கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த கோன் காண்,
குவலயன் காண், குவலயத்தின் நீர் ஆனான் காண்,
காற்று அவன் காண், கனல் அவன் காண், கலிக்கும்
மின் காண், கன பவளச்செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன் காண், நிலா ஊரும் சென்னியான் காண்,
நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர்சடை மேல்
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.