பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே?
அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர், சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ- கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன், பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே!
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர், எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர் சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம், திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?- தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம் நான் நிலாவி இருப்பன், என் நாதனை; தேன் நிலாவிய சிற்றம்பலவனார் வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.
சிட்டர், வானவர், சென்று வரம் கொளும் சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலத்து உறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச் சிட்டர்பால் அணுகான், செறு காலனே.
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர், திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார், விருத்தனார், இளையார், விடம் உண்ட எம் அருத்தனார், அடியாரை அறிவரே.
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா கண் நிறைந்த கடிபொழில் அம்பலத் துள்-நிறைந்து நின்று ஆடும், ஒருவனே.
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம் வல்லை வட்டம் மதில் மூன்று உடன்மாய்த்தவன் தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை ஒல்லை, வட்டம் கடந்து, ஓடுதல் உண்மையே.
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர் தேடியும், திரிந்தும், காண வல்லரோ- மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து- ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே?
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன், சதுரன், சிற்றம்பலவன், திருமலை அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே!
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன், நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன், அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனை, தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?
தீர்த்தனை, சிவனை, சிவலோகனை, மூர்த்தியை, முதல் ஆய ஒருவனை, பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக் கூத்தனை, கொடியேன் மறந்து உய்வனோ?
கட்டும் பாம்பும், கபாலம், கை மான்மறி, இட்டம் ஆய் இடுகாட்டு எரி ஆடுவான், சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை, எள்-தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட நீண் உலகுஎலாம் ஆளக் கொடுத்த என் ஆணியை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற தாணுவை, தமியேன் மறந்து உய்வனோ?
பித்தனை, பெருங்காடு அரங்கா உடை முத்தனை, முளைவெண் மதி சூடியை, சித்தனை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற அத்தனை, அடியேன் மறந்து உய்வனோ?
நீதியை, நிறைவை, மறைநான்கு உடன் ஓதியை, ஒருவர்க்கும் அறிவு ஒணாச் சோதியை, சுடர்ச் செம்பொனின் அம்பலத்து ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ?
மை கொள் கண்டன், எண் தோளன், முக்கண்ணினன், பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார், செய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள் ஐயனை, அடியேன் மறந்து உய்வனோ?
முழுதும் வான் உலகத்து உள தேவர்கள் தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை, இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ?
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை, வார் உலாம் முலை மங்கை மணாளனை, தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை, ஆர்கிலா அமுதை, மறந்து உய்வனோ?
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம் வீங்கி விம்முற ஊன்றிய தாளினான், தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை, பாங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ?