பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆலங்காடு
வ.எண் பாடல்
1

வெள்ள நீர்ச் சடையர் போலும்; விரும்புவார்க்கு எளியர் போலும்;
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும்;
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும்-
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே.

2

செந்தழல் உருவர் போலும்; சின விடை உடையர் போலும்;
வெந்த வெண் நீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும்;
மந்தம் ஆம் பொழில் பழ(ந்)னை மல்கிய வள்ளல் போலும்;
அந்தம் இல் அடிகள் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.

3

கண்ணினால் காமவேளைக் கனல் எழ விழிப்பர் போலும்;
எண் இலார் புரங்கள் மூன்றும் எரியுணச் சிரிப்பர் போலும்;
பண்ணின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேய
அண்ணலார்-எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே.

4

காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்;
தூறு இடு சுடலை தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும்;
கூறு இடும் உருவர் போலும்; குளிர் பொழில் பழனை மேய
ஆறு இடு சடையர் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.

5

பார்த்தனோடு அமர் பொரூது பத்திமை காண்பர் போலும்;
கூர்த்த வாய் அம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்;
பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும்-
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே.

6

வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும்;
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும்;
பாட்டின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேயார்
ஆட்டினார், அரவம் தன்னை;-ஆலங்காட்டு அடிகளாரே.

7

தாள் உடைச் செங்கம(ல்)லத் தடங் கொள் சேவடியர் போலும்;
நாள் உடைக் காலன் வீழ உதை செய்த நம்பர் போலும்;
கோள் உடைப் பிறவி தீர்ப்பார்; குளிர் பொழில் பழனை மேய
ஆள் உடை அண்ணல் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.

8

கூடினார், உமை தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு
சூடினார், கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்;
பாடினார், சாம வேதம்; பைம்பொழில் பழனை மேயார்
ஆடினார், காளி காண; ஆலங்காட்டு அடிகளாரே.

9

வெற்று அரைச் சமணரோடு விலை உடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும்;
பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும்;
அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே.

10

மத்தனாய் மலை எடுத்த அரக்கனைக் கரத்தோடு ஒல்க
ஒத்தினார், திருவிர(ல்)லால் ஊன்றியிட்டு அருள்வர் போலும்;
பத்தர் தம் பாவம் தீர்க்கும் பைம்பொழில் பழனை மேய
அத்தனார்; நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே.