பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஅனேகதங்காவதம்
வ.எண் பாடல்
1

நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாமு
சூடல் மேவு, மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே!

2

சூலம் உண்டு, மழு உண்டு, அவர் தொல் படை; சூழ் கடல்
ஆலம் உண்ட பெருமான்தன் அனேகதங்காவதம்,
நீலம் உண்ட தடங்கண் உமை பாகம் நிலாயது ஓர்
கோலம் உண்டு; அளவு இல்லை, குலாவிய கொள்கையே!

3

செம்பின் ஆரும் மதில்மூன்று எரிய, சின வாயது ஓர்
அம்பினால் எய்துஅருள் வில்லி, அனேகதங்காவதம்
கொம்பின் நேர் இடையாளொடும் கூடிக் கொல் ஏறு உடை
நம்பன், நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே?

4

தந்தத்திந்தத்தடம் என்ற அருவித்திரள் பாய்ந்து போய்ச்
சிந்த வெந்த கதிரோனொடு மாசு அறு திங்கள் ஆர்
அந்தம் இல்ல அளவு இல்ல, அனேகதங்காவதம்
எந்தை வெந்தபொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே.

5

பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமைப் பெயர்ந்து
போய்
உறையும் கோயில், பசும்பொன் அணியார், அசும்பு ஆர்
புனல்
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம்
இறை, எம் ஈசன், எம்மான், இடம் ஆக உகந்ததே.

6

தேனை ஏறு நறுமாமலர் கொண்டு அடி சேர்த்துவீர்!
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம்
வானை ஏறும் நெறி சென்று உணரும்தனை வல்லிரேல்
ஆன்நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே.

7

வெருவி வேழம் இரிய, கதிர் முத்தொடு வெண்பளிங்கு
உருவி வீழ, வயிரம் கொழியா, அகில் உந்தி, வெள்
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம்
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே.

8

ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன்
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான்,
ஆரம் பாம்புஅது அணிவான்தன், அனேகதங்காவதம்
வாரம் ஆகி நினைவார் வினைஆயின மாயுமே.

9

கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயம் ஆய்
எண்ணும் வண்ணம், அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல்
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணம் உடையார் வினைஆயின நாசமே.

10

மா பதம் அறியாதவர் சாவகர்சாக்கியர்,
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம்
ஆ பதம் அறிவீர் உளிர் ஆகில், அனேகதங்
காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் ருமமே.

11

தொல்லைஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள்முன்
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம்
சொல்ல, நல்ல அடையும்; அடையா, சுடுதுன்பமே.