பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஒற்றியூர்
வ.எண் பாடல்
1

வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம்
சேர் சடை மேல் மதியம் சூடி,
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று, திசை சேர
நடம் ஆடி, சிவலோக(ன்)னார்
உண்டார் நஞ்சு, உலகுக்கு ஓர் உறுதி வேண்டி;
ஒற்றியூர் மேய ஒளி வண்ண(ன்)னார்;
கண்டேன், நான் கனவு அகத்தில்; கண்டேற்கு என்
தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்ட(வ்)வே.

2

ஆகத்து ஓர் பாம்பு அசைத்து, வெள் ஏறு ஏறி,
அணி கங்கை செஞ்சடை மேல் ஆர்க்கச் சூடி,
பாகத்து ஓர் பெண் உடையார்; ஆணும் ஆவார்;
பசு ஏறி உழி தரும் எம் பரமயோகி;
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக் கனலா
எரி விழித்த கண் மூன்றி(ன்)னார்
ஓமத்தால் நால் மறைகள் ஓதல் ஓவா ஒளி
திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே.

3

வெள்ளத்தைச் செஞ்சடை மேல் விரும்பி வைத்தீர்!
வெண்மதியும் பாம்பும் உடனே வைத்தீர்!
கள்ளத்தை மனத்து அகத்தே கரந்து வைத்தீர்!
கண்டார்க்குப் பொல்லாது கண்டீர்! எல்லே
கொள்ளத்தான் இசை பாடிப் பலியும் கொள்ளீர்!
கோள் அரவும், குளிர்மதியும், கொடியும், காட்டி
உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி
திகழும் ஒற்றியூர் உடைய கோவே!.

4

நரை ஆர்ந்த விடை ஏறி, நீறு பூசி, நாகம் கச்சு அரைக்கு
ஆர்த்து, ஓர் தலை கை ஏந்தி,
உரையா வந்து, இல் புகுந்து, பலி தான் வேண்ட, “எம்
அடிகள்! உம் ஊர்தான் ஏதோ?” என்ன,
“விரையாதே கேட்டியேல், வேல்கண் நல்லாய்! விடும்
கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றும்,
திரை மோதக் கரை ஏறிச் சங்கம் ஊரும், திரு
ஒற்றியூர்” என்றார்; தீய ஆறே!.

5

மத்தமாகளியானை உரிவை போர்த்து, வானகத்தார் தானகத்தார்
ஆகி நின்று,
பித்தர் தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி, பேதையரை
அச்சுறுத்தி, பெயரக் கண்டு,
பத்தர்கள் தாம் பலர் உடனே கூடிப் பாடி, “பயின்று இருக்கும்
ஊர் ஏதோ? பணியீர்!” என்ன,
“ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும்
ஒற்றியூர்” என்கின்றாரே.

6

கடிய விடை ஏறி, காளகண்டர் கலையோடு மழுவாள் ஓர்
கையில் ஏந்தி,
இடிய பலி கொள்ளார்; போவார் அல்லர்; “எல்லாம் தான்
இவ் அடிகள் யார்?” என்பாரே;
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்
கண்டோம்; மயிலாப்புள்ளே
செடி படு வெண்தலை ஒன்று ஏந்தி வந்து, திரு ஒற்றியூர்
புக்கார், தீய ஆறே!.

7

வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார், வாழ்த்துவார்,
வந்து நிற்பார்,
“எல்லை எம்பெருமானைக் காணோம்” என்ன, எவ் ஆற்றால்
எவ்வகையால் காணமாட்டார்;
நல்லார்கள் நால் மறையோர் கூடி நேடி, “நாம் இருக்கும் ஊர்
பணியீர், அடிகேள்!” என்ன,
“ஒல்லை தான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர்”
என்கின்றாரே.

8

நிலைப்பாடே நான் கண்டது; ஏடீ, கேளாய்! நெருநலை நன்பகல
இங்கு ஓர் அடிகள் வந்து,
கலைப்பாடும் கண்மலரும் கலக்க, நோக்கி, கலந்து பலி இடுவேன்;
எங்கும் காணேன்;
சலப்பாடே; இனி ஒரு நாள் காண்பேன் ஆகில், தன் ஆகத்து
என் ஆகம் ஒடுங்கும் வண்ணம்,
உலைப்பாடே படத் தழுவி, போகல் ஒட்டேன்-ஒற்றியூர் உறைந்து
இங்கே திரிவானையே.

9

மண் அல்லை; விண் அல்லை; வலயம் அல்லை; மலை அல்லை;
கடல் அல்லை; வாயு அல்லை;
எண் அல்லை; எழுத்து அல்லை; எரியும் அல்லை; இரவு
அல்லை; பகல் அல்லை; யாவும் அல்லை;
பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை; பிறிது
அல்லை; ஆனாயும், பெரியாய்! நீயே;
உள்-நல்லை, நல்லார்க்கு, தீயை அல்லை உணர்வு அரிய
ஒற்றியூர் உடைய கோவே!.

10

மரு உற்ற மலர்க் குழலி மடவாள் அஞ்ச, மலை துளங்கத்
திசை நடுங்கச் செறுத்து நோக்கி,
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள, திருவடியின்
விரல் ஒன்றால் அலற ஊன்றி,
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடிக் காண ஓங்கின அவ் ஒள்
அழலார் இங்கே வந்து,
“திரு ஒற்றியூர், நம் ஊர்” என்று போனார்; செறி வளைகள்
ஒன்று ஒன்றாய்ச் சென்ற ஆறே!.