பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான், பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் அமர்ந்தான், மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில் உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே.
பாய்ந்தவன் காலனை முன், பணைத்தோளி ஓர்பாகம் அதா ஏய்ந்தவன், எண் இறந்த(வ்) இமையோர்கள் தொழுது இறைஞ்ச வாய்ந்தவன், முப்புரங்கள் எரி செய்தவன்-வக்கரையில் தேய்ந்த இளவெண்பிறை சேர் சடையான்; அடி செப்புதுமே.
“சந்திரசேகரனே, அருளாய்!” என்று, தண் விசும்பில் இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச, அந்தர மூ எயிலும்(ம்) அனல் ஆய் விழ, ஓர் அம்பினால், மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே.
நெய் அணி சூலமோடு நிறை வெண்மழுவும்(ம்) அரவும் கை அணி கொள்கையினான்; கனல் மேவிய ஆடலினான்; மெய் அணி வெண்பொடியான், விரி கோவண ஆடையின், மேல்; மை அணி மா மிடற்றான்; உறையும்(ம்) இடம் வக்கரையே.
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு, உகந்து கூன் இளவெண்பிறையும் குளிர் மத்தமும் சூடி, நல்ல மான் அன மென் விழியாளொடும் வக்கரை மேவியவன், தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும் நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதி சூடி, நல்ல வார் மலி மென் முலையாளொடும் வக்கரை மேவியவன், பார் மலி வெண்தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே.
கான் அணவும் மறிமான் ஒரு கையது, ஒர் கை மழுவாள தேன் அணவும் குழலாள் உமை சேர் திருமேனியினான்- வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்; ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே
இலங்கையர் மன்னன் ஆகி எழில் பெற்ற இராவணனைக் கலங்க, ஒர் கால்விரலால், கதிர் போல் முடிபத்து அலற, நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும், நன்கு அளித்த வலம் கெழு மூ இலைவேல் உடையான் இடம் வக்கரையே.
காமனை ஈடு அழித்திட்டு, அவன் காதலி சென்று இரப்ப, “சேமமே, உன் தனக்கு!” என்று அருள் செய்தவன்; தேவர்பிரான்; சாம வெண் தாமரை மேல் அயனும், தரணி அளந்த வாமனனும்(ம்), அறியா வகையான்; இடம் வக்கரையே.
மூடிய சீவரத்தர், முதிர் பிண்டியர், என்று இவர்கள் தேடிய, தேவர் தம்மால் இறைஞ்சப்படும் தேவர் பிரான்; பாடிய நால்மறையன்; பலிக்கு என்று பல் வீதி தொறும் வாடிய வெண்தலை கொண்டு உழல்வான்; இடம் வக்கரையே.
தண்புனலும்(ம்) அரவும் சடைமேல் உடையான், பிறை தோய் வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன்(ன்), உறை வக்கரையை, சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன பண் புனை பாடல் வல்லார் அவர் தம் வினை பற்று அறுமே.