறிய அன்பினராய்த்
தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக்
கூத்த னைத்திரு வாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடை
யான்அடி மேவுவரே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கோயில் - ‘‘பவளமால்வரை’’
வ.எண் பாடல்
1

பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
படரொளி தருதிரு நீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழற்றிருச் சடையுந்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுட்
டிருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
தழல்மெழு கொக்கின்றதே

2

ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும்
அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும்
நிறையழிந் திருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள்
திருநடம் வகையாலே
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை
படுந்தொறும் அலந்தேனே.

3

அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே!
அணிதில்லை நகராளீ!
சிலந்தி யைஅர சாள்கஎன் றருள்செய்த
தேவதே வீசனே
உலர்ந்த மார்க்கண்டிக் காகிஅக் காலனை
உயிர்செக உதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற
வந்தருள் செய்யாயே.

4

அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே!
அணிதில்லை நகராளீ!
மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப்
பிப்பது வழக்காமோ ?
திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடைச்
சேர்த்திஉச் செய்யாளுக்
குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை
ஒண்ணுதல் வைத்தோனே.

5

வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன்
மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார்
எழில்மறை யவற்றாலே
செய்த்த லைக்கம லம்மலர்ந் தோங்கிய
தில்லையம் பலத்தானைப்
பத்தியாற் சென்று கண்டிட என்மனம்
பதைபதைப் பொழியாதே.

6

தேய்ந்து மெய்வெளுத் தகம்வனைந் தரவினை
அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந் தென்றனை வலிசெய்து
கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள்
அம்பலத் தரன்ஆடல்
வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர்
மனத்தினை யுடையேற்கே

7

உடையும் பாய்புலித் தோலும்நல் லரவமும்
உண்பதும் பலிதேர்ந்து
விடைய தூர்வதும் மேவிடங் கொடுவரை
ஆகிலும் என்னெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயற்றில்லை
யம்பலத் தனலாடும்
உடைய கோவினை யன்றிமற் றாரையும்
உள்ளுவ தறியேனே.

8

அறிவும் மிக்கநன் னாணமும் நிறைமையும்
ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயொடு தந்தையும்
உடன்பிறந் தவரோடும்
பிரிய விட்டுனை யடைந்தனன் என்றுகொள்
பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்குங்கொண் டந்தணர் ஏத்தநன்
மாநட மகிழ்வானே.

9


வான நாடுடை மைந்தனே யோஎன்பன்;
வந்தருளாய் என்பன்;
பானெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப்
பால்வண்ண னேஎன்பன்;
தேன மர்பொழில் சூழ்தரு தில்லையுள்
திருநடம் புரிகின்ற
ஏன மாமணிப் பூண்அணி மார்பனே
எனக்கருள் புரியாயே.

10

புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள்
பூசுரர் பலர்போற்ற
எரிய தாடும்எம் ஈசனைக் காதலித்
தினைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன்
மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமன
தடியிணை பணிவாரே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கோயில் - ‘‘அல்லாய்ப் பகலாய்’’
வ.எண் பாடல்
1


அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய்
ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் ! கயிலை மலையாய் !
காண அருள்என்று
பல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள்
பரவ வெளிப்பட்டுச்
செல்வாய்மதிலின் றில்லைக் கருளித்
தேவன் ஆடுமே.

2

3

இளமென் முலையார் எழில்மைந் தரொடும்
ஏரார் அமளிமேல்
திளையும் மாடத் திருவார் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர மலைபோல்
வலக்கை கவித்துநின்
றளவில் பெருமை அமரர் போற்ற
அழகன் ஆடுமே.

4

சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும்
சாதி பலவுங்கொண்
டுந்தி யிழியும் நிவவின் கரைமேல்
உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுள்
சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம்
நாதன் ஆடுமே.

5

ஓமப் புகையும் அகிலின் புகையும்
உயர்ந்து முகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர்மல்கு
சிற்றம் பலந்தன்னுள்
வாமத் தொழிலார் எடுத்த பாதம்
மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித்
தேவன் ஆடுமே

6

குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை
குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை மல்கு
சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண் டபத்து
மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம்ஆட அனல்கை யேந்தி
அழகன் ஆடுமே.

7

சித்தர் தேவர் இயக்கர் முனிவர்
தேனார் பொழில்தில்லை
அத்தா அருளாய் அணிஅம் பலவா
என்றென் றவர்ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள்
முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ நட்டம்
குழகன் ஆடுமே.

8

அதிர்த்த அரக்கன் நெரிய விரலால்
அடர்த்தாய் அருளென்று
துதித்து மறையோர் வணங்குந் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல்
ஒளிர்மா மணியெங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப்
பரமன் ஆடுமே

9

மாலோ டயனும்அமரர் பதியும்
வந்து வணங்கிநின்
றால கண்டா அரனே யருளாய்
என்றென் றவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை மல்கு
சிற்றம் பலந்தன்னுள்
பாலா டும்முடிச் சடைகள் தாழப்
பரமன் ஆடுமே.

10

நெடிய சமணும் மறைசாக் கியரும்
நிரம்பாப் பல்கோடிச்
செடியுந் தவத்தோர் அடையாத் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
அடிக ளவரை ஆரூர் நம்பி
யவர்கள் இசைபாடக்
கொடியும் விடையும் உடைய கோலக்
குழகன் ஆடுமே.

11

வானோர் பணிய மண்ணோர் ஏத்த
மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு
சிற்றம் பலத்தானைத்
தூநான் மறையான் அமுத வாலி
சொன்ன தமிழ்மாலைப்
பானேர் பாடல் பத்தும் பாடப்
பாவம் நாசமே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கோயில் - ‘‘கோலமலர் நெடுங்கண்’’
வ.எண் பாடல்
1

கோல மலர்நெடுங்கட் கொவ்வை
வாய்க்கொடி யேரிடையீர்
பாலினை யின்னமுதைப் பர
மாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
தேலுடை எம்மிறையை
என்றுகொல் காண்பதுவே.

2

காண்பதி யானென்றுகொல் கதிர்
மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென் றறி
தற்கரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறை
யோன்மலர்ப் பாதங்களே.

3


கள்ளவிழ் தாமரைமேற் கண்
டயனொடு மால்பணிய
ஒள்ளெரி யின்னடுவே உரு
வாய்ப்பரந் தோங்கியசீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற ஒரு
வனையு ணர்வரிதே !

4

அரிவையோர் கூறுகந்தான் அழ
கன்எழில் மால்கரியின்
உரிவைநல் லுத்தரியம் உகந்
தான்உம்ப ரார்தம்பிரான்
புரிபவர்க் கின்னருள்செய் புலி
யூர்த்திருச் சிற்றம்பலத்
தெரிமகிழ்ந் தாடுகின்ற எம்
பிரான்என் இறையவனே.

5

இறைவனை என்கதியை என்னு
ளேயுயிர்ப் பாகிநின்ற
மறைவனை மண்ணும்விண்ணும் மலி
வான்சுட ராய்மலிந்த
சிறையணி வண்டறையுந் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம்இறையை நினைத்
தேன்இனிப் போக்குவனே

6


நினைத்தேன் இனிப்போக்குவனோ நிம
லத்திரளை நினைப்பார்
மனத்தினு ளேயிருந்த மணி
யைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக் கன
கங்கதிர் ஒண்பவளம்
சினத்தொடு வந்தெறியுந் தில்லை
மாநகர்க் கூத்தனையே

7


கூத்தனை வானவர்தங் கொழுந்
தைக்கொழுந் தாய்எழுந்த
மூத்தனை மூவுருவின் முத
லைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும் அந்
தணர்தில்லை யம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற எம்
பிரான்அடி சேர்வன்கொலோ!

8

சேர்வன்கொ லோஅன்னைமீர் திக
ழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங் கொளத்தழுவி அணி
நீறென் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவுந் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
தேர்வங்கை மான்மறியன் எம்
பிரான்போல் நேசனையே.

9

நேசமு டையவர்கள் நெஞ்சு
ளேயிடங் கொண்டிருந்த
காய்சின மால்விடையூர் கண்
ணுதலைக் காமருசீர்த்
நேசமு டையவர்கள் நெஞ்சு
ளேயிடங் கொண்டிருந்த
காய்சின மால்விடையூர் கண்
ணுதலைக் காமருசீர்த்

10

இறைவனை ஏத்துகின்ற இளை
யாள்மொழி யின்தமிழால்
மறைவல நாவலர்கள் மகிழ்ந்
தேத்துசிற் றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின் அணி
ஆலைகள் சூழ்மயிலை
மறைவல வாலிசொல்லை மகிழ்ந்
தேத்துக வான்எளிதே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கோயில் - ‘‘வாரணி நறுமலர்’’
வ.எண் பாடல்
1


வாரணி நறுமலர் வண்டு கெண்டு
பஞ்சமம் செண்பக மாலை மாலை
வாரணி வளமுலை மெலியும் வண்ணம்
வந்துவந் திவைநம்மை மயக்கு மாலோ!
சீரணி மணிதிகழ் மாட மோங்கு
தில்லையம் பலத்தெங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந் தஞ்சல் என்பார்
ஆவியின் பரமென்றன் ஆதரவே.

2

ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
அருவினை யேனைவிட் டம்ம அம்ம
பாவிவன் மனம்இது பைய வேபோய்ப்
பனிமதிச் சடையரன் பாலதாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
நெஞ்சமும் தஞ்சமி லாமை யாலே
ஆவியின் வருத்தமி தார்அறிவார்
அம்பலத் தருநடம் ஆடு வானே

3

அம்பலத் தருநட மாடவேயும்
யாதுகொல் விளைவதென் றஞ்சி நெஞ்சம்
உம்பர்கள் வன்பழி யாளர் முன்னே
ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்
வன்பல படையுடைப் பூதஞ் சூழ
வானவர் கணங்களை மாற்றி யாங்கே
என்பெரும் பயலைமை தீரும் வண்ணம்
எழுந்தரு ளாய்எங்கள் வீதி யூடே.

4

எழுந்தருளாய் எங்கள் வீதி யூடே
ஏதமில் முனிவரோ டெழுந்த ஞானக்
கொழுந்தது வாகிய கூத்த னேநின்
குழையணி காதினின் மாத்தி ரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும்
செங்கனி வாயும்என் சிந்தை வௌவ
அழுந்தும்என் ஆருயிர்க் கென்செய் கேனோ
அரும்புனல் அலமரும் சடையினானே

5

அரும்புனல் அலமரும் சடையினானை
அமரர்கள் அடிபணிந் தரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
பேசவும் நையும்என் பேதை நெஞ்சம்
கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
காரிகை யார்முன்பென் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையி னாலே
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.

6

தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத்
தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லிய தாகிய எழில்கொள் சோதி
என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்;
பல்லையார் பசுந்தலை யோடிடறிப்
பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநட மாடில் எங்கள்
ஆருயிர் காவல் இங் கரிது தானே.

7

ஆருயிர் காவல்இங் கருமை யாலே
அந்தணர் மதலைநின் னடிபணியக்
கூர்நுனை வேற்படைக் கூற்றஞ்சாயக்
குரைகழல் பணிகொள மலைந்ததென்றால்
ஆரினி அமரர்கள் குறைவி லாதார்
அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரேஎங்கள் தில்லை வாணா
சேயிழை யார்க்கினி வாழ்வரிதே

8

சேயிழை யார்க்கினி வாழ்வரிது
திருச்சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை யென்ற டைந்தேன்
தனிமையை நினைகிலை சங்க ராஉன்
பாயிரும் புலியத ளின்னு டையும்
பையமே லெடுத்தபொற் பாத முங்கண்
டேயிவள் இழந்தது சங்கம் ஆவா
எங்களை ஆளுடை ஈசனேயோ!

9


எங்களை ஆளுடை ஈசனேயோ !
இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுக நோக்கி நோக்கிப்
பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே
திருச்சிற்றம் பலமுட னேபு குந்து
அங்குன பணிபல செய்து நாளும்
அருள்பெறின் அகலிடத் திருக்க லாமே.

10

அருள் பெறின் அகலிடத் திருக்க லாமென்
றமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடை யாரின் மிக்கார்
ஏத்துகின் றார்இன்னம் எங்கள் கூத்தை
மருள்படு மழலைமென் மொழியு மையாள்
கணவனை வல்வினை யாட்டி யேன்நான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா !
ஆசையை அளவறுத் தார்இங் காரே.

11

ஆசையை அளவறுத் தார்இங் காரே
அம்பலத் தருநடம் ஆடு வானை
வாசநன் மலரணி குழல்மடவார்
வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்
மாசிலா மறைபல ஓது நாவன்
வண்புரு டோத்தமன் கண்டு ரைத்த
வாசக மலர்கள்கொண் டேத்த வல்லார்
மலைமகள் கணவனை யணைவர் தாமே

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கோயில் -‘‘வானவர்கள் வேண்ட’’
வ.எண் பாடல்
1


வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ
தேனல்வரி வண்டறையுந் தில்லைச்சிற் றம்பலவர்
நானமரோ என்னாதே நாடகமே யாடுவரே.

2

ஆடிவரும் காரரவும் ஐம்மதியும் பைங்கொன்றை
சூடிவரு மாகண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்
தேடிஇமை யோர்பரவும் தில்லைச்சிற் றம்பலவர்
ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே.

3

ஒட்டா வகைஅவுணர் முப்புரங்கள் ஓர் அம்பால்
பட்டாங் கழல்விழுங்க எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறைஓவாத் தில்லைச்சிற் றம்பலவர்
கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே

4

ஆரே இவைபடுவார்? ஐயம் கொளவந்து
போரேடி என்று புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத் தில்லைச்சிற் றம்பலவர்
தீராநோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே.

5

காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத் தில்லைச்சிற் றம்பலவர்
பூணார்வன முலைமேற் பூவம்பாற் காமவேள்
ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே

6

ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால் ;
தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்:
தேய்மதியஞ் சூடிய தில்லைச்சிற்றம்பலவர்
வாயின கேட்டறிவார் வையகத்தா ராவாரே

7

ஆவா இவர்தம் திருவடிகொண் டந்தகன்றன்
மூவா உடல்அவியக் கொன்றுகந்த முக்கண்ணர்
தேவாம் மறைபயிலும் தில்லைச்சிற் றம்பலவர்
கோவா இனவளைகள் கொள்வாரோ என்னையே

8

என்னை வலிவார்ஆர் என்ற இலங்கையர்கோன்
மன்னு முடிகள் நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித் தில்லைச்சிற்றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார்இம் முத்தரே.

9

முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற் றம்பலவர
கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே.

10


நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம்என்று
மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்
சேக்கா தலித்தேறுந் தில்லைச்சிற் றம்பலவர்
ஊர்க்கேவந் தென்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்!

11


ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் றன்னைப் புருடோத் தமன்சொன்ன
பண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங் கினிதா இருப்பாரே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கோயில்
வ.எண் பாடல்
1

சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்
சால நாள்அயற் சார்வதி னால்இவள்
வேலை யார்விட முண்டுகந் தீரென்று
மால தாகுமென் வாணுதலே.

2


வாணுதற் கொடி மாலது வாய்மிக
நாண மற்றனள் நான்அறி யேன்இனிச்
சேணுதற் பொலி தில்லையு ளீர்உமைக்
காணில் எய்ப்பிலள் காரிகையே

3

காரி கைக்கரு ளீர்கரு மால்கரி
ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு
சீரியல் தில்லை யாய்சிவ னேஎன்று
வேரி நற்குழ லாள்இவள் விம்முமே.

4

விம்மி விம்மியே வெய்துயிர்த் தாளெனா
உம்மை யேநினைந் தேத்தும் ;ஒன் றாகிலள்
செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள்
அம்மல் ஓதி அயர்வுறுமே.

5


அயர்வுற் றஞ்சலி கூப்பிஅந் தோஎனை
உயஉன் கொன்றையந் தார்அரு ளாய்எனும்;
செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண்
மயலுற் றாள்என்றன் மாதிவளே.

6

மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பனென்
றோதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும்;
சேதித் தீச்சிரம் நான்முக னைத்தில்லை
வாதித் தீர்என்ம டக்கொடியையே

7

கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம்
பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்
இடியச் செஞ்சிலை கால்வளைத் தீர்என்று
முடியும் நீர்செய்த மூச்சறவே.

8

அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய
மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும்
சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும்
பிறைகு லாம்நுதற் பெய்வளையே.

9


அன்ற ருக்கனைப் பல்லிறுத் தானையைக்
கொன்று காலனைக் கோள்இழைத் தீர்எனும்
தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள்
ஒன்று மாகிலள் உம்பொருட்டே.

10

ஏயு மாறெழிற் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம் எய்தி யிருப்பரே.

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
கோயில்
வ.எண் பாடல்
1


மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.

2

மிண்டு மனத்தவர் போமின்கள்;
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்;
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள் அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே

3

நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட
நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந்
திறங்களு மேசிந்தித்
தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும்
அமிர்தினுக் காலநிழற்
பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே

4

சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர்,
சில்லாண் டிற்சிதை யும்சில தேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்டகன கத்திரள் மேரு
விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

5

புரந்தரன் மால்அயன் பூசலிட் டோலமிட்
டின்னம் புகலரிதாய்
இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக்
கென்செய வல்லம்என்றும்
கரந்துங் கரவாத கற்பக னாகிக்
கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே
பல்லாண்டு கூறுதுமே.

6


சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்
எங்குந் திசைதிசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா
மாய்நின்று கூத்தாடும்
ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை
அப்பனை ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

7

சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே

8


சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்
கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று
புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறிதந்து
வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

9


பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

10

தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ்
வண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்
போனக மும்அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே

11

குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே

12


ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே.

13


எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு
தாம்மெம் பிரான்என்றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார்
அடிநாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்
தாண்டுகொண் டாருயிர்மேற்
பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று
பல்லாண்டு கூறுதுமே.