பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஇரும்பைமாகாளம்
வ.எண் பாடல்
1

மண்டு கங்கை சடையில் கரந்தும், மதி சூடி, மான்
கொண்ட கையான், புரம் மூன்று எரித்த குழகன்(ன்), இடம்
எண்திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள்,
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே.

2

வேதவித்தாய், வெள்ளை நீறு பூசி, வினை ஆயின
கோது வித்தா, நீறு எழக் கொடி மா மதில் ஆயின,
ஏத வித்து ஆயின தீர்க்கும்(ம்) இடம்(ம்) இரும்பைதனுள்,
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே.

3

வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான்,
எந்தைபெம்மான் இடம் எழில் கொள் சோலை
இரும்பைதனுள்
கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில்
மந்தி ஏறிக் கொணர்ந்து உண்டு உகள்கின்ற மாகாளமே.

4

நஞ்சு கண்டத்து அடக்கி(ந்), நடுங்கும் மலையான்மகள்
அஞ்ச, வேழம் உரித்த பெருமான் அமரும்(ம்) இடம்
எஞ்சல் இல்லாப் புகழ் போய் விளங்கும்(ம்) இரும்பைதனுள்,
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே.

5

பூசும் மாசு இல் பொடியான், விடையான், பொருப்பன்மகள்
கூச ஆனை உரித்த பெருமான், குறைவெண்மதி
ஈசன், எங்கள்(ள்) இறைவன், இடம்போல் இரும்பைதனுள்,
மாசு இலோர் கள்மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே.

6

குறைவது ஆய குளிர்திங்கள் சூடிக் குனித்தான், வினை
பறைவது ஆக்கும் பரமன், பகவன், பரந்த சடை
இறைவன், எங்கள் பெருமான், இடம்போல் இரும்பைதனுள்,
மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.

7

பொங்கு செங்கண்(ண்) அரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்வு இடம்
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்,
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே.

8

நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான்,
அட்டமூர்த்தி, அழல் போல் உருவன்(ன்), அழகு ஆகவே
இட்டம் ஆக இருக்கும்(ம்) இடம்போல் இரும்பைதனுள்,
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே.

9

அட்ட காலன் தனை வவ்வினான், அவ் அரக்கன் முடி
எட்டும் மற்றும் இருபத்திரண்டும்(ம்) இற ஊன்றினான்,
இட்டம் ஆக இருப்பான் அவன்போல் இரும்பைதனுள்,
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே.

10

அரவம் ஆர்த்து, அன்று, அனல் அங்கை ஏந்தி, அடியும்
முடி
பிரமன் மாலும்(ம்) அறியாமை நின்ற பெரியோன் இடம்
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும்(ம்)
இரும்பைதனுள்,
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.

11

எந்தை பெம்மான் இடம், எழில் கொள் சோலை
இரும்பைதனுள்
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில்,
அந்தம் இல்லா அனல் ஆடுவானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே.