பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவாட்போக்கி
வ.எண் பாடல்
1

காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
பாலகர், விருத்தர், பழையார் எனார்;
ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார்
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.

2

விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்தபோது பயன் இலை-பாவிகாள்!
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை
எடுத்தும், ஏத்தியும், இன்புறுமின்களே!

3

வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர்
உந்தி, ஓடி, நரகத்து இடாமுனம்,-
அந்தியின்(ன்) ஒளி தங்கும் வாட்போக்கியார்-
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே.

4

கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து, தெளிவு உறல் ஆகுமே?
ஆற்றவும் அருள் செய்யும் வாட்போக்கிபால்
ஏற்றுமின், விளக்கை, இருள் நீங்கவே!

5

மாறு கொண்டு வளைத்து எழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே,
ஆறு செஞ்சடை வைத்த வாட்போக்கியார்க்கு
ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.

6

கானம் ஓடிக் கடிது எழு தூதுவர்
தானமோடு தலை பிடியாமுனம்,
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார்,
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே.

7

பார்த்துப் பாசம் பிடித்து எழு தூதுவர்
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே,
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார்
கீர்த்திமைகள் கிளர்ந்து உரைமின்களே!

8

நாடி வந்து, நமன் தமர் நல் இருள்
கூடி வந்து, குமைப்பதன் முன்னமே,
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை
வாடி ஏத்த, நம் வாட்டம் தவிருமே.

9

கட்டு அறுத்துக் கடிது எழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே,
அட்டமா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு
இட்டம் ஆகி, இணை அடி ஏத்துமே!

10

இரக்கம் முன் அறியாது எழு தூதுவர்
பரக்கழித்து, அவர் பற்றுதல் முன்னமே,
அரக்கனுக்கு அருள் செய்த வாட்போக்கியார்
கரப்பதும் கரப்பார், அவர் தங்கட்கே.